இணைப்பிதழ்கள்

பிளஸ் 2-வுக்குப் பிறகு: புகழ் மங்காத தொழில்முறை படிப்புகள்!

எஸ்.எஸ்.லெனின்

சமீபகாலமாகப் பொறியியல், மருத்துவப் படிப்புக்கு எதிரான குரல் வலுத்துள்ளது. காரணம் அங்குமிங்கும் கண்டபடி முளைத்திருக்கும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள். ஆனால் மாணவர்களின் மதிப்பெண்ணுக்கும் திறமைக்கும் மதிப்பளித்துக் கல்வி அளிக்கும் அரசுக் கல்லூரிகள் எப்போதுமே மங்காத புகழோடுதான் இருக்கின்றன. உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று அவற்றின் தரத் தையும் நிரூபித்து வருகின் றன. அதனால் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு கவனம்பெறுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள், தொழில் பயிற்சிகள், கல்வி உதவித் தொகை விவரங்கள், அரசு உதவிகள் என ஏராளமான தகவல்கள் அடங்கியுள்ளன. முதல் கட்டமாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பொறியியல், மருத்துவம் படிப்புகள் தொடர்பான தகவல்களை இங்கு காண்போம்.

பொறியியல் பட்டப் படிப்புகள்

அகில இந்திய அளவில் பி.இ., பி.டெக்., படிக்க விரும்பும் மாணவர்களின் முதன்மை விருப்பம், ஐ.ஐ.டி., என்.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதாகவே உள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, குவாஹாட்டி, கான்பூர், கரக்பூர், ரூர்கி, வாரணாசி, தன்பாத் உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனங்களில் 4 ஆண்டு பி.டெக் பயிற்றுவிக்கப்படுகிறது.

இதே போல மண்டலம் வாரியாக அமைந்திருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்னும் என்.ஐ.டி. நிறுவனங்கள் வாயிலாகவும் சிறப்பான பி.டெக்., கல்வியைப் பெறலாம். இதன் தொடர்ச்சியாக எம்.டெக்., பயிலவும் இதே நிறுவனங்கள் வழி செய்யும். ஜெ.இ.இ. முதன்மை நுழைவுத் தேர்வு வாயிலாக என்.ஐ.டி. நிறுவனங்களிலும், ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு (JEE Advanced) நுழைவுத் தேர்வு வாயிலாக ஐ.ஐ.டி. நிறுவனங்களிலும் சேர்க்கை அனுமதி பரிசீலிக்கப்படுகிறது. பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் இந்த நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்கலாம்.

ஐ.ஐ.டி., என்.ஐ.டி. நிறுவனங்கள் வரிசையில், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் நிறுவனத்தில் (http://www.bits-pilani.ac.in/) பி.இ., ஹானர்ஸ், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனத்தில் (https://www.iist.ac.in/) பி.டெக்., ஆகிய பொறியியல் படிப்புகளில் சேரப் பிரத்யேக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

நுழைவுத் தேர்வு இல்லை

தேசிய அளவிலான ஐ.ஐ.டி., என்.ஐ.டி. நிறுவனங்களுக்கு அடுத்த படியாக பொறியியல் கல்வி பெற விரும்பும் மாணவர்களின் விருப்பம் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் அல்லது அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பயில்வதாக அமைகிறது.

தற்போதுவரை இக்கல்லூரிகளுக் கான சேர்க்கை முறை நுழைவுத் தேர்வு இன்றி, மதிப்பெண் அடிப்படையிலான மாநிலக் கலந்தாய்வு முறையாகவே நடத்தப்பட்டுவருகிறது. இந்த வகையில் தமிழகத்தின் 537 சுயநிதி கல்லூரிகள் உட்பட, பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேரலாம். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் மட்டுமன்றி, வொகேஷனல் பாடப் பிரிவு மாணவர்களும் பொறியியல் உயர்கல்வி பெற முடியும்.

நேரடி பொறியியல் பட்டயப் படிப்புகள்

பிளஸ் 2 முடித்தவர்கள் 2 ஆண்டு பாலிடெக்னிக் பட்டயக் கல்வி பெற்று, அதன் அடிப்படையிலும் நேரடியாக 2-ம் ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேரலாம். பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பயின்றவர்களும் வொகேஷனல் பாடப் பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக்கில் விண்ணப்பிக்கலாம்.

அந்தந்தக் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையிலான கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 அல்லது டிப்ளமோ முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு இணை யான AMIE பொறியியல் கல்வித் தகுதியைப் பெறலாம். 6 ஆண்டுகள் தொலை தூரக் கல்வியாக இதனைப் பெற முடியும். வேலைபார்த்துக்கொண்டே படிப்பவர் களுக்கு இது சிறப்பான வாய்ப்பாகும்.

மருத்துவமும் அது சார்ந்த படிப்புகளும்

மருத்துவம் என்றதுமே அனைவரின் கவனத்தையும் பெறுவது எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பாகும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியலுடன் கணிதம், உயிரியியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பயின்றவர்கள், ஐந்தரை ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரலாம்.

மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கையானது தற்போது வரை, மருத்துவக் கல்வி இயக்கத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான கலந்தாய்வு மூலமாக மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 15 சதவீதம் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் 21 அரசு, 26 தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதே போன்று தமிழகத்தில் செயல்படும் ஒரு அரசுக் கல்லூரி உட்பட 25 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து 5 ஆண்டு பி.டி.எஸ். மருத்துவப் பட்டத்தைப் பெறலாம்.

பிற மருத்துவப் படிப்புகள்

ஆங்கில மருத்துவப் படிப்புக்கு இணையாக சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி ஆகிய மாற்று மருத்துவப் படிப்புகளும் வரவேற்பு பெற்றுவருகின்றன. இந்த ஐந்தரை ஆண்டுக்கால மருத்துவப் படிப்புகளில் சேர மத்திய அரசுக் கல்லூரிகள் நடத்தும் அகில இந்திய அளவிலான பிரத்யேக நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும்.

மாநில அரசு கல்லூரிகளின் சேர்க்கை இந்திய மருத்துவ இயக்ககம் நடத்தும் மாநிலக் கலந்தாய்வின் வாயிலாக இறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் இரண்டு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளும், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி அரசுக் கல்லூரிகள் தலா ஒன்றும் உள்ளன. சுயநிதிப் பிரிவில் சித்த மருத்துவக் கல்லூரிகள் மட்டும் 52 கல்லூரிகள் உள்ளன.

கால்நடை மருத்துவப் படிப்புகள்

மருத்துவப் படிப்புகளில் அடுத்த வாய்ப்பாகக் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். 5 ஆண்டு பி.வி.எஸ்.சி., பயில, தேசிய அளவில் ‘அனைத்திந்தியப் ப்ரி-வெட்ரினரி டெஸ்ட்’ என்ற நுழைவுத் தேர்வு அடிப்படையிலும் மாநில அளவில் பொதுக் கலந்தாய்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

செவிலியர் படிப்புகள்

மருத்துவப் படிப்புகளுக்கு அடிப்படையான பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் பயின்றவர்கள், செவிலியர் பட்டம், பட்டயம் பயிலவும் தகுதி பெறுகிறார்கள். 4 வருடப் பி.எஸ்சி., நர்சிங் பட்டப் படிப்புகளின் சேர்க்கையானது, மத்திய அரசு செவிலியர் கல்லூரிகளில் பிரத்யேகத் தேர்வுகள் வாயிலாகவும், தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்கத்தின் மாநிலக் கலந்தாய்வு வாயிலாகவும் நடைபெறுகிறது.

இயன்முறை மருத்துவப் படிப்புகள்

மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கு இணையாக பிஸியோதெரபி துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் வளர்ந்துள்ளன. பிற மருத்துவ உயர் கல்விக்கான பிளஸ் 2 பாடப் பிரிவுகள் தகுதியுடன், மத்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்பதன் மூலமாகவோ, மாநில அளவில் பொதுக் கலந்தாய்வின் மூல மாகவோ பிஸியோதெரபி படிக்கலாம்.

மருந்தாளுநர் படிப்புகள்

மருந்து விற்பனை, விநியோகம், ஆலோசனை, ஆராய்ச்சி, அயல்நாடுகளில் பணி என வளர்ந்து வரும் வாய்ப்புகளின் அடிப்படையில் பட்டம் மற்றும் பட்டயமாக (பி.ஃபார்ம்., டி.ஃபார்ம்) பார்மஸி படிப்புகளைப் பெறலாம். மத்திய அரசு கல்லூரிகள் பிரத்யேக நுழைவுத் தேர்வு மூலமும், மாநிலத்தில் கலந்தாய்வு மூலமும் சேர்க்கை நடைபெறுகிறது.

துணை மருத்துவப் படிப்புகள்

மருத்துவத் துறை விரிவடைந்து வருவதற்கேற்ப அதிகம் வேலை வாய்ப்புள்ளதாக துணை மருத்துவப் படிப்புகள் மாறிவருகின்றன. நான்கரை ஆண்டு தொழிற்கல்வி படிப்புகள், 3 ஆண்டு பட்டப் படிப்புகள், 6 மாதத்தில் தொடங்கும் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் என அவை எண்ணிக்கையில் ஏராளமாக உள்ளன. இப்படிப்புகளை வழங்கும் நிறுவனங்களில் அங்கீகாரமற்ற மற்றும் போலி கல்வி நிறுவனங்களும் மலிந்துள்ளதால், தரமான நிறுவனத்தை அடையாளம் காண்பது அவசியம்.

SCROLL FOR NEXT