இணைப்பிதழ்கள்

சந்தோஷம் தருவதும் ஒரு பணியே

ஷங்கர்

மும்பையைச் சேர்ந்த அந்தச் சிறுவன் கந்தர், ரத்தப் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தான். அவன் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவேண்டும். அமெரிக்காவிலுள்ள டிஸ்னிலாண்டைப் பார்க்க வாய்ப்பிருந்தால் மட்டுமே சிகிச்சைக்கு வருவேன் என்று அந்தச் சிறுவன், தன் பெற்றோரிடம் பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். அவனது பெற்றோரான உதய் ஜோஷியும் கீதா ஜோஷியும் அமெரிக்காவிலுள்ள ‘மேக் எ விஷ் அமெரிக்கா’ அறக்கட்டளை வழியாக அவன் ஆசையை நிறைவேற்றினார்கள்.

டிஸ்னிலாண்டுக்குப் போய் வந்த பிறகு கந்தர் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் தனது சிகிச்சையை எதிர்கொண்டதைப் பார்த்த ஜோஷி தம்பதியினர், தங்கள் மகன் அடைந்த சந்தோஷத்தை பிற இந்தியக் குழந்தைகளும் அடைய வேண்டுமென்று விரும்பினர். அதன் அடிப்படையில் 1996-ல் இந்தியாவில் அவர்கள் தொடங்கிய நிறுவனம் தான் ‘மேக் எ விஷ் இந்தியா’. உயிரை அச்சுறுத்தும் நோய்களான புற்றுநோய், எச்ஐவி எயிட்ஸ், தலசீமியா, இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புள்ள 3 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதுதான் ‘மேக் எ விஷ்’ அறக்கட்டளையின் பணியாகும்.

1996-ல் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 11 நகரங்களில் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட 30 ஆயிரம் குழந்தைகளின் ஆசைகளை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். சென்னையில் உள்ள ‘மேக் எ விஷ்’ அறக்கட்டளையின் இயக்குனரான பக்தவார் முரளி, “உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளின் சாதாரண சந்தோஷங்கள் கூடக் கிடைப்பதில்லை.

மருத்துவமனைக்கும் வீட்டுக்குமாக அலைந்து அவர்கள் தங்கள் குழந்தைப்பருவத்தின் அடிப்படையான மகிழ்ச்சியை இழக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் ‘மேக் எ விஷ்’. வாழ்க்கை மீது நேர்மறையான உணர்வு உண்டாகும்போது, அவர்கள் பெறும் மருத்துவ சிகிச்சையும் குணமடைதலும் வேகமாகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். சென்னை பிரிவு சார்ந்து கடந்த இரண்டாண்டுகளில் 1,400 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றியுள்ளோம்” என்கிறார்.

தீயணைப்பு வீரனான அக்‌ஷய்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஐந்து வயதுச் சிறுவனான அக்‌ஷய் ஜெயனுக்கு தீயணைக்கும் படைவீரனாகும் ஆசையை நிறைவேற்றியுள்ளது இந்த அமைப்பு. தீயணைப்பு வீரன் சாம் என்ற தொலைக்காட்சி கதாபாத்திரத்தைப் பார்த்து அவனுக்கு வந்த ஆசை இது. இரண்டு வயதிலிருந்து அடைகாத்து வந்த அக்‌ஷய் ஜெயனின் ஆசை நிறைவேறியது மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக அவனது பெற்றோர்கள் கூறுகின்றனர். “தீயணைப்புப் படைவீரன் ஆவதைப் பற்றி அவன் பேசிக்கொண்டேயிருந்தான். அது நிறைவேறியதால் வேகமாக குணமாவான் என்று நம்புகிறேன்” என்கிறார் அவனது அம்மா கிருஷ்ணவேணி ஜெயன்.

“விருப்பப்பட்ட பொருளைப் பெற்றுத்தருவது, விருப்பப்படும் ஒன்றாக ஆவது, விரும்பிய நபரைச் சந்திப்பது, விருப்பப்படும் இடத்திற்குப் போய் பார்ப்பது போன்ற நான்கு ஆசைகளை கூடுமானவரை நிறைவேற்ற முயல்கிறோம்” என்கிறார் பக்தவார் முரளி.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன் வரை இந்தக் குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கியுள்ளனர்.

குழந்தைகளின் மனதில் ஒளி

குழந்தைகளின் ஆசைகள் என்னவென்று அறிய ‘மேக் எ விஷ்’ அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் நட்புகொண்டு பேசுகின்றனர். அந்தக் குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் குழந்தைகளின் ஆசை நிறைவேறுவதற்குப் பரிந்துரைக்கின்றனர்.

“குழந்தைகளிடம் அவர்களைப் பாதித்திருக்கும் நோய் பற்றி எதையும் நாங்கள் பேசுவதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்திருக்கிறோம்” என்கிறார் பக்தவார் முரளி.

தன்னை அச்சுறுத்தும் நோயை எதிர்த்துப் போராடும் மனவலுவை அந்தச் சின்னஞ்சிறு சந்தோஷம் தருகிறது; கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையை அந்தப் பிஞ்சு உள்ளங்களுக்கு உணர்த்தி அவர்களை வேகமாகக் குணமூட்டுகிறது; அதன் மூலம் அவர்களின் அன்றாடத்தில் ஒளியை ஏற்றுகிறது ‘மேக் எ விஷ்’ அறக்கட்டளை.

சென்னை ‘மேக் எ விஷ்’ அறக்கட்டளை எண்: 044-30890185

SCROLL FOR NEXT