பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் பெரிய பிரச்சினை அடுத்து என்ன படிப்பது என்பதுதான். பொறியியல் படிப்பு எனில் 4 ஆண்டுகளுக்குப் பிரச்சினைக்கு இருக்காது. அதன் பிறகு ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலையில் தொற்றிக்கொள்ளலாம் என்பது பி.இ., பி.டெக். சேரும் மாணவ-மாணவிகளின் கணிப்பு.
கலைக் கல்லூரிகளில் பி.எஸ்சி., பி.ஏ., பி.காம். உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவர்கள் 3 ஆண்டுகளில் இளங்கலை முடித்துவிடுவார்கள். அதன் பிறகு முதுகலைப் படிக்கலாமா ஏதாவது ஒரு வேலையில் சேரலாமா என்ற குழப்பம் தோன்றும்.
இதுபோன்ற சூழலில் பிளஸ்-2 முடித்துவிட்ட மாணவ-மாணவிகளுக்குக் கைகொடுக்கும் படிப்புகள்தான் ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலைப் படிப்புகள் (Integrated courses). அந்த வகையில், கணிதம், இயற்பியல், வேதியியல், வாழ்வியல், பொருளாதாரம், ஆங்கிலம், சமூகவியல் எனப் பலவிதமான கலை மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளை வழங்குகிறது மத்தியப் பல்கலைக்கழகம். தமிழ்நாடு (திருவாரூர்), கேரளம், ராஜஸ்தான், ஜார்கண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல 7 மாநிலங்களில் மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கிவருகின்றன.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சியில் வேதியியல், பொருளாதாரம், வாழ்வியல், கணிதம் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு படிப்பிலும் தலா 30 இடங்கள் உள்ளன. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மத்திய அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீடு உண்டு.
இந்த ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகளில் பிளஸ்-2 மாணவர்கள் நேரடியாகச் சேரலாம். தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எம்.எஸ்சி. வேதியியல், எம்.எஸ்சி. கணிதம் ஆகிய படிப்புகளில் சேர பிளஸ்-2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் ஆகிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 50 சதவீத மதிப்பெண் போதும்.
எம்.எஸ்சி. பொருளாதாரப் படிப்புக்கு பிளஸ்-2வில் கணிதம் அல்லது பொருளாதாரம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் வேண்டும். இட ஒதுக்கீட்டு வகுப்பினருக்கு 55 சதவீதம். இதேபோல், எம்.எஸ்சி. வாழ்வியல் (Life Science) பிளஸ்-2-வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்திருக்க வேண்டும். மேற்கண்ட மதிப்பெண் தகுதிதான் இதற்கும் பொருந்தும்.
இந்த ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்களைத் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் (www.cutn.ac.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500-ஐ (பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300 மட்டும்) ஆன்லைனில் பெறப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செலான் மூலமாகவோ அல்லது நெட்பேங்கிங் மூலமாகவே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 12-ம் தேதி. நுழைவுத்தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு மையம், தேர்வுக்கான பாடத்திட்டம், கல்விக்கட்டண விவரம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.