இணைப்பிதழ்கள்

கேள்வி மூலை 14: தூக்கத்தில் உளற என்ன காரணம்?

ஆதி

யாராவது தூக்கத்தில் நடப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. அதேநேரம், தூக்கத்தில் திடீரென்று ஒரு சிலர் முணுமுணுப்பதையும் உளறுவதையும் நிச்சயம் நீங்களும் கேட்டிருப்பீர்கள்.

தூக்கத்தின்போது இப்படிப் பேசுவதற்குக் காரணம் என்ன? தூக்கத்தின்போது நமது உடல் உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுக்கின்றன என்றே பொதுவாக நம்பப்படுகிறது. பல உறுப்புகள் ஓய்வு எடுத்தாலும், மூளை முழுமையாக ஓய்வு எடுப்பதில்லை. விழிப்பு நிலையிலிருந்து கனவு காணும் நிலைக்குச் சென்றுவிடுகிறது.

இப்படித் தூக்கத்தில் கனவு காணும்போது, நரம்புகளுடன் உள்ள தொடர்பை மூளையின் இயங்கு முறை தற்காலிகமாகத் துண்டித்துவிடுகிறது. இதன் காரணமாகத்தான் தூங்கும்போது பேசுவது, உடல் அசைவுகள் போன்றவை தடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தத் துண்டிப்பு எல்லா நேரமும் கச்சிதமாக நடப்பதில்லை.

பெரும் பிரச்சினையா?

கனவிலிருந்து பெறப்படும் சமிக்ஞைகள் சில நேரம் நரம்புகள் வழியாகக் கசிந்து உடல் மூலம் வெளிப்படலாம். இதன் காரணமாகவே நாம் முணுமுணுக்கிறோம்; முனகுகிறோம். இன்னும் சிலரோ தெளிவாகவும் பேசுவார்கள்; அதிகபட்சமாக நடக்கவும் செய்வார்கள்.

தூக்கத்தில் ஒருவர் பேசுவது தொடர்பற்ற குழப்பமான வாக்கியங்களாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் அது இலக்கணப் பிழையற்றே இருக்கும். தூங்குபவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தின் தாக்கமாக அந்தப் பேச்சு இருக்கலாம். அதேநேரம் சம்பந்தமற்று விசித்திரமாகவும் முட்டாள்தனமாகவும்கூட இருக்கலாம்.

தூக்கத்தில் பேசுவதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், ஒருவருக்கு உள்ள மன அழுத்தம், மற்ற உளவியல் பிரச்சினைகள் போன்றவை தூக்கத்தில் பேசுவதை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிறையவே இருக்கிறது.

SCROLL FOR NEXT