இணைப்பிதழ்கள்

ஒவ்வொரு துப்பாக்கிக்கும் இன்னொரு வரலாறு உண்டு

ஷங்கர்

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லண்டோ கேளிக்கை விடுதியில் நடந்த படுகொலைகள் மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கிப் பயன்பாடு குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்தபட்ச நடைமுறைகளுடன் ஒரு குடிமகன், ஒரு பிட்சா வாங்குவதுபோல, ஒரு டீஷர்ட் எடுப்பதுபோலக் கடைக்குச் சென்று துப்பாக்கி வாங்கும் சூழ்நிலை உள்ளது. இப்படியான சுதந்திரத் துப்பாக்கிப் பயன்பாட்டால் நாளுக்கு நாள் அதிகபட்சமாகத் துப்பாக்கிச்சூடு வன்முறைகள் மற்றும் படுகொலைகள் நடக்கும் நாடாக அமெரிக்கா உள்ளது.

உண்மையைப் போலவே

தற்கொலைகள், கொலைகள், உள்நோக்கமற்று ஏற்படும் மரணங்களுக்குக் காரணமாகத் துப்பாக்கிகள் இருப்பினும் 60 சதவீதம் அமெரிக்கர்கள், ஒரு துப்பாக்கியைச் சொந்தமாக வைத்திருப்பதைப் பாதுகாப்பாகக் கருதுகின்றனர். இச்சூழ்நிலையில் ‘ஸ்டேட்ஸ் யுனைடெட் டூ ப்ரிவண்ட் கன் வயலன்ஸ்’ தொண்டு நிறுவனம், க்ரே நியூயார்க் விளம்பர நிறுவனத்துடன் சேர்ந்து ‘கன் ஷாப்’ என்னும் விளம்பரப் படத்தை எடுத்துக் கான் திரைப்பட விழாவில் லயன் விருது வாங்கியுள்ளது. இந்த விளம்பரப் படத்துக்காக ‘உண்மையாகவே’ தோன்றும் துப்பாக்கிக் கடை ஒன்று வண்ணமயமாக மன்ஹாட்டனில் உருவாக்கப்பட்டது. முதல் முறையாகத் துப்பாக்கி வாங்க விரும்பும் இளைஞர்களைக் குறிவைத்து விளம்பரங்களும் செய்யப்பட்டன.

வன்முறை படிந்த வரலாறு

இந்தக் கடையின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒவ்வொரு துப்பாக்கியின் வடிவமைப்பு, தயாரிப்பு விவரங்களோடு, அந்தத் துப்பாக்கியால் கொல்லப்பட்டவர்களின் விவரங்கள் கொண்ட பட்டிகளும் இணைக்கப்பட்டிருந்தன. கடையில் உள்ள விற்பனை மேலாளர் மற்றும் ஊழியர்கள் துப்பாக்கிகளின் வன்முறை படிந்த வரலாற்றையும் துப்பாக்கிகளை வாங்க வந்த இளைஞர்களுக்கு விளக்கினார்கள். ஒவ்வொரு துப்பாக்கியின் ரத்தம் தோய்ந்த பின்னணிக் கதையைச் சொன்னபோது, இளைஞர்களின் முகத்தில் ஏற்படும் எதிர்வினையும் இந்த விளம்பரப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கன்ஷாப் சோதனைக் கடையையும், விளம்பரப் படத்தையும் உருவாக்கிய ‘ஸ்டேட்ஸ் யுனைடெட் டூ ப்ரிவண்ட் கன் வயலன்ஸ்’ அமைப்பு இதை ‘சமூகப் பரிசோதனை’ என்கிறது.

இந்தத் துப்பாக்கிக் கடை இரண்டு நாட்கள் மட்டுமே செயல்பட்டது. மூடப்பட்ட பிறகும் பலவிதமான வாடிக்கையாளர்களைத் தனது ஆன்லைன் ஸ்டோர் வழியாக ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

தனிநபர்கள் சுதந்திரமாய்த் துப்பாக்கியைப் பாவிக்கும் நடைமுறை தொடர்பாக நாடு முழுவதும் ‘கன்ஷாப்’ விளம்பரப்படம் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

தனிநபர் சுதந்திரமும், உரிமைகளும் மதிக்கப்படும் நாடாகக் கருதப்படும் வல்லரசான அமெரிக்காவிலேயே தனிநபர்களின் சுதந்திரமான துப்பாக்கிப் பயன்பாடு பெரும் உயிர் சேதங்களையும் பரவலான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தனிநபருக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவிலும் பல நவீனச் சாதனங்களும் எந்தக் கட்டுப்பாடுமற்றுச் சந்தையில் குவிகின்றன. அவை அத்தியாவசியமானவையா, அநாவசியமானவையா என்பதை ஒரு வாடிக்கையாளர் சிந்தித்தே வாங்கவேண்டுமென்பதை இந்த ‘கன்ஷாப்’ விளம்பரப் படம் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது.

விளம்பரப் படத்தைக் காண:>https://goo.gl/OpV6K5

SCROLL FOR NEXT