இணைப்பிதழ்கள்

இந்தச் சுவரில் கிறுக்கியது யார்?

மித்ரா

நித்யாவுக்கு ஏழு வயது. அவள் அம்மா தன் தோழி வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றிருந்தார். அங்கே ஓர் அறையில் சுவரில் நிறைய கிறுக்கல்கள், எக்கச்சக்கமான படங்கள் இருந்தன. "சுவத்துல யாரு இப்படி கிறுக்கினது?" என்று அம்மாவின் தோழியிடம் கேட்டாள்.

சாவித்திரி ஆண்ட்டி அவளைப் பார்த்துச் சிரித்தார். ஒரு ஸ்கெட்ச் பேனா எடுத்துக் கொடுத்து, "நீ ஒரு படம் வரை பாப்போம்" என்றார்.

நித்யா உற்சாகமாக அந்தப் பேனாவைக் கையில் வாங்கிக்கொண்டாள்.

அவள் கேட்டது என்ன, ஆண்ட்டி சொன்னது என்ன? கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு ஏதோ சொல்கிறாரே என்கிறீர்களா?

சாவித்திரி ஆண்ட்டி சரியாகத்தான் பதில் சொன்னார். நித்யாவுக்கு யார் கிறுக்கினது என்பது முக்கியமல்ல. கிறுக்கினால் திட்டு கிடைக்குமோ என்பதுதான் அந்தக் குழந்தையின் கவலை. அதைப் புரிந்துகொண்டு சாவித்திரி ஆண்ட்டி பதில் சொல்லியிருக்கிறார்.

சாவித்திரி ஆண்ட்டியின் இந்தத் திறமை, மனிதர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் திறமை. பிறரது நுட்பமான உணர்வுகளைத் துல்லியமாக உணர்வதே இதன் அடிப்படை. மனிதர்களைப் புரிந்து கொண்டு அவர்களுடன் உறவாடும் திறமை கொண்டவர்கள் இவர்கள்.

மனித உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொள்பவர்கள், மனித நடத்தைக்குப் பின்னால் உள்ள காரணங்களைத் தர்க்கபூர்வமாக அறியக்கூடிய வர்களாக இருப்பார்கள். அந்த நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் திறமையும் அவர்களுக்கு இருக்கும்.

மனித வளம் என்பது என்ன?

பூபதிக்கு 17 வயது. விளையாட்டு, மாணவர் நிகழ்ச்சிகள் என்று எதுவாக இருந்தாலும் அவனால் பிறரை ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்ல முடிகிறது. யாருக்கு என்ன திறமை இருக்கிறது, யாரை எப்படி ஒரு பணியில் ஈடுபடுத்த வேண்டும், அதில் அவர்களுக்கு என்ன பிரச்சினை, அதை எப்படிக் கையாள்வது என்பதெல்லாம் அவனுக்கு இயல்பாக அமைந்த திறமைகள்.

பள்ளியில் எந்தப் பொது நிகழ்ச்சி என்றாலும் பூபதியைத்தான் ஆசிரியர்கள் கூப்பிடுவார்கள். ஹாக்கி டோர்ணமெண்ட், பள்ளி ஆண்டு விழா, மருத்துவ முகாம் என்று எதுவாக இருந்தாலும் ஆசிரியர்களும் மாணவர்களும் பல விஷயங்களுக்கு அவனையே நாடுவார்கள்.

பூபதி இன்னும் சில மாதங்களில் தன் மேல் படிப்பைப் பற்றிய முக்கியமான முடிவை எடுத்தாக வேண்டும். எந்தத் துறைக்குச் செல்வது என்பதில் அவனுக்குக் குழப்பம் இருக்கிறது. அவன் படிக்கும் பொருளியல் போன்ற பாடங்களில், அவனுக்குத் தேர்ச்சி இல்லை.

ஆனால், பூபதிக்கு இயல்பாகவே தலைமைப் பண்பு இருக்கிறது. அவனால் பிறரது திறமைகளை அறிய முடிகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. பக்குவமாக அவர்களிடம் உறவாட முடிகிறது.

மனிதர்களுடன் உறவாடும் திறமைக்கு ஏற்ற தொழில்கள் பல இருக்கின்றன. இந்தத் தொழிலுக்குப் பிறரது உணர்வுகளையும் சிந்தனை முறைகளையும் புரிந்துகொள்ளும் தன்மை வேண்டும். தனி நபர்களிடையே காணப்படும் வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப அவர்களிடம் நடந்துகொள்ளும் திறமை வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தொழிலிலும் மனித வளம், மனித உறவுகள் ஆகியவை பெரிதும் மதிக்கப்படுகின்றன. இயந்திரம் ஒழுங்காக இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பதில்லை; இயந்திரத்தை இயக்கும் மனிதர் நன்றாக இருக்கிறாரா என்பதையும் பார்ப்பதே நவீன அணுகுமுறை.

எத்தனையோ தொழில்கள்

கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளில் தொடங்கி, இளைஞர்கள், நடுத்தர வயதுடை யோர், முதியோர், ஊழியர்கள், நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், உடல் ஊனமுற்றோர், நோயாளிகள், குழந்தைகள் ஆகியவர்கள் மத்தியில் வேலை பார்ப்பதுவரையிலும் மனித வளம் / உறவுகள் சார்ந்த தொழில்கள் நிறைய இருக்கின்றன.

சமூக சேவை: சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்படும் பணிகளும் மனித உறவுகள் தொடர்பான தொழல்களில் அடங்கும். இப்போதெல்லாம் சமூக நல ஊழியர்கள் பட்ட மேற்படிப்புப் படித்தவர்களாக இருக்கிறார்கள். மனித இனத்தின் பிரச்சினைகளைக் கையாளும் திறன் இவர்களுக்குத் தேவை. பள்ளி, ஆஸ்பத்திரி, தொழிற்கூடம், அலுவலகம், சிறைச்சாலைகள் என்று பல இடங்களில், இவர்களது பணிகள் தேவைப்படுகின்றன.

மக்கள் தொடர்பு அதிகாரி: ஒரு நிறுவனம் அல்லது அமைப்புக்கும் அதனோடு தொடர்புகொண்ட மக்களுக்கும் இடையே பாலமாக இவர்கள் செயல்படுகிறார்கள். வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசுத் துறைகள், பல்வேறு கல்வி மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் இவர்களது பணி தேவைப்படுகிறது.

விருந்தோம்பல் துறை: வீட்டை விட்டு வெளியே வந்து தங்கும் மக்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துதர வேண்டியிருக்கிறது. தங்கும் விடுதிகள், சுற்றுலாத் துறை, விமானப் போக்குவரத்துச் சேவை ஆகியவை இதில் அடங்கும்.

மக்களோடு சுமூகமாக உறவாடும் தொழில்கள் இப்படிப் பல துறைகளைத் தழுவியபடி விரிந்து பரவியிருக்கின்றன. ஆசிரியப் பணி, நிர்வாகம், செயலர் பணி, விற்பனை, சிறப்புக் கல்வி போன்றவையும் மக்கள் தொடர்பை அடிப்படையாகக் கொண்டவைதாம்.

நீங்கள் எப்படிப்பட்டவர்?

இதுபோன்ற தொழில் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் உணர்வுகள், தேவைகள் ஆகியவை பற்றி உங்களுக்கு அக்கறையும் கவனமும் இருக்கின்றனவா? உங்களுக்கான தொழில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

சக மனிதர்களுக்கும் தங்கள் இதயங்களில் இடம் உண்டு என்று சொல்பவர்களுக்கு எண்ணற்ற வேலைகள் காத்திருக்கின்றன. இதை மனதில்கொண்டு உங்கள் பாதையைத் தேர்ந்தெடுங்கள்.

SCROLL FOR NEXT