கதிரவனின் ஒளிக்கதிர்கள் நம்மை வந்து தொடும்போது நம் தோலில் சூடு உறைக்கிறது. அதேபோல மஞ்சள் ஒளியை உமிழும் குண்டு பல்பின் கண்ணாடிக் கூடு அருகே கையை வைத்துப் பார்த்தாலும் வெப்பம் இருப்பதை உணரலாம். வெளிச்சம் தரும் தீவட்டியும் வெப்பத்தை வெளியிடுகிறது.
இப்படியாக ஒளி தரும் மூலங்கள் வெப்பத்தை உமிழ்கின்றன. இப்படி ஒளியைத் தருபவை அனைத்துமே வெப்பத்தையும் வெளியிடுகின்றன. அப்படியென்றால் இந்த உலகில் வெப்பத்தை உமிழாமல் ஒளி தரும் மூலங்கள் எதுவுமில்லையா?
உயிருள்ள ஒளி
இருக்கின்றன. மின்மினிப் பூச்சி, தூண்டில் மீன்(Angler Fish), சில வகை சொறி மீன் (Jelly fish) போன்றவை வெப்பம் உமிழா ஒளியை (luminescence) வெளியிடுகின்றன. இவை அனைத்துமே உயிருள்ளவை.
பொதுவாகக் குறுகிய அலைவரிசை, அகச்சிவப்பு மண்டலத்தில் உள்ள ஒளிக்கற்றைகள் வெப்பத்தை உமிழக்கூடியவை. அதற்கு மாறாக மனிதப் பார்வையில் தென்படக்கூடிய அலைவரிசை மண்டலத்துக்குள் உள்ள போட்டானை உற்பத்தி செய்வதன் மூலம் மேற்கண்ட உயிரினங்கள் ஒளியை உருவாக்குகின்றன.
மேற்கண்ட உயிரினங்களைப் போலவே சில வேதிவினைகளும் வெப்பத்தை உமிழாமல் வெளிச்சத்தை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாகத் திறந்தவெளிக் காற்றில் வைக்கப்படும் பாஸ்பரஸ், புறஊதாக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு குளிர்ச்சியான வெளிச்சத்தை வெளியிடுகிறது. இந்த வினைக்குப் பெயர் பாஸ்போர்ஸ்.