பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலருடன் சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. “நீங்கள் அதிக மதிப்பெண் எடுத்தால், அதற்கு யாரெல்லாம் காரணம்?” எனக் கேட்டேன்.
“பெற்றோர், குடும்பம், ஆசிரியர்கள், சில எதிரிகள்...” ஒப்புக்கொண்டு தொடர்ந்தேன்.
சராசரியாக ஒருவரிடம் “உன் அப்பா, அம்மாவின் பிறந்தநாள் தெரியுமா?”; “நீ இருக்கும் வீடு எத்தனை சதுரடி கொண்டது?” என்றெல்லாம் கேட்டால் பதில் சொல்பவர்களைவிட, ஒருநாள் போட்டியில் “ரோகித் ஷர்மாவின் அதிக ரன் எத்தனை?”; “டெஸ்ட் மேட்ச்சில் அதிக விக்கெட் எடுத்தது யார்?” என்பது போன்ற கிரிக்கெட் கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.
காரணம், நாம் கிரிக்கெட்டை மதமாகக் கொண்டிருப்பதால், அந்த வழிபாட்டுக்கு உரிய புள்ளிவிவரங்கள், தகவல்கள் போன்ற நாமாவளிகளை மனப்பாடம் செய்து வைத்திருப்போம். ஆனால், எப்பேர்ப்பட்ட விவரக்காரர்களாலும் பதில் சொல்ல முடியாத கேள்விகள் இதோ:
“டெண்டுல்கரின் ஐம்பதாவது சதம் எடுக்கப்பட்ட போது, அவரது எதிரில் இருந்த ஆட்டக்காரர் யார்?”
“மெக்கலம் தன் கடைசி டெஸ்ட்டில் சாதனை சதம் அடித்தபோது, மறு முனையில் இருந்த ஆட்டக்காரரின் பெயர் என்ன?”
வாழ்வியல் கேள்விகள் பல
கிரிக்கெட் பக்தர்கள் பதில் தெரியாமல் வெட்கப்பட வேண்டியதில்லை. ஒரு வசதிக்காகத்தான் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தேனே தவிர, அவரவருக்குப் பிடித்தமான எந்தத் துறையிலிருந்தும் இது போன்ற கேள்விகள் கேட்டு மடக்கலாம். ஏனென்றால், இது கிரிக்கெட்டையும், பிற துறைகளையும் தாண்டிய வாழ்வியல் வினா.
சின்ன வயதில் உணவுச் சங்கிலி பற்றிப் படித்திருப்போம். புற்களை வெட்டுக்கிளி தின்னும்; வெட்டுக்கிளி தவளையின் உணவாகிவிடும். தவளை பாம்பின் சமையலறையில் காணப்படும். “இன்னிக்கு அரைக் கிலோ பாம்பு வாங்கிட்டு வாங்களேன்; நம்ம குஞ்சுக்குப் பாம்புச் சத்து குறையுது” என்று மிஸஸ் கழுகு சொல்லும்.
மழை-ஆறு-கடல்-மேகம்-மழை
வேறுவிதத்தில் சொன்னால், புற்கள் இல்லையேல் கழுகுகள் இல்லை. மழை இல்லையேல் ஆறுகள் பட்டினி கிடக்கும். இயற்கையில் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இந்தச் சார்புச் சித்தாந்தத்தை உங்கள் தெருவிலுள்ள பெட்டிக்கடையில் பொருத்திப் பாருங்கள்.
கடைக்காரரின் நோக்கம் நிறைவேற வாடிக்கையாளர் வர வேண்டும். அதேபோல், வாடிக்கையாளர் தனக்குத் தேவையான வாழைப் பழத்தைப் பெற எங்கோ இருக்கிற விளைநிலத்திற்குச் செல்ல முடியாது.
ஆக, நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அல்லது ஊர், உலகுடன் ஒட்டாமல் தனிமை விரும்பியாக இருந்தாலும் காலையிலிருந்து, இரவுவரை யாரையெல்லாம் சார்ந்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பல் துலக்கும் பிரஷ், செருப்பு, உணவு, கைக்குட்டை, பேனா, கண்ணாடி, பென்டிரைவ், டிவி, கம்ப்யூட்டர்… நமது வாகனத்தின் பெட்ரோலுக்காக யாரோ தகிக்கிற பாலைவனத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் பருகும் தேயிலைக்காக யாரோ பனிக்காட்டில் தேயிலையைத் தூளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இப்படி கழிப்பறை கழுவுகிறவர், டீ தருகிறவர், தண்ணீர் தருகிறவர், எழுதுகிறவர், சமைப்பவர், பேப்பர் போடுகிறவர், கோழி வளர்ப்பவர்...
கண்ணுக்குத் தெரியாத ‘யாரோ ஒருவரின்’ சேவைகளில்தான் எல்லோரும் சுகமாக இருக்கிறோம். நாம் நிம்மதியாகவும், இடையூறு இன்றியும் இருக்க எத்தனையோ பேரின் உதவி வேண்டியிருக்கிறது.
இவ்வாறாக, நாமும் இன்னொருவரின் ‘யாரோ ஒருவராக’ இருப்போம். இதைத் தவிர்க்கவே முடியாது என்கிற போது, ஒரு கிரிக்கெட் வீரர், அவர் எவ்வளவு திறமைசாலியாக இருக்கட்டும் எதிர்முனையில் ‘யாரோ ஒருவர்’ இருந்ததால்தானே அவரால் சாதனை படைக்க முடிந்தது?
எதிரில் இருப்பது யார்?
எதிர்முனையில் இருப்பவர்கள் சட்டென்று ஆட்டம் இழந்துகொண்டே இருந்தால், நாம் என்னதான் மந்திர மட்டையைக் கொண்டிருந்தாலும் வானத்தைப் பார்த்து நன்றி கூறவே முடியாது!
சற்று வசதியான, ஓரளவு அறிவு முதிர்ச்சியான நண்பர் ஒரு தடவை சொன்னார், “எங்கிட்ட நல்ல பழக்க வழக்கங்கள் இருக்குது; ஓரளவு வசதி இருக்குதுன்னா அதுக்கு நானா பொறுப்பு? எப்பவோ, எவ்வளவோ கஷ்டப்பட்டு, இந்த வயலை வாங்கிப் போட்ட முன்னோருக்கு, கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வெச்ச எங்க தாத்தாக்களுக்கு, எப்படியாவது நல்லபடியா வளர்த்த எங்க அப்பா அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லணும். முன்னோர்ல யாரோ ஒருத்தரு சொதப்பியிருந்தாலும் நான் இப்படிப் பேசிக்கிட்டு இருக்க முடியாது!” என்றார்.
இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் அப்புறம் எங்கிருந்து வரும் ‘நான்’ என்ற எண்ணம்?
இப்படியே முகம் தெரியாத எத்தனையோ பேரின் பாதங்கள்தான் நமது வழியை உருவாக்குகின்றன; எத்தனையோ சங்கிலிகள் பின்னிப்பிணைந்துதான் நாம் நம் அடையாளங்களுடன் நிற்கிறோம் என்றால், குறைந்தது எத்தனை பேருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்?
எல்லோருக்கும் நன்றி சொல்வது முடியாத காரியம். ஆனால், நன்றி உணர்வுடன் இருப்பது சாத்தியம்தானே!
நம் வெற்றிக்குப் பின்னால் இத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வின் பொருட்டு செய்ததாகவேகூட இருக்கட்டும். அவர்கள் இன்றி நமக்கு அஸ்திவாரம் ஏது? சுட்டிக்காட்டும் அடையாளமுடன் இருப்பவர் வெகு சிலர். ஆனால் எவ்விதச் சுவடுமற்ற ‘யாரோ ஒருவர்’ பலர்.
இப்படி எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன். மாணவர்கள் கொஞ்சநேர அமைதிக்குப் பிறகு வேறொரு பட்டியலைத் தயார் செய்யத் தொடங்கினார்கள்.
அதில் சரியான நேரத்துக்குத் தங்களைப் பள்ளிக்குக் கொண்டு வந்து சேர்த்த வாகன ஓட்டுநர், தேர்வு நேரத்தில் டிவியை அதிகச் சத்தத்தில் வைக்காத பக்கத்து வீட்டுக்காரர்கள், தேர்வு எழுதும்போது தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்த ஊழியர், பள்ளியில் எல்லோருக்கும் பிடித்தமான மரத்தை எப்போதோ நட்ட முகம் தெரியாத ‘யாரோ ஒருவர்’ என யார் யாரெல்லாமோ இடம்பெறத் தொடங்கினார்கள்.
தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com