இணைப்பிதழ்கள்

இசையும் அழகுக் கலையும் தரும் வேலைவாய்ப்புகள்

ஜெயபிரகாஷ் காந்தி

சிலர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பர். ஆனால், அவர்கள் சில தனித் திறன்களில் சிறந்து விளங்குவர். இவர்கள் தங்கள் தனித் திறன் அடிப்படையிலான கல்வியை தேர்வு செய்து பயணித்தால் சிறந்த எதிர்காலத்தைப் பெறலாம். தொழில்நுட்பம் சார்ந்த இசைத் துறையிலும் அழகுக் கலைத் துறையிலும் இவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

படிக்கும் காலத்தில் பாடப் புத்தகங்களை மறந்து பாட்டும், இசையுமாய் அனுபவித்தவர்களுக்கு ஏற்ற பாடப் பிரிவுகள் பல உள்ளன. விஷுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட அனைத்து பட்டப் படிப்புகளை முடித்தவர்களும் ஆடியோ என்ஜினீயரிங், சவுண்ட் என்ஜினீயரிங் வகுப்பில் சேரலாம். இதில் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான வகுப்புகள் உள்ளன. சென்னையில் எஸ்.ஏ.இ. இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களில் இதை கற்கலாம். இசை அமைப்பது, பதிவு செய்வது, எடிட்டிங் செய்வது என அனைத்து தொழில்நுட்பங்களும் இதில் கற்பிக்கப்படும்.

இதை முறையாக கற்பதன் மூலம் சிறந்த சினிமா துறை, தொலைக்காட்சி நிறுவனங்கள், ஆடியோ நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள், மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் நிறுவனங்கள் என இசை சார்ந்த அனைத்துத் துறைகளிலும் சிறந்த வேலைவாய்ப்பு பெறலாம். மேற்கண்ட தொழில்நுட்பப் படிப்பு தவிர, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருவையாறு ஆகிய இடங்களில் இருக்கும் அரசு இசைக் கல்லூரிகளில் வீணை, மிருதங்கம், வயலின், பரத நாட்டியம் உள்ளிட்ட இசைத் தொடர்பான கலைகளை கற்கலாம். இவற்றில் பெரியதாக வேலைவாய்ப்புகள் இல்லை என்றாலும்கூட அனுபவம், திறமை அடிப்படையில் பெரிய அளவில் சம்பாதிப்பதுடன் பெரும் புகழையும் அடையலாம்.

வீட்டிலேயே சுயமாக தொழில் புரிய விரும்பும் பெண்களுக்கு பியூட்டிஷியன், காஸ்மெட்டாலஜி ஆகிய படிப்புகள் உள்ளன. அழகுக் கலை உலகளவில் முக்கியத்துவம் பெற்று அதில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது. பியூட்டி தெரபி, ஹேர் டிரஸ்ஸிங், ஸ்பா மேனேஜ்மென்ட், நேட்ச்சர் கியூர், பியூட்டி கன்சல்டன்சி உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் அழகுக் கலையில் உள்ளன.

இந்தியாவில் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மட்டுமே பி.டெக். காஸ்மெட்டிக் டெக்னாலஜி பட்டப் படிப்பு இருக்கிறது. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் பியூட்டிஷியன் பட்டயப் படிப்பு உள்ளது.

இது தவிர, பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களில் இதுதொடர்பான சிறப்பு பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றை கற்று தேர்பவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பிரபல பியூட்டி பார்லர்கள், ஸ்பா நிறுவனங்கள் மற்றும் ரோமம், தோல் உள்ளிட்ட அழகுக் கலை சிகிச்சை தொடர்புடைய மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுயத் தொழிலும் செய்யலாம்.

SCROLL FOR NEXT