பண மதிப்பு நீக்கம் என்கிற விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்த பிறகு வங்கியை நினைக்காத நாளில்லை. தினந்தோறும் வங்கியைத் தேடித் தேடிச் செல்வதாகிவிட்டது. அதே போலச் சமீப காலமாக வங்கித் துறையில் அதிக எண்ணிக்கையில் பணி நியமனத்துக்கான அறிவிப்புகளும் அழைப்புகளும் வந்துகொண்டே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள்.
அறிந்ததும் அறியாததும்
முன்பை விடவும் தற்போது வணிகத் துறை அதன் கிளைகளை விஸ்தாரமாகப் பரப்பிவருகிறது. பொதுவாக வங்கி வேலை என்றதுமே எழுத்தர், காசாளர், மேலாளர் போன்ற சில பதவிகள் மட்டும்தான் நினைவுக்கு வரும். அதேபோல வங்கியின் செயல்பாடுகளைப் பணச் சேமிப்பு, கடன் பெறுவது இப்படிச் சில நடவடிக்கைகளுடன் மட்டுமேதான் தொடர்புபடுத்திக்கொள்கிறோம். ஆனால், வங்கித் துறையில் ஏகப்பட்ட பணிகள் உள்ளன.
சந்தைப்படுத்துதல், பாதுகாப்பு, பொறியியல் தொழில்நுட்பம், சட்டம், ஆபத்து மேலாண்மை, நிதி, மனிதவள மேலாண்மை, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் இப்படி நிபுணத்துவம் சார்ந்த பல பணிகள் வங்கித் துறையில் இருக்கின்றன. அனைத்துப் பட்டதாரிகளும் புரொபேஷனரி அதிகாரி வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்தான். ஆனால், மேலே குறிப்பிட்ட பணிகளுக்குத் தனித்துறை வல்லுநர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். வங்கித் துறையின் சில தனித்துறைப் பணிகளின் தன்மையை இப்போது பார்ப்போம்.
மார்க்கெட்டிங் அதிகாரி
சந்தைப்படுத்துதலுக்கு இன்று அத்தனை துறைகளும் முக்கியத்துவம் தருகின்றன. பொதுத்துறை வங்கிகளும் இந்தப் போட்டியில் இணைந்துவிட்டன. வங்கியின் சிறப்புத் திட்டங்களை மக்களிடம் எப்படிக் கொண்டுசேர்ப்பது என்பதை ஆராயும் பணி இது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வங்கியில் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான கருத்துகளை மார்க்கெட்டிங் அதிகாரிகள் வழங்குவார்கள். வங்கி நிறுவனத்துக்கும் பொதுமக்களும் இடையில் வேலை பார்ப்பவர்கள் இவர்கள். எம்.பி.ஏ., எம்.எம்.எஸ்., அல்லது மேலாண்மையில் முதுகலைப் பட்டயம் பெற்றவர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.
சட்ட அதிகாரி
வங்கி தரப்பிலான வழக்குகளை முன்னெடுப்பவர் சட்ட அதிகாரி. குறிப்பாக வாராக் கடன்களைச் சட்ட ரீதியாக வசூலிக்கச் சட்ட ஆலோசனை வழங்கி வங்கி சார்பில் ஆஜராவது இவர்களே. இந்தப் பணியில் சேர இளங்கலை அல்லது முதுகலை சட்டம் படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் இந்த வேலைக்கு அத்தியாவசியம்.
நிதி அதிகாரி
கடன் அதிகாரி என்றே நிதி அதிகாரிகள் அழைக்கப்படுகிறார்கள். கடன் கோருபவர்களின் விண்ணப்பத்தை சீர்தூக்கிப் பார்ப்பவர்கள், அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை நிர்ணயிப்பவர்கள் இவர்கள்தான். கடன் கணக்கைப் பராமரிப்பது, கடனை வசூலிப்பது உள்ளிட்ட முக்கியப் பணிகள் நிதி அதிகாரியின் பொறுப்பாகும். நிதி மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர்கள். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஃப்.ஏ. படித்தவர்களையும் சில வங்கிகள் நிதி அதிகாரிகளாக நியமிக்கின்றன.
வேளாண்மை அதிகாரி
தொழில்நுட்ப அடிப்படையிலான நவீன வேளாண்மையை ஊக்குவிக்கப் பொதுத்துறை வங்கிகள் பல திட்டங்களை முன்வைக்கின்றன. விவசாயக் கடனுக்குத் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் பொறுப்பு வேளாண்மை அதிகாரியைத்தான் சேரும். கிராம வளர்ச்சி அதிகாரி என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்குத் தகுதி பெறப் பல படிப்புகள் உள்ளன.
வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் கூட்டுறவு, கூட்டுறவு மற்றும் வங்கியியல், வேளாண்சார் மர வளர்ப்பு (AgroForestry), உணவு அறிவியல், வேளாண்மை உயிரித்தொழில்நுட்பம், பால் பண்ணைத் தொழில்நுட்பம், வேளாண்மை வணிக மேலாண்மை, வேளாண்மைப் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் வேளாண்மை அதிகாரி ஆகலாம். இத்துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்கூட இப்பணியில் சேர முன்வருகின்றனர்.
மனிதவள அதிகாரி
ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள துறைகளில் ஒன்று வங்கித் துறை. சேவைத் துறை என்பதால் மனிதவளத்துக்கு இத்துறையில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. நிறுவனங்களுடனான தொடர்பு, பயிற்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், பணிநியமனம், ஊழியர்களின் செயல்திறனை மதிப்பிடுதல், ஊக்கத்தொகை- இழப்பீடு உள்ளிட்ட பலவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மனிதவள அதிகாரிகளுடையது. மனிதவள மேலாண்மை முதுகலைப் பட்டதாரிகளும் சமூகப் பணி (எம்.எஸ்.டபிள்யூ.) முதுகலைப் பட்டதாரிகளும் வங்கியில் மனிதவள அதிகாரி ஆகலாம்.
தகவல் தொழில்நுட்ப அதிகாரி
இந்தியாவில் உள்ள பல்வேறும் துறைகளில் அதிவேகமாகத் தொழில்நுட்பமயமாகிவருவது வங்கித் துறை ஆகும். வங்கியில் உள்ள வன்பொருள், மென்பொருளின் செயல்பாட்டைக் கண்காணித்து ஊழியர்கள் தொழில்நுட்பத்தைத் திறம்படப் பயன்படுத்த உதவி செய்வது ஐடி அதிகாரி என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளே. இதைத் தவிரவும் டேட்டாபேஸ் நிர்வாகம் (database administration), நெட்வொர்க்கிங், தகவல் பாதுகாப்பு, மென்பொருள் வளர்ச்சி மற்றும் சோதனை போன்ற பல பொறுப்புகள் இவர்களைச் சேரும்.
கணினிப் பொறியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட படிப்புகளை நான்காண்டு பட்டப் படிப்பாகவோ முதுகலைப் பட்டமாகவோ படித்தவர்கள் வங்கியில் தகவல் தொழில்நுட்ப அதிகாரி ஆகலாம்.
இவை மட்டும் அல்ல இன்னும் பல நிபுணத்துவம் வாய்ந்த பிரிவுகள் வங்கித் துறையில் உள்ளன. புரொபேஷனரி அதிகாரியாகப் பணியில் சேருபவர்கள் ஜூனியர் மேலாண்மை நிலையில்தான் (படிநிலை 1) ஆரம்பத்தில் இருப்பார்கள். அதே தனித்துறை அதிகாரிகளோ உயர் பதவிகளையும் 2,3,4 ஆகிய படிநிலைகளையும் எளிதாக அடையலாம். வங்கித் துறையின் அபரிமிதமான வளர்ச்சியினால் பலருக்கு இன்னும் பல புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன!