இணைப்பிதழ்கள்

மகளிரியல் கல்வி: பெண்ணைப் பற்றி படிக்கலாமா?

ம.சுசித்ரா

ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று சர்வதேச அளவில் ஒரு குறிக்கோள் முன்னெடுக்கப்படும். அந்த வகையில் 2017-ன் இலக்கு, ‘மாற்றத்துக்குத் துணிந்து தயாராகுங்கள்’ (#BeBoldForChange). இந்த மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கிப் பணியிடங்களில், அரசியல் தளங்களில் பிறகு ஒட்டுமொத்தச் சமூகத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே தீர்மானத்தின் அடிநாதம். அதில் கல்விக்கு முக்கிய பங்குண்டு.

என்ன பார்வை?

பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை மறுக்க இன்று யாரும் துணியமாட்டார்கள். ஆனால் பெண்களைப் பற்றிய கல்வி அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியுமா?

பெண் குறித்த கல்வி என்றாலே பெண்களின் எழுச்சிக்காகப் போராடியவர்களை, சாதனை மகளிரைப் பற்றியது என்கிற பார்வைதான் நிலவுகிறது. ஆனால் மகளிரியல் கல்வி (Women / Gender studies) என்பது மகளிர் பற்றியது மட்டுமல்ல. அரசியல், இலக்கியம், வரலாறு, சமூகவியல், தத்துவம், கோட்பாடு, உளவியல் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கிய படிப்பு இது. ஒரே ஒரு வித்தியாசம், அத்தனை துறைகளையும் பெண்ணியப் பார்வையில் இது உற்றுநோக்குகிறது.

பெண்மை என்னும் பிம்பம்

நம்மைச் சுற்றிலும் இயங்குபவைக்குப் பின்னால் இயங்கும் அரசியலை உள்ளார்ந்து புரிந்துகொள்ள நம்மைக் கூர்மைப்படுத்துகிறது.

உதாரணமாக, சமகாலத்தில் பெண்மை குறித்த பிம்பத்தை ஊடகங்கள் எப்படிக் கட்டமைக்கின்றன என்பதையும் இது அவதானிக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைகள், விளம்பரங்கள் மட்டுமின்றி வீடியோ விளையாட்டுகள், இணையதளங்கள் ஆகியவை பாலின அடையாளங்களை எப்படித் திட்டமிட்டு வரையறுக்கின்றன என்பது இதில் விவாதிக்கப்படுகிறது.

ஆண்மை, பெண்மை என்கிற முத்திரை குத்தப்படுவதை அகமும் புறமுமாக அலசி ஆராய்கிறது. அவை இயற்கையாக ஆணிடமும் பெண்ணிடமும் காணப்படும் இயல்பு என்கிற பொதுபுத்தியை இது அசைத்துப்பார்க்கிறது. சமூக, அரசியல், பொருளாதார, சட்ட அமைப்புகளால் திட்டமிட்டு அவை கட்டமைக்கப்பட்டவை என்பதை வெட்ட வெளிச் சத்துக்குக் கொண்டுவருகிறது. ஆண்வழிச் சமூகம் உருவானதன் வழித்தடத்தைக் கண்டறிந்து, அதன் மூலம் நிறுவப்பட்ட ஆதிக்கத்தைக் களைய முனைகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய சமூகம்

வர்க்கப் போராட்ட வரலாறு, சாதியப் பாகுபாட்டின் அரசியல், ஆண், பெண், மாற்றுப் பாலினங்களின் அரசியல் உள்ளிட்ட பல அடுக்குகளுக்கு இடையிலான தொடர்பும் இதில் விவாதிக்கப்படுகிறது. பண்பாட்டு அசைவுகளை விளங்கிக்கொள்ளவும் அதில் பெண்களுக்கான இடத்தைப் புரிந்துகொள்ளவும் இது வழிகாட்டுகின்றது.

விளிம்புக்குத் தள்ளப்படும் சூழலிலிருந்து அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக மாறவும் யத்தனிக்கச் சொல்கிறது. இக்கல்வி மனிதநேயத்தின் அடி ஆழத்தைத் தேடிக் கண்டறிந்து சமூகநீதிக்கு வழிகாட்டுகிறது. பெண்கள் ஏன் பொதுவெளியில், உயர்நிலைப் பணிச் சூழலில் புறக்கணிக்கப்படுகின்றனர், அதை எதிர்கொள்வது எப்படி, மாற்றம் சாத்தியமாவது எப்படி என்பது உள்ளிட்டக் கேள்விகளை எழுப்பிச் சமத்துவச் சமூகத்தை நோக்கிச் செயல்பட உந்தித்தள்ளுகிறது.

பாலின நீதி என்பது…

நிதர்சனங்களுக்கும் கல்விக்கும் இடையிலான இடைவெளியைக் களைவதில் மகளிரியல் கல்விக்கு முக்கிய பங்குள்ளது. அது நேரடியாகச் சமூகத்துடனான உரையாடலாக நிகழ்கிறது. குறிப்பாகப் பல்வேறு நிலைகளையும் நிலைப்பாடுகளையும் உள்ளடக்கிய புலமாக இயங்குகிறது. பாலின நீதி என்பதை ஆண், பெண், மாற்றுப் பாலினத்தவர்கள் என அனைவரையும் சமத் தளத்தில் அங்கீகரித்து, அவரவருக்குரிய நியாயமான உரிமைகளை மீட்டெடுக்கும் சிந்தனையாகும்.

ஆக, மகளிரியல் கல்வியானது பணிக்கான கல்வி என்பதைவிடவும் வாழ்க்கைக்கான கல்வி. அதேநேரத்தில் மற்றப் படிப்புகளைப்போல ஒரு துறை அறிவு மட்டுமல்லாமல் பல்துறை அறிமுகம் இதில் கிடைப்பதால் வேலைக்கான வாய்ப்பும் விரிவடையும்.

எங்கே படிக்கலாம்?

தமிழகத்தில் மகளிரியல் கல்வி கற்பிக்கும் முக்கிய நிறுவனங்களில் சில:

முதல் முயற்சி

1960-களில் உலகம் முழுவதிலும் பாலினக் கல்விக்கான (Gender Studies) தேவை உணரப்பட்டது. 1916-ல் மும்பையில் நிறுவப்பட்டஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்ஸே மகளிர் பல்கலைக்கழகத்தில் 1974-ல் இந்தியாவின் முதல் மகளிரியல் கல்விக்கான ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்தான் 1988-ல் பாலின சமத்துவத்தைச் சாத்தியப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையில் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுப் பாலின ஆய்வு மையம் திறக்கப்பட்டது.

SCROLL FOR NEXT