இணைப்பிதழ்கள்

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

செய்திப்பிரிவு

கங்கை தூய்மை தொடக்கம்

கங்கையை 2020-ம் ஆண்டுக்குள் தூய்மைப்படுத்தும் நரேந்திர மோடியின் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் ஜூலை 7-ம் தேதி தொடங்கியது. உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஹரியாணா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 231 திட்டங்கள் தொடங்கப்பட்டன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல், கங்கைக் கரையின் படித்துறைகளையும் சுடுகாடுகளையும் மேம்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மூலிகைத் தாவரங்கள் வளர்ப்பு மற்றும் உயிரினப்பன்மை பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் இவை.

இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி பேசும்போது, இத்திட்டத்தின் முதல் கட்டமாக கங்கா கிராமத் திட்டத்தின்படி, கங்கைக் கரையோரம் அமைந்துள்ள 40 கிராமங்கள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். கங்கை நதியின் பாதையில் உயிரினப்பன்மை மையங்கள் எட்டு அமைக்கப்பட்டு, அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்றும் உமாபாரதி தெரிவித்தார்.

வங்கதேச தீவிரவாத் தாக்குதல்

வங்கதேசத் தலைநகரான டாக்காவில் ஜூலை 1-ம் தேதி அன்று ஹோலி ஆர்டிசன் பேக்கரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களில் இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் தாரிஷி ஜெயின் உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜூலை 7 அன்று, வங்கதேசத்தில் உள்ள கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள லோலாகியா என்ற இடத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேல் மக்கள் கூடிய, ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் இரண்டு போலீசார், ஒரு பெண், ஒரு தீவிரவாதி ஆகியோர் பலியானார்கள்.

ஈரானிய சினிமா மேதை காலமானார்

ஈரானிய சினிமா இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி ஜூலை மாதம் 4-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 76 வயதில் காலமானார். உச்சபட்சத் தணிக்கையும், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்சியாளர்களின் கெடுபிடியும் அதிகம் உள்ள சூழலில் ஈரானின் கலாச்சாரத்தை உலகுக்குக் காட்டிய திரைக்கலைஞர் கியரோஸ்தமி.

ஈரானின் வடக்குப் பகுதி கிராமமான கோக்கர் என்ற ஊர் சார்ந்து இவர் எடுத்த மூன்று திரைப்படங்களான ‘வேர் இஸ் தி ப்ரண்ட்ஸ் ஹோம்’, ‘அண்ட் லைப் கோஸ் ஆன்’, ‘த்ரூ தி ஆலிவ் ட்ரீஸ்’ திரைப்படங்கள் இவருக்கு உலகளாவிய புகழை அளித்தன. சாதாரண மனிதர்களுக்குள் இருக்கும் மனிதாபிமானமும் கவித்துவமும்தான் இவரது திரைப்படத்தின் மையப் பண்புகள்.

திரைக்கதையில் குழந்தைகளை மையமாக்கிய இயக்குநர் இவர் என்று வெகுவாகப் புகழ்ப்படுகிறார். 1979-ல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடந்தபோது, இவர் மற்ற திரைக்கலைஞர்களைப் போல ஈரானை விட்டு வெளியேறவில்லை. 1997-ல் இவர் எடுத்த ‘டேஸ்ட் ஆப் செர்ரி’ கான் திரைவிழாவில் தங்கப் பனை விருதைப் பெற்றது.

பணிகளில் அதிகரிக்கும் ஆண், பெண் இடைவெளி

இந்தியாவின் வேலை ஆற்றலில் ஆண் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கைக்குமான இடைவெளி அதிகரித்துவருவதாக சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் கய் ரைடர் கவலை தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்திருந்த ரைடர், ஜூலை 8-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, உலகளவில் ஒப்பிடும் நிலையில் இந்திய வேலைச் சந்தையில் ஆண், பெண் எண்ணிக்கையில் இருக்கும் வேறுபாடு பெருகிவருவதாகக் கூறினார். ஆண்களுக்கும் பெண்களுக்கு இந்தியாவில் உள்ள வேலைப் பங்கேற்பு வேறுபாடு விகிதம் 40 சதவீதம் இருக்கிறது. உலகளவில் 25 சதவீதம்தான் இந்த இடைவெளி இருக்கிறது.

ஜூலை 6-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர் சர்வதேச அளவிலான சிறந்த வேலைச் சூழலை உருவாக்குவதற்கு இந்திய அரசுடன் சேர்ந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு பணியாற்றும் என்று தெரிவித்தார். குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதன் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இரண்டு அடிப்படையான சாசனங்களை நிறைவேற்றும் என்று தொழிலாளர் துறைச் செயலர் சங்கர் அகர்வால் உறுதிமொழியளித்துள்ளார்.

பெங்களூரு நீச்சல் வீரருக்கு 8 பதக்கம்

இன்டர்நேஷனல் வீல்சேர் அண்ட் அம்புட்டி ஸ்போர்ட்ஸ் அமைப்பு சார்பாக செக் குடியரசில் உள்ள ப்ரேக் நகரில் யு-23 உலக விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. பெங்களூருவைச் சேர்ந்த பாரா நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் இதில் மூன்று தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட எட்டுப் பதக்கங்களை வென்றார்.

200 மீட்டர் ஃப்ரீஸ்டைல், 50 மீட்டர் பட்டர்ப்ளை மற்றும் 50 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார். 1994-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த நிரஞ்சன் முகுந்தன், பிறக்கும்போதே தண்டுவடத்தைச் சுற்றிய முதுகெலும்பும் தசைச்சவ்வும் சரியான படி மூடாத பிறப்புக் குறைபாட்டைக் கொண்டவர்.

கடந்த ஆண்டு ஜூனியர் வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தையும் நீச்சல் போட்டியில் இவர் பெற்றார். அதே ஆண்டில் இந்திய அரசால் சிறந்த விளையாட்டு வீரருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இந்த ஆண்டு இவருக்கு ஏகலைவா விருதை மத்திய அரசு அளித்துள்ளது.

SCROLL FOR NEXT