மதிப்பெண்ணை இலக்காக வைத்து ஓடிக்கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளைப் பார்த்துக் கொஞ்சமும் சலனப்படாமல் தனது மாணவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியைப் போதித்துக்கொண்டிருக்கிறார் ஆசிரியர் செ.கந்தன்.
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வேளாண் பிரிவு ஆசிரியர் கந்தன். ‘பி.எஸ்.சி., அக்ரி’ படித்திருக்கும் இவர் ஆசிரியர் பணிக்கு வருவதற்கு முன்பாக இயற்கை உரங்கள் சம்பந்தப்பட்ட வணிகம் செய்துவந்தார். 2009-ல் ஆசிரியர் பணிக்கு வந்தவர், பிளஸ் ஒன், பிளஸ் டூ வகுப்பு வேளாண் பிரிவு மாணவர்களை மதிப்பெண் மாயையிலிருந்து மீட்பதை முதல் வேலையாக்கிக்கொண்டார். எழுதிப் படிப்பது மட்டுமே கல்வி அல்ல. இயற்கை சார்ந்து படிப்பதுதான் உண்மையான, பிரயோஜனமான கல்வி என்பதை அவர்களுக்குப் புரியவைத்தார்.
பசுமையான பள்ளி வளாகம்
“மருத்துவமும் பொறியியலும் மட்டும்தான் புரொஃபஷனல் கோர்ஸ் என்று தப்பான ஒரு கருத்தைப் பரப்பி வைத்திருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. வேளாண் படிப்பு உள்ளிட்டவையும் புரொஃபஷனல் கோர்ஸ்தான். எதிர்காலம் வேளாண்மையை நம்பித்தான் நிற்கப் போகிறது. இதையெல்லாம் எனது மாணவர்களுக்குப் புரியவைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் கந்தன்.
இயற்கை விவசாயம் சார்ந்த துறையில் ஏற்கெனவே பணியாற்றியவர் என்பதால், புத்தகப் பாடமாக மட்டும் இல்லாமல், தனக்கிருக்கும் வெளிவட்டாரத் தொடர்புகளை வைத்து நிறைய விஷயங்களை மாணவர்களின் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார் இவர்.
கல்வி அதிகாரிகளும் ஊக்கம் தந்ததால், வேளாண் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மையங்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்றார். இதனால், இயல்பாகவே மாணவர்களுக்கு வேளாண் படிப்பு மீது ஈர்ப்பு வந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்ற அனுபவம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் இந்தப் படிப்பைத் தேடி அதிக மாணவர்களை வரவைத்தது.
இப்போது இப்பள்ளியின் வேளாண் மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே ‘கிச்சன் கார்டன்’ஒன்றைப் பராமரிக்கிறார்கள். இதை உழுவதில் தொடங்கித் தண்ணீர் பாய்ச்சி, களை எடுப்பது வரை அத்தனையை யும் மாணவர்களே கவனிக்கிறார்கள். உரிய இடங்களில் வழிகாட்டலை மட்டுமே கந்தன் தருகிறார். வேளாண் மாணவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து கீரைகள், காய்கறிகள், எனக் குழுவுக்கு ஒன்றைப் பயிர் செய்கி றார்கள். பள்ளி தந்த அனுபவத்தை வைத்து இவர்களில் சிலர், வீடுகளிலும் தோட்டம் போட்டிருக்கிறார்கள்.
வாழ்க்கைப் பாடம்
இந்தக் காலத்து மாணவர்கள் பள்ளி இறுதி நாளில் சாதாரணமாகக் கூட்டாக சினிமாவுக்குப் போவார்கள் அல்லது ஓட்டலுக்குப் போவார்கள். ஆனால், கந்தனின் மாணவர்கள் பள்ளி இறுதி நாளில் எங்காவது ஒரு பொது இடத்துக்குச் சென்று ஆளுக்கு ஒரு மரம் நடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். படிக்கும் காலத்தில் ஆளுக்கு ஒரு மரத்தை நட்டு அதை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதும் கந்தன் தனது மாணவர்களுக்குப் போதித்திருக்கும் பசுமைப் பாடம். இப்போது, பள்ளி வளாகத்திலேயே மூலிகைப் பண்ணை ஒன்றை அமைக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் இவரது மாணவர்கள்.
“ ‘இது மதிப்பெண்ணுக்காகப் படிக்கிற பாடம் இல்லப்பா; வாழ்க்கைக்காகப் படிக்கிற பாடம்’னு ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்துவிடுவேன். அதனால், அவர்கள் அத்தனை பேருமே படிப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
இங்கு வேளாண் பிரிவில் படித்த மாணவர்களில் 70 சதவீதம் பேர் இப்போது உயர்கல்வி முடித்து வேலையில் இருக்கிறார்கள். எஞ்சிய மாணவர்களும் உயர் கல்வி முடித்துவிட்டு வேளாண்மை சம்பந்தப்பட்ட சுயதொழில்களில் இருக்கிறார்கள். ஒரு ஆசானுக்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்” என்று பூரிக்கிறார் கந்தன்.
தொடர்புக்கு: 9842707345