இணைப்பிதழ்கள்

றெக்கை கொடுக்கும் புராஜெக்ட் புத்ரி

வா.ரவிக்குமார்

எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், அறக்கட்டளையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்குப் பல்வேறு திறன்களை ஐந்தாண்டுகளில் வழங்கும் திட்டம்தான் ‘புராஜெக்ட் புத்ரி’. சென்னையில் செயல்படும் அவதார் மனிதவள அறக்கட்டளை இதைத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் முதல் கட்டமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறோம் என்றார் அறக்கட்டளையின் நிறுவனர் சவுந்தர்யா ராஜேஷ்.

ஒரு பள்ளிக்கு 100 பெண் குழந்தைகள் என்னும் அளவில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளனர் இந்த அறக்கட்டளையினர். இந்த அமைப்பின் இணையதள அறிமுக விழா சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் சமீபத்தில் நடந்தது. புராஜெக்ட் புத்ரியில் பயிற்சிபெறும் வேணுகோபால் வித்யாலயா பள்ளி மாணவிகளே சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்தனர்.

8-வது முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகளுக்குக் கல்வி, முடிவெடுக்கும் திறன், மேடைகளில் பேசுவது, பிரச்சினைகளில் முடிவெடுக்கும் திறன், குழு விவாதம் போன்ற பல திறன்களில் பயிற்சி அளிப்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 300 ஆலோசகர்களை (எல்லோருமே பெண்கள், திருநங்கைகள்) இதற்காகப் பயிற்சி அளித்துத் தயார்படுத்த இருக்கிறது இந்த அறக்கட்டளை.

புத்ரி திட்டத்துக்குக் காரணமான ஆராய்ச்சி

பெண்கள் தொடர்ந்து வீட்டிலும் வெளி இடங்களிலும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பொருளாதாரத்தில் 23.5 சதவீதம் மட்டுமே பெண்களின் பங்கு இருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது. பெண்கள் கல்வி கற்றுப் பணிக்குச் சென்றாலும் திருமணம், குழந்தைப்பேறு, குழந்தை பராமரிப்பு போன்ற பல்வேறு குடும்பச் சுமைகளையும் தாங்குபவர்களாக இருப்பதே இதற்குக் காரணம். குடும்பத்துக்காகத் தங்களைக் கரைத்துக்கொள்ளும் பெண்கள், ஒரு கட்டத்தில் தாங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அதைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. பல தடைகளையும் தாண்டி 3 சதவீதப் பெண்களே பல உயர் பொறுப்புகளில் நீடித்திருப்பதும் தெரியவந்தது.

“இந்நிலையில் வேலையிலிருந்து விலகியவர்களை விட்டுவிட்டு நீடித்திருக்கும் பெண்களில் 1,500 பேரைச் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்களில் 496 பெண்கள் மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்தும் ஏழ்மை நிலையிலிருந்தும் கல்வி கற்று, பல தடைகளை எதிர்கொண்டு பெரிய பொறுப்புகளில் தாக்குப்பிடிப்பதை உணர்ந்தோம். இவர்கள் அனைவருமே அரசுப் பள்ளிகளில், மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தவர்களாக இருந்தார்கள்.

இந்த உயர்ந்த நிலைக்கு மூன்று விஷயங்களைக் காரணம் காட்டினார்கள். அவை, 1. அவர்கள் இருந்த கிராமத்தில் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த ஒருவர். 2. பயிற்சியாளர் 3. வழிகாட்டி. முன்னேறிய இந்த 3 சதவீதப் பெண்களுக்கு அதிர்ஷ்டமாகக் கிடைத்த விஷயத்தை, நாங்கள் வாய்ப்பாக வழங்க முடிவெடுத்தோம். படிப்புதான் உயர்ந்த பதவியை, பொருளாதாரரீதியான சுதந்திரத்தை எட்டுவதற்கான துருப்புச் சீட்டு. படிப்புதான் வானத்தை உன் வசமாக்குவதற்கான றெக்கை என்பதை மாணவிகளுக்குச் சொல்கிறோம். இதுதான் ‘புராஜெக்ட் புத்ரி’ தொடங்குவதற்கான காரணம்.

படிக்கும் மாணவிகளைத் தகுந்த முறையில் வழிநடத்துவதன் மூலம் பள்ளி இடை நிற்றல், குழந்தைத் திருமணம், மிகக் குறைந்த வயதிலேயே குழந்தைப் பேறு போன்ற விஷயங்களும் இயல்பாகவே குறையும். நிறையப் பெண்களை ‘ஒயிட் காலர்’ பணிகளில் அமரவைப்பதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்” என்றார் சவுந்தர்யா ராஜேஷ். இந்தத் திட்டத்தைத் தமிழ்நாட்டிலும் பாண்டிச்சேரியிலும் முதலில் செயல்படுத்த இருக்கும் இவர்கள், இதற்காக ஒவ்வொரு மாவட்டக் கல்வி அதிகாரியையும் மாநகராட்சி கமிஷனரையும் சந்தித்து இந்தத் திட்டத்தைப் பற்றி விளக்குகின்றனர்.

தற்போது 63 பள்ளிகள் இந்தத் திட்டத்தில் இணைந்திருக்கின்றன. இந்தத் திட்டத்தில் மாணவிகளுக்கு வழிகாட்டுபவர்களுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. வாரத்துக்கு 5 மணிநேரம் ஒதுக்குவதற்குத் தயாராக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் தன்னார்வலர்களாகத் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: >www.puthri.org

SCROLL FOR NEXT