இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - தமிழில் பிரதமர் அலுவலக இணைய சேவை

செய்திப்பிரிவு

தமிழ், மலையாளம், தெலுங்கு, குஜராத்தி, வங்கம், மராத்தி ஆகிய 6 பிராந்திய மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதள சேவை மே 29 அன்று தொடங்கப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புதிய சேவைகளை தொடங்கிவைத்தார்.

இதற்கு முன்பு> www.pmindia.gov.in என்ற பிரதமர் அலுவலக இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் இடம்பெற்றன. இனி, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் அலுவலகச் செய்திகளை அறிந்து கொள்ள முடியும். பிரதமர் அலுவலக இணையதளச் சேவையை முக்கிமான பிராந்திய மொழிகளிலும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மே 29 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தப் புதிய பூமியை அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்தது. நாசா விண்வெளி ஆய்வு மையம் 2009-ம் ஆண்டில் கெப்ளர் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து 150 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றிவருகிறது. இதுவரை 2300-க்கும் மேற்பட்ட கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்துள்ளது. அந்த வரிசையில் பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமியை கெப்ளர் கண்டறிந்துள்ளது.

அந்த கிரகத்துக்கு கெப்ளர்-62எப் என்று நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியைவிட 1.4 மடங்கு பெரியது. இங்கே மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துவருகிறார்கள். எனவே அந்தக் கிரகத்தை ‘சூப்பர் பூமி’ என்று செல்லமாக நாசா விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி புதிய முதல்வராக முன்னாள் மத்தியமைச்சர் நாராயணசாமி மே 29 அன்று தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

முதல்வர் பதவியைப் பெறுவதில் முன்னாள் மத்தியமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் மேலிடத் தலைவர்களின் ஆதரவு காரணமாக நாராயணசாமி முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆல்ப்ஸ் மலையைக் குடைந்து ரயில் சேவை

சுவிட்சர்லாந்தில் கடந்த 17 ஆண்டுகளாக கட்டப்பட்டுவந்த உலகிலேயே மிக நீளமான மற்றும் ஆழமான சுரங்க ரயில் பாதையை அந்நாட்டு அதிபர் ஜோகன் ஸ்க்னீடர்-அம்மான் ஜூன் 2 அன்று திறந்து வைத்தார். ‘காட்ஹார்டு பேஸ் டனல்’ என்ற இந்த சுரங்கப்பாதை இரண்டு துளைகளைக் கொண்டது. 57 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாதை, வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்கு நடுவே ஆல்ப்ஸ் மலைத் தொடரைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

மலையின் மேற்பரப்பிலிருந்து 2.5 கி.மீ. ஆழத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எர்ஸ்ட்பீல்டு மற்றும் போடியோ நகரங்களுக்கிடையே அமைந்துள்ள இந்தப் பாதைக்கான மாதிரி வடிவமைப்பு கடந்த 1947-ம் ஆண்டே உருவாக்கப்பட்டது. ஆனால், செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தாமதமானது. பின்னர் 1999-ல் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது.

மீண்டும் சபாநாயகரானார் தனபால்!

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ப.தனபால் ஜூன் 3 அன்று போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். 15-வது சட்டப்பேரவைக்கான சபாநாயகர் தேர்தலில் தலைவர் பதவிக்கு தனபாலும், துணைத் தலைவர் பதவிக்குப் பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியிட்டார்கள்.

இந்தத் தேர்தலில் இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்கள். சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட தனபாலை அவை முன்னவரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்கள். ப.தனபால் இரண்டாவது முறையாக சபாநாயகரானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT