சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் பெரிய வரிச் சீர்திருத்தம் என்று சொல்லப்படும் பொது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்து அம்சங்களிலும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறை இது. முந்தைய வரி விதிப்பு நடைமுறைகளில் வித்தகர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட, தற்போதைய ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்தை ஆழமாகக் கற்றுவரும் சூழ்நிலைதான் உள்ளது.
வரி கணக்கிடுபவர்கள், வரி நிபுணர்கள், வரி ஆலோசகர்கள், நிதித் தணிக்கையாளர்கள் ஆகியோருக்கான தேவைகளையும் வாய்ப்புகளையும் புதிய சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறை மேலும் அதிகமாக்கியுள்ளது. பொது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அறிவிக்கப்பட்டவுடனேயே இணையத் தளங்களில், ‘ஜி.எஸ்.டி. ஸ்பெஷலிஸ்ட்கள் தேவை’ என்ற விளம்பரத்தைப் பல நிறுவனங்கள் கொடுத்துள்ளதே இதற்குச் சான்று. ஆண்டுக்கு ரூ.மூன்று லட்சம் முதல் ரூ.ஏழு லட்சம் வரை சம்பளம் தரப்படும் என்று சொல்லப்படுகிறது.
50 ஆயிரம் பேர் தேவை
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலுக்கு வரும் நிலையில் நிதித்துறை சார்ந்து படிப்பு படித்தவர்கள் மட்டுமின்றி, மென்பொருள் பணியாளர்களுக்கும் இத்துறையில் வாய்ப்புகள் இருக்கும். வேலைவாய்ப்பு மந்தமாகியுள்ள, வேலை நீக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படும் மென்பொருள் துறை சார்ந்த பணியாளர்கள் ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்தைப் பற்றி போதிய திறனைப் பெற்றால் வரி நிபுணர்களாக மாறும் சாத்தியங்களை ஜி.எஸ்.டி. வழங்கியுள்ளது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்புச் சட்டம் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்திருப்பதோடு கணினி அறிவும் அவசியத் தேவையாக இருக்கும். பெரும் நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தில் தடையிருக்கக் கூடாதென்பதற்காக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நடைமுறைகள் தெரிந்த நிபுணர்களை நல்ல சம்பளத்தில் நிரந்தரமாகப் பணியமர்த்தும் வாய்ப்புகளும் உள்ளன.
மதிப்பு கூட்டு வரி (வாட்) மற்றும் ஆயத்தீர்வை வரி நடைமுறைகளில் ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறைகளை ஆழமாகக் கற்பதன் மூலம் தங்கள் திறன்களைத் தற்கால நிலைமைக்கேற்ப மேம்படுத்திக் கொள்ளலாம். இது சார்ந்து முதல் ஆறு மாத காலத்தில் நாடு முழுவதும் 50 முதல் 60 ஆயிரம் பேர் தேவைப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
வரிகள் பலவிதம் வேலைகளும் பலவிதம்
வரித்துறை சார்ந்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல விதமான பணிகள் உள்ளன. வரி கணக்காளர், வரி ஆய்வாளர், வரி ஆலோசகர், வரி சேகரிப்பவர், வருவாய் நிர்வாகிகள், வியாபார வரி ஆலோசகர்கள், சொத்து வரி ஆலோசகர்களாகப் பணியாற்றலாம். வரி சார்ந்த வழக்குகளை எடுத்து நடத்தும் வரி விதிப்பில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞராகவும் இத்துறை சார்ந்து ஆக முடியும்.
யூ.பி.எஸ்.சி. தேர்வெழுதி இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் (ஐ.ஆர்.எஸ்.) அதிகாரி ஆகலாம். நேரடி மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து சரியானபடி சேகரிக்கப்படுவதை உறுதி செய்பவர்கள் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் உறுதி. வரி நிர்வாகம் மற்றும் வரிக் கொள்கைகளையும் உருவாக்க இவர்கள் அரசுக்கு உதவுகின்றனர். உதவி ஆணையர் முதல் தலைமை ஆணையர் வரை இவர்கள் உயர் பதவிகளை அடைய முடியும். அரசு மற்றும் நிதி நிறுவனங்களில் தலைவர்களாகவும் பொறுப்பேற்க வாய்ப்புகள் உண்டு.
டாக்ஸ் அசிஸ்டெண்ட்கள் தேர்வைப் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்) நடத்துகிறது. யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை விட எளிய தேர்வு முறை இது. 20 முதல் 27 வயதுவரை உள்ள பட்டதாரிகள் யாரும் இத்தேர்வை எழுதலாம். தேர்வில் வெற்றி பெறுபவர்கள், சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ் மற்றும் சென்ட்ரல் போர்டு ஆஃப் எக்சைஸ் அண்ட் கஸ்டம்ஸ் ஆகிய பிரிவுகளின் அலுவலகங்களில் பணிபுரியலாம். அதற்கு டேட்டா என்ட்ரியில் ஒரு மணிக்கு எட்டு ஆயிரம் கீ அடிக்கும் அளவுக்கு வேகம் பயின்றிருக்க வேண்டும்.
வியாபாரம், வர்த்தகம், சேவைகள் முதல் அரசுக்குச் செலுத்தும் கட்டணங்கள்வரை இ-பேமெண்ட், இ-காமர்ஸ் முறையே இனி எதிர்காலமாக இருக்கப்போகிறது. அனைத்துத் துறைகளும் இணையமயமாகவுள்ள நிலையில் கணினி அறிவும் நிதியறிவும் கைகோக்கப்போகும் புதிய உலகில் வரிவிதிப்பு நடைமுறைகளைக் கல்வியாகப் படிப்பவர்கள் சாதிக்க வாய்ப்புகள் அதிகம்.