கோவையில், ஆரம்பக்கல்வியை துவக்கி வைக்கும் விதமாக நடைபெற்ற, வித்யாரம்பம் நிகழ்ச்சியில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
ஆரம்பக் கல்வியை துவங்கும் குழந்தைகளின் நாவில் ஸ்ரீஹரி மந்திரத்தையும், உயிரெழுத்தையும் எழுதி, அவர்களது கல்விப் பயணம் துவக்கி வைக்கப்படும்.
நிகழ்ச்சிக்கு வித்யாரம்பம் (எழுத்தறிவித்தல்) என்று பெயர். விஜயதசமி நன்னாளில், கல்விக் கடவுளை வணங்கி, குழந்தைகளுக்கு இந்த எழுத்தறிவித்தல் போதிக்கப்படும்.
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில், கடந்த திங்கள்கிழமை எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கலந்துகொண்டனர். நம்பூதிரி, குழந்தைகளின் நாக்கில் ஸ்ரீஹரி மந்திரத்தை எழுதி, அவர்களது ஆரம்பக்கல்வியை துவக்கி வைத்தார்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
தர்மபுரி
தர்மபுரி கேரள சமாஜம் சார்பில், கடந்த 12 ஆண்டுகளாக எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கேரளாவில் ‘வித்யாரம்பம்’ என்ற பெயரில் பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை தர்மபுரியில் ‘எழுத்தறிவித்தல்’ என்ற பெயரில் நடத்துகின்றனர்.
கேரளாவைச் சேர்ந்த பகவதி சுவாமி நம்பூதிரி குழுவினர், லட்சுமி, சரஸ்வதி பூஜை செய்தபின், குழந்தைகளின நாவில் ஸ்ரீஹரி மந்திரத்தை எழுதினர்.
தர்மபுரி ஸ்ரீராமா ஹோட்டல் அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், 194 குழந்தைகள் ஆசீர்வாதம் பெற்றனர்.
ஏற்பாடுகளை, தர்மபுரி கேரள சமாஜ தலைவர் ராமன்குட்டி நாயர், துணைத்தலைவர் ஸ்ரீதரன் நம்பியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.