பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, பெண்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் படிப்பு என அவரவர் விரும்பும் பாடப் பிரிவுகளை பார்த்தோம். படிப்பில் வாங்கும் மதிப்பெண்ணை காட்டிலும், தனித்திறனை மையப்படுத்தி திறமையை வெளிக்காட்டுவதன் மூலம் உயர் பதவியை பிடிக்கக் கூடிய படிப்பாக மக்கள் தொடர்பு படிப்பு உள்ளது.
கலை, அறிவியல் மட்டுமல்லாமல் எந்தவிதமான பட்டப் படிப்பு படித்தவர்களும் மக்கள் தொடர்பு படிப்பை படிக்கலாம். இப் படிப்பை பொருத்தவரை படித்து முடித்ததும் அவரவர் தனித்திறமை மூலம் பி.ஆர்.ஓ., பணியிடத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது.
உலகளாவிய பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், தொழில் துறைகளும் நல்ல வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, பெரிய தொழிற்கூடம், வணிக வளாகம், ஹோட்டல், ஐடி நிறுவனங்கள் என சகலவிதமான துறைகளிலும் மக்கள் தொடர்பு பதவியிடங்கள் உள்ளன.
மக்கள் தொடர்புப் பணிக்கு முக்கிய தேவையாக எளதில் அனைவரிடமும் பேசக்கூடியவராகவும், பலதரப்பு மக்களிடம் தொடர்பில் இருப்பவராகவும், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தக்கூடிய திறமைகள் உள்ளவராகவும் இருத்தல் அவசியம். நாளிதழ் துறை சார்ந்தவர்களிடம் தொடர்பு, விளம்பர நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல், வி.வி.ஐ.பி. களுடன் நெருங்கிய தொடர்பு, நிறுவனப் பொருளை பிரபலப்படுத்தக்கூடிய யுக்தி, நிறுவனத்தை மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்லுதல், பத்திரிகைகளுக்கு செய்தி அளித்தல், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளை மக்கள் தொடர்புப் பணியில் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.
மக்கள் தொடர்பு (பப்ளிக் ரிலேஷன்) பணிக்கான படிப்பாக இருந்ததை, கார்ப்பரேட் கம்யூனிகேஷன் என்று மாற்றம் செய்து கல்வி நிறுவனங்களில் வழங்கி வருகின்றனர். 6 மாதம் முதல் ஓராண்டு வரையிலான படிப்பாக உள்ளது. ஸ்டெல்லா மேரீஸ் உள்பட பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களில் இதற்கான படிப்பு வழங்குகின்றனர். எம்.ஏ., பி.ஆர்., இரண்டாண்டு பட்ட மேற்படிப்பு உள்ளது. இப் படிப்புடன் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை கூடுதலாக கற்றவர்களுக்கு, பணி வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.
யு.கே.,வில் உள்ள வார்விக் யுனிவர்சிட்டியில் இப் படிப்பு சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது. இங்கு படிப்பவர்கள் சர்வதேச நிறுவனங்களில் மக்கள் தொடர்புப் பணிக்கு செல்ல வாய்ப்புள்ளது. கற்பனை வளம் மிக்கவர்களும், ஜோவியலாக அனைவருடன் பேசக்கூடிய திறமையுடன் தனித்திறமை கொண்டவர்கள் இப்பணியில் சாதிக்கலாம். இப்பணிக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய்வரை சம்பளம் அளிக்கின்றனர். அனுபவம் மூலம் மேலும் வருவாய் ஈட்டக்கூடிய படிப்பாக மக்கள் தொடர்புப் பணி விளங்குகிறது.