மூலக்கூறுகளின் அமைப்பை மாற்றி அமைக்கும் நுட்பம் கைவரப் பெற்றுவிட்டால் காற்றில் உள்ள மாசையும் நீரில் உள்ள நச்சுகளையும் ஒட்டுமொத்தமாக அகற்றிவிடலாம். அதற்குத் தேவை நானோ தொழில்நுட்பம். அவ்வாறு பருகும் நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் நானோ தொழில்நுட்பத்தின் தாக்கம் இடம்பெறப் போகும் நாள் தொலைவில் இல்லை.
அவ்வளவு ஏன் விண்வெளிக்குக் கருவி களைக் கொண்டு செல்லும் செலவையும் குறைக்க நானோ தொழில்நுட்பம் உதவும். இதே போன்று மருத்துவம், நுகர்வு பொருட்கள், ஆற்றல், உற்பத்தித் தொழில் எனப் பல்துறைகளின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அவற்றின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தவும் நானோ தொழில் நுட்பத்தால் இயலும். அதற்குக் காரணம் அணுத் துகளைக் காட்டிலும் நுட்பமான, நுணுக்கமான தளத்தில் இது செயல்படுகிறது.
இத்தனை சிறியதா?
‘மீநுண்’ என அறிவியல் வட்டாரங்களில் பரவலாகத் தமிழில் அறியப்படும் நானோ தொழில்நுட்பத்தில் ‘நானோ’ என்பது ஒரு நீள் அல்லது பரும அளவின் அலகாகும். நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரை நூறு கோடி துண்டுகளாக்கி அவற்றில் ஒரு துண்டின் அளவாகும்.
நானோ வரலாறு
1959-ல் ‘அடியில் ஏராளமாக இடம் உள்ளது’ (‘There’s Plenty of Room at the Bottom’) என்னும் தலைப்பில் இயற்பியல் ஆய்வாளர் முனைவர் ரிச்சர்ட் பி.ஃபேன்மேன் ஒரு ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் அணு அளவில் மாற்றம் நிகழ்வதை இயற்கை தடை செய்யவில்லை என்றும் இதனால் எதிர்காலத்தில் ஓர் புதிய அறிவியல் மாற்றம் நிகழவுள்ளது என்றும் நிறுவினார். அதுவே நானோவின் தொடக்கப் புள்ளி எனலாம். அதன் பிறகு 1974-ல் ஜப்பானியப் பேராசிரியர் நொரியோ தனிகுச்சிதான் மீநுண் தொழில்நுட்பம் (Nanotechnology) என்ற சொல்லை முதன்முதலில் வடிவமைத்தார்.
இந்த மீநுண் தொழில்நுட்பமானது இயற்பியல், வேதியியல், பொறியியல், சூழலியல், உயிரியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் துறைகளில் புதிய அத்தியாயங்களைத் திறந்துள்ளது. அவற்றில் சில இதோ:
கம்பி முதல் படகு வரை
சைக்கிளின் பாகங்களைத் தயாரிக்கவும் எடை குறைவான படகுகளை உற்பத்திசெய்யவும் கார்பன் நானோடியூப் (சி.என்.டி.) பயன்படுத்தப்படுகிறது. மிகச் சிறியதாகவும் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் சிலிக்கான் சிப்பின் உட்பாகங்களை வடிவமைக்க இந்தச் சி.என்.டி. பயன்படுகிறது. கம்பி, மின்சாரக் கம்பி வடம், சோலார் செல் உள்ளிட்ட பல பொருட்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
புற்றுநோய்க்கு நேரடி சிகிச்சை
புற்றுநோய்க்கு தற்போது அளிக்கப்படும் கீமோதெரபி, கதிரியக்கச் சிகிச்சைக்குப் பதிலாக நானோபோட்ஸை (Nanobots) உடலில் செலுத்தி நோய் தாக்கிய பகுதிக்குச் சிகிச்சை அளிக்கலாம்.
நெகிழும் மொபைல்
நோக்கியா ஆய்வு மையமானது மார்ஃப் நானோ தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. இது பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன் ஃபோட்டோவோல்டாயக் நானோ கம்பிகளை (photovoltaic nanowire) பயன்படுத்திக் குறைவான வெப்பச் சூழலிலும் தானாக சார்ஜ் ஆகிவிடும். இதில் பொருத்தப்படும் நானோ ஃபைபர் மூலம் எல்லா வடிவிலும் வளைந்து நெகிழும் மொபைல் ஃபோன்கள் சாத்தியமாகும் என்கிறது நோக்கியா நிறுவனம்.
கட்டுரையாளர் ஓய்வுபெற்ற ஐ.ஐ.டி.எம். ஆலோசகர், தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத் தொழில் துறையின் ஓய்வுபெற்ற கூடுதல் இயக்குநர். தொடர்புக்கு: jporus2000@yahoo.com தமிழில்: ம. சுசித்ரா