இணைப்பிதழ்கள்

குறவர் குழந்தைகளுக்கும் கல்வி

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நரிக்குறவர் சமூகத்தினர் வாழும் ஒரு பகுதி உள்ளது. அவர்களின் குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருந்தனர். இதைப் பார்த்த சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் போய் அவர்களிடம் பேசினர்.

கல்வி பயில்தல்,பெண் கல்வியின் அவசியம் பற்றி பள்ளி மாணவிகளை விட்டும் பேச வைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக நரிக்குறவர் இனப் பெண்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்க விருப்பமுடன் பள்ளிக்கு வந்துள்ளனர்.

நரிக்குறவ இனப் பெண்கள் குஷ்பு, ஜான்சி, சபீலா, ராதிகா, வனிதா,சுகன்யா,சுமதி ஆகியோரும் நரிக்குறவ இனத்தவரின் தலைவர் வேங்கையாவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். பாண்டிமீனாள்,விஜயராணி, பிரியா எனும் குறவர் இனத் தாய்மார்கள் “ பிள்ளைகளின் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்காக எங்கும் அழைத்துச் செல்லமாட்டோம் என மற்ற பெற்றோரிடமும் உறுதி வாங்கியிருக்கிறோம்” என்றனர். “ நாங்கள்தான் படிக்காமல் ஊர் ஊராகச் சுற்றி அலைகிறோம். பஸ்ஸில் எங்காவது போகவேண்டுமானால் எந்த ஊர் பஸ் என யாரையாவது கேட்க வேண்டி உள்ளது. எங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து பள்ளியில் படிக்க வைத்து வரும் காலத்தில் பெரிய அதிகாரிகளாகவும், டாக்டர்களாகவும் ஆக்குவோம்” என அவர்கள் உற்சாகமாகப் பேசினார்கள். பள்ளியின் உடற்கல்வி

ஆசிரியர் கருப்பையா ,ஆசிரியைகள் முத்துலெட்சுமி, செல்வமீனாள் ஆகியோரும் படிப்பின் அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.

எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டிருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம் என்கிறார் தலைமையாசிரியர் சொக்கலிங்கம்.எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது சட்டம் ஆகிவிட்டாலும் அதைச் செய்வதற்கு இன்னமும் சில நல்ல இதயங்கள் தேவையாக இருக்கிறது.

SCROLL FOR NEXT