ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை சாலையில் தள்ளிக்கொண்டு வந்தார். அதில் பெரிய பார்சல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. எதிரே வந்த அவரது நண்பர் கேட்டார் “என்ன பார்சல் இது?” என்று. அதற்கு அவர் “நல்ல ஞாபகசக்தி உடையவர்களுக்கான போட்டியில் நான் முதல் பரிசு வாங்கியிருக்கிறேன் அதான் இது” என்று பதில் சொன்னார். “ரொம்ப சந்தோஷம். அது சரி! பைக்கை ஏன் தள்ளிக் கொண்டு வருகிறீர்கள்?” என்று நண்பர் கேட்டார். அதற்கு அவர் “பைக்கில் பெட்ரோல் போட மறந்துவிட்டேன்” என்று பதிலளித்தார்.
நாமும் இது போன்றே சிலவற்றை மறந்து விடுகிறோம்; சிலவற்றை நன்கு நினைவில் வைத்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஆர்வம். மகாபாரதத்தில் தருமனிடம் ஒரு யட்சன் ‘உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியர் யார்?’ என்று கேட்க அதற்கு தருமன் “ஒருவனது ஆர்வம்தான் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியன்” என்று பதிலளிக்கிறான்.
ஒரு விஷயத்தில் ஆர்வமிருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்வதில் உற்சாகம் தானாக வருகிறது. பாடங்களைப் படிப்பதிலும் அப்படித்தான். நினைவுத் திறனுக்கு முக்கியத் தேவை கவனம். சரியாகக் கவனிக்கவில்லை என்றால் நினைவில் பதியாது. அந்தக் கவனத்திற்கு முக்கியத் தேவை ஆர்வம்.
ஆர்வமூட்டாத பாடங்கள், விஷயங்களைக் கூட ஆர்வமாக்கிக் கொள்ளலாம். பேருந்தில் பயணிக்கும்போது வெளியே சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு வருவோம். ஆனால், அதில் நம் மனம் பதியாது. திடீரென்று ஒரு விபத்து நடந்தால் உடனடியாக அதில் நம் கவனம் செல்கிறது. அதுபோல் ஆர்வமில்லாத பாடங்களிலும் ஏதேனும் ஒரு விஷயம் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும். அதைக் கவனியுங்கள். மனித முகங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் நிபுணராக விளங்கிய ஒருவரிடம் அவரது திறமையின் ரகசியத்தைக் கேட்டதற்கு ஒவ்வொரு முகத்திலும் ஏதேனும் ஒரு தனித்தன்மை இருக்கும். அது தழும்பாக இருக்கலாம். கோணலாக இருக்கலாம். அதை முதலில் கவனத்தில் கொள்வேன் என்று அவர் பதிலளித்தார்.
கணிதத்தின் சூத்திரங்களைக் கூட விடுகதைகள் போல் சுவாரஸ்யப்படுத்திக் கொள்ளலாம். வேதியல் வினைகளை (chemical reactions) தனிமங்களுக்கிடையே நடக்கும் சண்டையாகக் கற்பனை செய்து கொள்ளலாம். உயிரியலிலோ கேட்கவே வேண்டாம், உடலில் நடக்கும் செயல்களை அழகான கதைபோல் படிக்கலாம். இன்சுலின் இருந்தால்தான் செல்களுக்குள் க்ளூக்கோஸ் நுழையும். இதை க்ளூக்கோஸ் என்னும் மனிதன் இன்சுலின் என்ற சாவியைத் தொலைத்துவிட்டதால் செல் என்னும் வீட்டுக்குள் நுழைய முடியாமல் தவிப்பதுபோல் ஒரு கார்ட்டூனில் பார்த்தது 20 ஆண்டுகள் கழிந்தும் என் நினைவில் இருக்கிறது.
ஆர்வத்தை உருவாக்கினால் தோனி அடித்த நூறு மட்டுமல்ல தோரியத்தின் அணு எண் தொன்னூறு என்பதும் நமக்கு மறக்காது.