இந்தியாவின் மாதிரி பல்கலைக் கழகமாக விஐடி பல்கலைக்கழகம் விளங்குகிறது என ‘தி இந்து’ இணை சேர்மன் என்.முரளி பேசினார்.
வேலூர் விஐடி பல்கலையில் 19-வது ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘விஐடி பல்கலையின் முன்னாள் மாணவர்கள் சங்கம் 27 நாடுகளில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 46-ல் முன்னாள் மாணவர் சங்கம் உள்ளது. கல்லூரி தொடங்கப்பட்ட காலத்தில் வசதிகள் குறைவாக இருந்தாலும் பல்கலைக்கழக அளவில் 9-க்கு 8 பதக்கங்கள் குவித்து சாதனை படைத்தனர். அந்த மாணவர்களை என்றும் மறக்க முடியாது. அவர்கள் வாங்கிய பதக்கங்களால் பெற்றோர்களின் கவனம் எங்கள் கல்லூரி மீது திரும்பியது. அதேபோல 90-ம் ஆண்டு மாணவர்களின் பங்கும் மறக்க முடியாது’’ என்றார்.
நிகழ்ச்சியில் ‘தி இந்து’ இணை சேர்மன் என்.முரளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் சிறந்த அரசியல்வாதி. இந்தியாவில் அவரைப்போல மிகச்சிலர் மட்டும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். விஸ்வநாதன் கல்வித் துறையை தேர்வு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல்வாதிகள் பலர் அரசியலில் இருந்து வெளியேற விரும்பமாட்டார்கள். ஆனால் தைரியமான முடிவை அவர் எடுத்தார்.
விஸ்வாதனின் எண்ணங்கள், கனவுகள் நனவாகி வருகிறது. இன்று இந்தியாவின் மாதிரி பல்கலைக்கழகமாக விஐடி விளங்குகிறது. விஐடி மாணவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
இங்கு மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்படுகிறது. விஐடி முன்னாள் மாணவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரமாக உள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய மாணவர் சங்கமாக இருக்கிறது. முன்னாள் மாணவர்கள் எப்போதும் சிறந்த தூதுவர்களாக இருப்பார்கள். ஒருங்கிணைக்கப்பட்ட சங்கமாக இருக்கும். உயர்கல்வியை அனைத்துதரப்பு மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சவால்கள் இருக்கிறது. மிக குறைந்த கல்வி நிறுவனங்கள் மட்டும் இதனை சாதிக்கின்றன. உயர்கல்வியின் முக்கிய அம்சங்களாக ஆசிரியர்கள், கட்டமைப்பு, தலைமை முக்கியம். இந்த மூன்றும் விஐடி பல்கலையில் இருக்கிறது. மிக கடுமையான சவால்களை எல்லாம் தாண்டி இந்த நிறுவனத்தை அவர்கள் மேம்படுத்தி இருப்பது மிகப்பெரிய சாதனை. தற்போது 2 ஐ.ஐ.டிகளுக்கு அடுத்து விஐடி பல்கலைக்கழகம் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தவகையில் முன்னிலையில் இருக்கிறது. உயர்கல்வியை கற்பிப்பதில் இலகுவான நடைமுறையை விஐடியில் அறிமுகம் செய்துள்ளார்கள். இதுபோன்ற நிலை அமெரிக்காவில்தான் இருக்கிறது. இங்கு விருதுபெற்ற முன்னாள் மாணவர்கள் பலர் கடைசி இருக்கையில் அமர்ந்தவர்கள் என கூறினார்கள். எனக்கு மீண்டும் உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்தால் லயோலா கல்லூரியில் கடைசி இருக்கையில் படிப்பதைவிட விஐடியில் படிக்க விரும்புகிறேன்’’
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், ஸ்டார் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கான கணினி ஆய்வகத்தை என்.முரளி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் 10 கம்ப்யூட்டர்கள் முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், காதம்பரி எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.