இந்தப் புத்தாண்டு ஒரு நொடி தாமதமாகப் பிறந்தது. டெல்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் வானியல் கடிகாரத்தில் கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டதுதான் அதற்குக் காரணம். டிசம்பர் 31 முடிவடையும் தருணத்தில் 11:59 மணி 59 விநாடிகள் ஆனபோது கூடுதலாக ஒரு நொடி சேர்க்கப்பட்டது. பூமியின் சுழற்சி வேகம், நிலவின் புவியீர்ப்பு விசை, பூகம்பங்கள் போன்ற பல காரணங்களால் நேரம் மாறுபடும் வாய்ப்புள்ளது. பூமியின் வேகத்தை வைத்துதான் வானியல் கடிகாரம் கணிக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகம் குறைவது வானியல் கடிகாரத்தில் கால தாமதத்தை ஏற்படுத்தும். இந்த வானியல் கடிகாரத்தின் கால தாமதத்துக்கு ஏற்பக் கடிகாரத்திலும் லீப் நொடி சேர்க்கப்பட வேண்டும். இந்த லீப் முறை 1972 முதல் நடைமுறையில் உள்ளது. இதுவரை 26 கூடுதல் லீப் நொடிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியாக ஜூன் 30 2015-ல் ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது.
புதிய தளபதிகள்
இந்திய ராணுவத் தளபதியாகப் பொறுப்பு வகித்த ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக், விமானப் படைத் தளபதியாகப் பொறுப்பு வகித்த ஏர் சீப் அரூப் ராஹா ஆகியோர் 2016 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஓய்வுபெற்றனர். இதையடுத்து புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், புதிய விமானப் படைத் தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பிபின் ராவத் இந்திய ராணுவத்தின் 27-வது ராணுவத் தளபதி. பிரேந்தர் சிங் தனோவா இந்திய விமானப் படையின் 25-வது ஏர் சீப் மார்ஷல்.
புதிய உடல் உறுப்பு கண்டுபிடிப்பு
அயர்லாந்து லிமரிக் பல்கலைக் கழகத்தின் அறுவை சிகிச்சைப் பேராசிரியர் ஜெ. கால்வின் காபே புதிய உடல் உறுப்பைக் கண்டு பிடித்துள்ளார். அந்த உறுப்புக்கு 'Mesentery' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜீரணப் பகுதியில் அமைந்துள்ள இந்த உறுப்பு குடல் பகுதியையும் அடி வயிற்றுப் பகுதியையும் இணைக்கிறது. இது மனித உடலின் 79-வது உறுப்பு. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இந்த உறுப்பு ஒரு முழுமையான உறுப்பு என்பது புலனாகியுள்ளது. இதற்கு முன்பு இது பல பாகங்களால் ஆன, புரிந்துகொள்ள முடியாத ஒரு அமைப்பாகவே பார்க்கப்பட்டுவந்தது. இந்தப் புதிய உறுப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் வயிற்றுப் பிரச்சினை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிதாகும் என அவர் கூறினார்.
யூ.பி.எஸ்.சி க்குப் புதிய தலைவர்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணை யத்துக்குத் தலைவராகப் பேராசிரியர் டேவிட் ஆர்.சியாம்லி நியமிக்கப்பட்டுள்ளார். சியாம்லி அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியவர். வரலாற்றுத் துறைப் பேராசிரியர். சட்டப் பிரிவு 316-ன்படி இந்தப் பொறுப்புக்கு இவரை குடியரசு தலைவர் நியமித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது சட்டப் பிரிவு 315-ன் படி உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்திய ஆட்சிப் பணி, வெளியுறவுத் துறை, இந்தியக் காவல் துறை, வனத்துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட பல பொறுப்புகளுக்கான பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது இதன் பணி. இது தலைவர் உள்பட உறுப்பினர்கள் பத்து பேரைக் கொண்டது. இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியேற்பு
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.எஸ். தாக்குரின் பதவிக் காலம் ஜனவரி 4-ம் தேதி அன்று நிறைவடைந்தது. அவருக்கு அடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹருக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 2017ஆகஸ்ட் 4 வரை இவரது பதவிக் காலம் நீடிக்கும். இவர் 44-வது உச்ச நீதி மன்ற நீதிபதி ஆவார். பஞ்சாபைச் சேர்ந்த இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள முதல் சீக்கியர். பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துள்ளார்.
ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல்
இந்தியத் தேர்தல் ஆணையம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா, உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. கோவா (40 தொகுதிகள்) , பஞ்சாப் (117 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தராகண்ட் (70 தொகுதிகள்) மாநிலத்துக்கு பிப்ரவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் (60 தொகுதிகள்) மார்ச் 4, 8 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் (403 தொகுதிகள்), பிப்ரவரி 11, 15, 19, 23, 27 மார்ச் 4, 8 என 7 கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 16 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.