திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் முதல் தலைமுறையாக பள்ளி இறுதி ஆண்டை முடித்திருந்தார். தான் படிக்க முடியவில்லை என்றாலும் தன் மகனை நன்றாகப் படிக்க வைத்து உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்பது முத்துக்குமரனின் தந்தை குப்புசாமியின் லட்சியம். கல்லிடைக்குறிச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பில் 460 மதிப்பெண்கள் பெற்று, அதே பள்ளியில் தொடர்ந்து படித்தார் முத்துக்குமரன்.
ஆனால் பிளஸ் டு இறுதித் தேர்வு நேரத்தில் அம்மை உக்கிரமாகத் தாக்கியது. சரியாக படித்து தேர்வெழுதாத நிலையில் 60 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே பெற்றார்.
செய்வதறியாமல் தவித்த முத்துக்குமாரிடமும் அவருடைய அப்பாவிடமும், “முத்துக்குமரன் நல்லா படிக்கிறவன். என்ன பண்ணுறது. அவன் மார்க் கம்மியா வாங்குனதால மெரிட்ல சீட் கிடைக்காது. ஆனா வெளியூர்ல உள்ள ஏதாவது ஒரு நல்ல கல்லூரியில மேனேஜ்மென்ட் கோட்டாவில் பி.இ. மெக்கானிக்கல் சீட் வாங்க முயற்சிக்கலாம். ஆனால் அதற்குப் பணம் நிறைய செலவாகும்” என்றார் முத்துக்குமரனின் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையா. “அவ்வளவு பணம் இல்லை” என குப்புசாமி சொல்ல அதற்கு, “படிப்புச் செலவுக்காக வங்கியில் கல்விக் கடன் வங்கலாம்” எனும் தலைமை ஆசிரியரின் ஆலோசனையை குப்புசாமி ஏற்றுக் கொண்டார்.
அதன்படி சேமிப்புப் பணத்தை எல்லாம் கொடுக்க மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கே சரியாகிவிட்டது. அடுத்து, கல்விக் கடன் பெற தேசியமயமாக்கப்பட்ட வங்கியை அணுகினார் முத்துக்குமரனின் அப்பா. முதலில் நிச்சயமாக கடன் கொடுப்பதாகச் சொன்னார் வங்கி மேலாளர். ஆனால் நீண்ட அலைக்கழிப்புக்குப் பிறகு, “லோன் கேக்குறது தப்பில்லை. ஆனால், அதுக்கெல்லாம் நல்லா படிக்கிற புள்ளைய பெத்துருக்கணும். அவசரமா வேணும்னா ஆடு, மாடுக்குதான் லோன் கிடைக்கும். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மட்டுமே கல்விக் கடன் தரமுடியும். உன் மகனுக்கு லோன் தரமுடியாது” என அமில வார்த்தைகளை உமிழ்ந்தார் வங்கி மேலாளர்.
இதைக் கேட்டு நொறுங்கிப்போனது குப்புசாமியின் குடும்பம்.
இப்படிப்பட்ட சில வங்கி அதிகாரிகளின் கடுமையான போக்கினாலும் அரசின் கல்வி தொடர்பான உதவித் திட்டங்களை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததாலும் பலரின் கல்லூரி மற்றும் மேற்படிப்பு நிராசையாகவே போய்விடுகிறது. சரியான நேரத்தில் கிடைக்காத கல்விக்கடனால் பறிபோவது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல. பலரின் வாழ்க்கையின் போக்கும்தான்.
கல்விக் கடன் உத்தரவு
கல்விக் கடன் தொடர்பான பிரச்சினைகளுக்கெல்லாம் வழிகாட்டுதலாக சிறப்புமிக்க ஒரு உத்தரவை ஜூன் 2014-ல் பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் அடங்கிய பெஞ்ச்.
அதில் குறிப்பிடவற்றுள் முக்கியமானவை:
# கல்விக் கடன் என்பது பின்தங்கிய மற்றும் பிற தரப்பினரையும் சமுதாய ரீதியாக உயர்த்தக்கூடிய மற்றும் சமூக நலனைக் காக்கக் கூடிய ஒரு நலத் திட்டமாகும்.
# ஒரு கல்வி நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் கோட்டா ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் சேரும் பட்சத்திலும் கல்விக் கடன் கோர உரிமையுள்ளது என்பதை எல்லா வங்கிகளும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
கல்விக் கடன் பெற மாணவரின் தகுதி
# கல்விக் கடன் விண்ணப்பிக்கும் மாணவர் இந்திய நாட்டவராக இருக்க வேண்டும்.
# 10 மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் அல்லது அதற்கு நிகரான தேர்வு முடித்து, இந்தியாவுக்குள் அல்லது வெளிநாட்டில் உயர் கல்விக்கு நுழைவுத்தேர்வு அல்லது தகுதித்தேர்வு முடித்து சேர்க்கை அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.
# நுழைவுத்தேர்வு அல்லது மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாக வைத்து தேர்வு செய்யாமல் அந்தப் படிப்புக்கு உண்டான வேலை வாய்ப்புகளைக் கவனத்தில் கொண்டு கல்விக் கடன் வழங்க வேண்டும்.
# சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பொது கோட்டாவில் சேர்க்கை பெற தகுதி இருந்தும் குறிப்பிட்ட பாடப்பிரிவு வேண்டும் என்பதற்காக மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்து அதன்படி கல்விக் கடன் கோரினால் அதற்கும் வங்கிகள் கல்விக் கடன் கொடுக்க வேண்டும்.
கல்விக் கடன் பரிசீலனைக்கு
கல்லூரி விடுதிக்கான கட்டணங்கள், தேர்வு, நூலகம் ஆய்வகத்துக்கான கட்டணம், வெளிநாடுகளுக்குப் போகும் போக்குவரத்து மற்றும் வழிச் செலவுகள், தேவைப்பட்டால் கல்விக் கடன் பெறுபவருக்கு உரிய காப்பீடு, கல்வி நிறுவனத்தால் உரிய பில் மூலமாக செலுத்தக்கூடிய பிணைத்தொகை இன்னும் பல செலவுகள் இதற்குள் அடக்கம்.
கல்விக் கடன் நிர்ணயம்
இந்தியாவில் கல்வி கற்க ரூபாய் 10 லட்சம் வரையும், வெளிநாட்டில் கல்வி கற்க ரூபாய் 20 லட்சம் வரை கொடுக்கப்பட வேண்டும்.
“பணம் இல்லை என்பதால் கல்வி இல்லை” என்கிற அவலநிலை இந்த உத்தரவால் உறுதியாய் மாறும். கல்விக் கடன் பெற்று வாழ்வில் சிறப்பான நிலையை அடையும் ஒவ்வொரு மாணவரின் குடும்பமும் இந்த உத்தரவைப் பிறப்பித்த இரு நீதிபதிகளுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
‘வாதி பிரதிவாதி நீதி’ புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு கட்டுரையின் சுருக்கம்.
இதே போல 50 வெவ்வேறு தலைப்புகளின் கீழ் நடைமுறை பிரச்சினைகளை உதாரணமாக விவரித்து அவற்றுக்கு சட்டரீதியானத் தீர்வை இப்புத்தகம் விளக்குகிறது.
வாதி பிரதிவாதி நீதி
ந.இராஜா செந்தூர் பாண்டியன், வழக்கறிஞர் குமுதம் பு(து)த்தகம் வெளியீடு புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10. போன்: 2642 6124 / 45919141