வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குச் சொந்த மண்ணின் மீது பற்றும் அக்கறையும் இருக்கிறது என்பதற்கு உதாரணம் அமெரிக்க வாழ் சகோதரர்களான ஆனந்த் அருளொளி, அருண் அருளொளி. அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் உள்ள வெர்னன் ஹில்ஸ் நகரில் 19 வயதான ஆனந்தும் 15 வயதான அருணும் பெற்றோருடன் வசிக்கிறார்கள். இந்திய மருத்துவப் படிப்புக்கு இணையான ‘பையோகெமிஸ்ட்ரி அண்டு நியூரோ சைன்ஸ்’ (BioChemistry and Neuro Science) என்கிற பட்டப் படிப்பைப் படித்துவருகிறார் ஆனந்த். பத்தாம் வகுப்புக்கு இணையான பத்தாம் கிரேட் முடித்திருக்கிறார் அருண். இருவரும் தற்போது விடுமுறை நாட்களைக் குதூகலமாகக் கொண்டாடிவருகிறார்கள். ஆனால் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதில்தான் விஷயம் இருக்கிறது!
விடுமுறை நாட்களைத் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என உறவினர்களோடு மகிழ்ச்சியாகச் செலவழிக்கச் சென்னை வந்தவர்கள்; வரும்போதே ஒரு நோக்கத்தோடு வந்திறங்கினார்கள். அமெரிக்காவில் உள்ள ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ சார்பாகச் சென்னை அமைந்துகரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தந்தார்கள்.
தேவை செயல்முறைக் கல்வி
சமீபகாலமாக ‘ஸ்மார்ட் கிளாஸ்ரூம்’ என்கிற சொல் நம்முடைய கல்விநிலையங்களில் பிரபலம்! கூடுதல் கட்டணம் வசூலித்துவிட்டு ஏ.சி., கணினி, புரஜக்கடர், டிவி, ஸ்பீக்கர், வெள்ளை பலகை, தொடுதிரை மடிகணினி இப்படி ஹைடெக் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகளையும் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் வைத்துப் பாடம் கற்பிக்கும் முறையையும் ஸ்மார்ட் கிளாஸ்ரூம் என்ற பெயரில் பல பள்ளிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திப் பாடம் கற்பித்தால் கல்வி தரத்தை உயர்த்திவிட முடியுமா?
உலக நாடுகளிலேயே வளர்ச்சியின் உச்சத்தை எட்டியிருக்கும் அமெரிக்காவில் ‘ஸ்மார்ட் கிளாஸ்ரூம்’ என்ற சொல்லே கிடையாது. காரணம் அங்கிருக்கும் அத்தனை வகுப்பறைகளிலும் இவை அடிப்படை வசதிகளாக வழங்கப்படுகின்றன. ஆரம்பக் கல்வி முதல் அமெரிக்காவில் பயின்று வரும் ஆனந்தும் இதே கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்.
விடுமுறையின்போது இரு வாரங்கள் சென்னையில் இருக்கும் அரசு பள்ளியின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் டூவரையில் உள்ள மாணவர்களுக்கு வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடங்களில் சிறப்பு வகுப்பு எடுத்தபோது இந்தியக் கல்வி முறைக்கும் அமெரிக்கக் கல்வி முறைக்கும் இடையில் உள்ள இடைவெளி துல்லியமாகத் தெரிந்ததாகச் சொல்கிறார் ஆனந்த. “வகுப்பில் ஆசிரியர் எப்படிப் பாடம் நடத்துகிறார் அதை எப்படி மாணவர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் முதல் இரண்டு நாட்கள் கவனித்தேன். கரும்பலகையில் வரைந்தோ கணினி திரையில் வீடியோ படமாகக் காண்பித்தோ புத்தகத்திலிருக்கும் அறிவியல் பாடத்தை விளக்குகிறார்கள்.
உதாரணத்துக்கு இயற்பியலில் ‘விசை மற்றும் இயக்கம்’ (Force and Motion) விளக்க குன்றிலிருந்து கல்லை எறியும் காட்சியை வரைகிறார்கள். ஆனால் இதே விதியை விளக்க நான் மாணவர்களை நேரடியாகப் பள்ளி மைதானத்துக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருக்கும் கற்களை மாணவர்கள் கையால் பொறுக்கி எறியும்போது நேரடியாக இயற்பியல் விதியைச் செயல்முறைப்படுத்தி புரிந்துகொண்டார்கள். மேலும் புத்தகப் பாடத்தைப் புரிந்து புரியாமலும் படித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற சோர்வு நீங்கி உற்சாகமாகக் கற்றுக்கொண்டார்கள்” என்கிறார் ஆனந்த்.
இத்தகைய செயல்முறை கல்வி ‘ஹேண்ட்ஸ் ஆன் லேர்னிங்’ (‘Hands on Learning’) என்ற பெயரில் அமெரிக்காவில் பின்பற்றப்படுகிறது.புத்தகங்களையும் தேர்வு விடைத்தாள்களையும் ஒப்பிட்டால் அச்சடித்த மாதிரி இருப்பது வருத்தத்துக்குரியது. ‘இப்படி இருந்தால் தனித்தன்மைக்கு இடம் ஏது’ என்னும் ஆழமான கேள்வியை எழுப்புகிறார் ஆனந்த்.
படைப்பாற்றலுக்குத் தேவை மொழி
“நான் பிறந்ததே அமெரிக்காவில்தான். ஆங்கில வழி கல்வி கற்பதால் வ.ச.பாபு நடத்தும் ‘அமெரிக்கத் தமிழ் பள்ளி’யில் சேர்ந்து தமிழை எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டேன். இப்போது சென்னையில் தமிழ் வழிக் கல்வி முறையில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மொழி பாடம் சொல்லித்தந்தேன். அப்போது சிலருக்கு உயிர் எழுத்து, மெய் எழுத்துகூடத் தெரிவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் அருண்.
முதலில் ஆங்கில இலக்கணம் மட்டுமே சொல்லித்தர வந்தவர் மாணவர்களின் நிலையைப் பார்த்துவிட்டு ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய மூன்று பாடங்களையும் சொல்லித்தந்திருக்கிறார். மொழி பாடங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு குழந்தையின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் கல்வியாக இந்தியக் கல்வி மாற வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் தெரிவித்தார்.
விடுமுறை நாட்களைக் குதூகலமாகச் செலவழிக்க வாய்ப்பும் வசதியும் இருந்தும் தங்களுடைய சக வயதினரின் கல்வி அறிவை மேம்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கும் ஆனந்த், அருண் போன்ற இளைஞர்கள் எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு பெருமைதான்!