படிப்பு விஷயத்தில் அது நமக்குப் பயன் தருமா இல்லையா, இன்று உள்ள தேவை நான்கைந்து ஆண்டுகளுக்குப் பின் இருக்குமா இருக்காதா என்பதையெல்லாம் யோசிக்காமல் ஏதாவது ஒரு படிப்பில் சேர்ந்தால் அது பயன் தராது. ஆகவே பயன் தரும் வகையிலான படிப்புகளில் சேர்வது நல்லது. குறைந்த செலவில், வேலை வாய்ப்புக்கு உத்திரவாதமுள்ள பல பட்டப் படிப்புகள் உள்ளன.
அப்படியான படிப்புகளில் ஒன்று மீன் வளம் பட்டப் படிப்பு. மீன் வளம் பற்றிய படிப்பு என்றதும் இது என்ன படிப்பு என்று சிலர் யோசிக்கலாம். மனிதனுக்குப் பசி என்னும் உணர்வு இருக்கும் வரை, உணவு சார்ந்த தொழில் துறையின் தேவை நீடிக்கும். இந்தியாவின் மீன்வள ஏற்றுமதி வருமானம் ஆண்டுக்கு 34,000 கோடி ரூபாய். உலக அளவில் நாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம். இதில் இந்தியாவின் கடற்கரையின் நீளம் 8,129 கி.மீ., பரப்பளவு 20 லட்சம் சதுர கி.மீ. இது தவிர ஆறுகள், கால்வாய்களின் நீளம் இரண்டு லட்சம் கிலோ மீட்டர், நீர்த் தேக்கங்களின் பரப்பளவு முப்பது லட்சம் ஹெக்டர். இவை மீன் வளத்துக்கு உகந்த சூழலைத் தருகின்றன.
மேலும் இந்தியத் தட்பவெப்பம் இத்துறைக்கு மிகவும் ஏதுவானது. உப்பு நீர் மீன்வளர்ப்பு, நன்னீர் மீன்வளர்ப்பு, அலங்கார மீன்வளர்ப்பு ஆகியவை வேகமாகப் பெருகிவருகின்றன. அதே சமயம் உலகின் தேவையும் பெருகிவருவதால், ஏற்றுமதிக்கான தேவையும் அதிகமாக உள்ளது.
மீன் பிடிப்பது மட்டுமல்ல; குஞ்சு பொரிப்பகங்கள், மீன் வளர்ப்புப் பண்ணைகள், மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை நல்ல லாபம் தரக்கூடியவை. படித்து முடித்த பின் குறைந்த செலவில் சுயமாகவும் தொழில் செய்யலாம். 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூன்றே மாதங்களில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் இறால் வளர்ப்பின் மூலம் 24 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். தொழில் தொடங்கவில்லை என்றாலும் இங்கே இருக்கும் நிறுவனங்களில் வேலைக்கும் செல்லலாம். கனடா, ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் இந்தத் துறைக்கு நல்ல மதிப்பும் தேவையும் இருக்கின்றன.
சமீபத்தில் ஒரு இறால் பண்ணையைப் பார்க்க நேர்ந்தது. அது சுமார் 200 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இறால் வளர்ப்புப் பண்ணை. அதன் வடிவமைப்பிலும் செயல்முறையிலும் தொழில்நுட்பம் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் உரிமையாளர், ஐ.ஐ.டி.யில் படித்து, அமெரிக்காவில் வேலை பார்த்த ஒருவர். சுமார் முப்பது வருடங்களாக இந்தப் பண்ணையை நடத்திவருகிறார். அவர் அமெரிக்காவில் சம்பாதித்ததைவிட இங்கு அதிகமாகச் சம்பாதிப்பதாகக் கூறுகிறார். அந்தக் கிராமத்தினர் பலருக்கு வேலைவாய்ப்பும் அளித்து இருக்கிறார்.
ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இத்துறையில் வெகுவாக முன்னேறிவருகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் இத்துறையைப் பெரிதும் ஊக்குவிக்குகின்றன. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள உப்பு நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம் (CIBA), நன்னீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனம் (CIFA) ஆகியவை இலவசப் பயிற்சியும் ஆலோசனையும் வழங்குகின்றன.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் பொன்னேரியிலும் தூத்துக்குடியிலும் உள்ளன. இளங்கலைப் பொறியிலாளர் பட்டப்படிப்பு, மீன் வளம் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை இங்கே படிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: >http://tnfu.ac.in/pages/view/courses