# நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பர்ட் நோபல் ஒரு வேதியியலாளர், பொறியாளர், ஆயுதத் தயாரிப்பாளர். போபர்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர். அவரது 355 கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை ராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள்,வெடிபொருள்கள் தொடர்பானவை.
# ஒரு நாள் ஒரு பிரெஞ்ச் செய்தித்தாளில் நோபல் இறந்ததாக வந்த செய்தியை நோபல் பார்த்து அதிர்ந்தார். “மரண வியாபாரி இறப்பு” என்று அதற்குத் தலைப்பு தரப்பட்டு இருந்தது. உண்மையில் அவரது சகோதரர்தான் இறந்திருந்தார். அவரது சகோதரரை ஆல்பர்ட் நோபல் என அந்தப் பத்திரிகை தவறாக நினைத்துவிட்டது. ஆனால் அந்த தலைப்பு நோபலை தீவிரமாகச் சிந்திக்க வைத்தது. மரணத்துக்குப் பின்பு தான் மதிக்கப்பட வேண்டும் என அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.
# ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய ஐந்து துறைகளில் பரிசு வழங்கத் தனது சொத்தைப் பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதினார். 1895-ல் 63 வயதில் இறந்தார்.
# 1901 முதல் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.1905-ம் ஆண்டு சுவீடனில் இருந்து நார்வே பிரிந்தது. அதனால், அமைதிக்கான பரிசை மட்டும் நார்வே வழங்க ஏற்பாடானது.
# 1968-ல் சுவீடன் மத்திய வங்கி ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து, நோபலின் பெயரில் பொருளாதார அறிவியலுக்கான பரிசை ஏற்படுத்தியது.
# அதன் பின்னர், இனி புதிய பரிசுகளை வழங்குவதில்லை என நோபல் அறக்கட்டளைக் குழு முடிவெடுத்தது.
# நோபல் அறக்கட்டளையின் இப்போதைய சொத்து மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய்.
# நோபல் பரிசை இதுவரை. தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி.ராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆகிய மூன்றுபேர் பெற்றுள்ளனர்.
# இந்தியாவின் அன்னை தெரசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் வங்கதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள்.அதற்குப் பிறகு தற்போது மலாலாவும் கைலாஷ் சத்தியார்த்தியும் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.