இணைப்பிதழ்கள்

யு.ஜி.சி. மானியம் பெற முடியாமல் 4 பல்கலைக்கழகங்கள் தவிப்பு

ஜெ.கு.லிஸ்பன் குமார்

யு.ஜி.சி.யின் 12-பி அந்தஸ்து இல்லாததால் கல்வி, ஆராய்ச்சி பணிகளுக்கு மானியம் பெற முடியாமல் 4 தமிழக பல்கலைக்கழகங்கள் தவிக்கின்றன.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.

பல்கலைக்கழகங்களின் உள்கட்ட மைப்பு, கல்வி ஆராய்ச்சிப் பணிகளுக்கு யு.ஜி.சி., மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை போன்றவை நிதி உதவி அளிக்கின்றன. இந்த மானியங்களை எல்லாம் பெற வேண்டுமானால் யு.ஜி.சி.யின் 12-பி அந்தஸ்து அவசியம்.

உள்கட்டமைப்பு வசதி, தேவையான பேராசிரியர்கள், நிரந்தர கட்டிடம், ஆய்வகம் உள்ளிட்ட தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு 12-பி அந்தஸ்து வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 14 பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் 180-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த அந்தஸ்தை பெற்று கோடிக்கணக்கில் மானியங்களை பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களுக்கு இன்னும் 12-பி அந்தஸ்து கிடைக்கவில்லை.

இதில் வேதனை என்னவெனில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டு (2002) பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் அவற்றால் 12-பி அந்தஸ்து பெற முடியவில்லை. அதேபோல், 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உடற்கல்வி பல்கலைக்கழகத்துக்கும், 2008-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கும் அந்த அந்தஸ்து கிடைக்கவில்லை.

ஆண்டுதோறும் இழப்பு

தொடங்கி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு சொந்த கட்டிடம் கூட கிடையாது. இன்னும் சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வி வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில்தான் இயங்கி வருகிறது.

கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு கோடிக்கணக்கில் மானியம் தர யு.ஜி.சி. மற்றும் பல்வேறு அரசு அமைப்புகள் தயாராக உள்ளன.

ஆனால், அந்த நிதியை பெறக்கூடிய தகுதி இல்லாமல் 4 தமிழக பல்கலைக்கழகங்களும் கோடிக்கணக்கிலான மானிய உதவிகளை இழப்பது வேதனையளிப்பதாக உள்ளது.

SCROLL FOR NEXT