அந்த மாணவி நன்கு படிக்கக்கூடியவள். பள்ளியில் நடந்த மாதிரித் தேர்வுகளில் அவள்தான் முதலாக வருவாள். கடந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவள் திடீரென சோர்வாகி மயங்கிவிட்டாள். பிறகு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்ததில், ரத்தத் தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்திருப்பது தெரியவந்தது. என்ன காரணம்? சில நாட்களாகச் சரியாகச் சாப்பிடவில்லை. மேலும் தேர்வு அன்று காலை சிற்றுண்டியையும் தவிர்த்திருக்கிறாள்.
நம் உடலில் மிகவும் சுயநலமான பகுதி மூளை. ஆங்கிலத்தில் ‘சிங்கத்தின் பங்கு’ (Lion’s Share) என்று சொல்வார்கள். ஏனென்றால், நம் உணவின் பெரும்பான்மையான சத்துக்கள் மூளையால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. விமானத்துக்கு எரிபொருள் போல, மூளைக்கு அவ்வளவு முக்கியம் உணவு.
நாள் ஒன்றுக்கு சுமார் 100 கிராம் மாவுச்சத்து (carbohydrates) மூளைக்குத் தேவைப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5 கிராம். ஒருநாள் முழுக்க நாம் உண்ணும் உணவில் மொத்தம் 200 கிராம் மாவுச்சத்துதான் இருக்கும். அதாவது நாம் 4 இட்லி சாப்பிட்டால் அதில் 2 இட்லிகளை மூளையே சாப்பிட்டு விடுகிறது.
சாதாரணமாக ஓய்வில் இருக்கும் மூளைக்கே இவ்வளவு தேவை எனும்போது தேர்வு நேரத்தில் பல்வேறு விஷயங்களைப் படிப்பதிலும், நினைவு வைத்துக்கொள்வதிலும் தொடர்ந்து பரபரப்பாக, பிஸியாக இயங்கும் மூளைக்கு எவ்வளவு ஆற்றலும் சக்தியும் தேவைப்படும்? எனவே, தேர்வு நேரங்களில் கண்டிப்பாக உணவைத் தவிர்க்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், வழக்கத்தைவிட அதிகமாகவே உண்ணவேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் அதை ஈடுகட்ட அட்ரினலின் என்கிற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இதனால் உடல் உறுப்புகளுக்கு அதிக குளூக்கோஸ் தருவதற்காக இதயம் வேகமாகத் துடிக்கிறது. திடீரென்று பேப்பர்காரரோ, கேபிள் டிவிக்காரரோ பணம் வாங்க வந்துவிட்டால் சட்டை, பேன்ட் பாக்கெட்கள், சமையலறை டப்பாக்கள் என்று கிடைக்கிற இடத்தில் எல்லாம் பணத்தைத் தேடுவது போல தசைகள், ஈரல் போன்ற உறுப்புகளிடம் இருந்து குளூக்கோஸைப் பிடுங்கி மூளைக்கு அனுப்புகிறது நம் உடல். இதனால் நம் தசைகள் பலவீனம் அடைகின்றன. தேர்வு எழுதும்போது உடல் பலவீனமாகிறது.
மேலும் சர்க்கரை அளவு குறையக் குறைய மூளையின் தெளிவாகச் சிந்திக்கும் திறனும் குறைகிறது. ஆகவே தேர்வு நாட்களில் எக்காரணம் கொண்டும் உணவைத் தவிர்க்காதீர்கள். உண்ணாவிரதம் இருப்பது தேர்தலுக்கு வேண்டுமானால் உதவலாம். தேர்வுக் காலங்களில் உதவாது. நம்மை டெபாசிட் இழக்கச் செய்துவிடும்.