இரண்டு ஆசிரியர்களின் உரையாடல் இது...
"உங்க பாடக்குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு. எப்படி இப்படி எழுதறீங்க?"
"எல்லாம் ஸெல்ப் மோடிவேஷன் தான்!"
"ம், உங்க பிள்ளைங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க. உங்களால இப்படியெல்லாம் செய்ய முடியுது. ஆனால் எங்களால் முடியாது. அதுக்கெல்லாம் அவ்வளவு நேரம் ஒதுக்கி செய்ய முடியாது."
"நாம நினைத்தால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் செய்யவேண்டும் என்கின்ற மனம் வேண்டும். என் முதல் நாள் பணியை எப்படி குதூகலமாய் ஆரம்பித்தேனோ, அப்படியேதான் இன்று வரை செய்கிறேன். சில நேரங்களில் மிகவும் சோர்வு வந்துவிடும். அப்போதெல்லாம் குழந்தைகளை பாரத்தால் போதும் உற்சாகம் வந்துவிடும்."
"நான்கூட ஆரம்பத்தில் இப்படிதான் இருந்தேன். பிறகு காலப்போக்கில் முடியாமல் போய்விட்டது."
பல ஆசிரியர்களின் சிந்தனை இப்படிதான் இருக்கிறது.
ஆசிரிய பயிற்சியின்போது செய்திருக்கிறேன், மாணவப் பருவத்தில் படித்திருக்கிறேன் என்று சொல்வதால் என்ன பயன்?
டிரைனிங் படிக்கும்போது கட்டாயத்துக்காக படிக்க வேண்டும்; கட்டாயத்தின் காரணமாக செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்றே பலரும் செய்கின்றனர். ஆனால், உண்மையில் ஆசிரியப் பயிற்சியின்போது கொடுக்கப்படும் அத்தனை செயல்பாடுகளும் வகுப்பறைக்கு கொண்டு வருவதற்காகவே கொடுக்கப்படுபவை என்பது சில ஆசிரியர்களால் இன்னும் புரிந்துக்கொள்ளப்படவே இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
அப்படியே புரிந்துக்கொண்டவர்களும் வேலை பளுவின் காரணமாக இவற்றை செயல்படுத்த மறந்துவிடுகின்றனர். நமக்கு எத்தனை வேலை பளு இருந்தாலும் நமக்கு நாமே சுய ஊக்குவித்தல், விசாலப் பார்வையை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவை ஆசிரியர்களது கடமை. அப்படியல்லாமல் நம் பணியை சிறப்பாக ஒரு நாளும் செய்ய இயலாது என்பதே நிதர்சனம்.
ஆசிரியர்கள் அன்றைய தேவைக்கு ஏற்றவாறு தம்மை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். காலாவதியான மருந்து மாத்திரைகளை தூக்கி எறிவது போல் தங்களுடைய பழைய கற்பித்தல் முறைகளை விலக்கிவிட்டு, தம் முன் அமர்நதிருக்கும் குழந்தைகளின் தேவைக்கேற்பவும், அவர்களின் மனநிலையறிந்தும், பள்ளி அமைந்திருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டும் காலத்திற்கேற்ப புதுப் புது யுக்திகளைக் கைக்கொண்டு மாணவர்களை வழிநடத்த வேண்டும்.
அக்காலத்தில், "மாணவர்கள் மண்பாண்டங்கள் போல; அவர்களை ஆசிரியர்கள் தான் வேண்டிய வடிவில் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் வனைய வேண்டும்" என்ற கருத்து நிலவியது. ஆனால் தற்போதைய நிலைமை வேறு. பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக குழந்தைகளின் உளவியல், உடல் சார்ந்த வகையில் கல்வி கற்பித்தல் அமைய வேண்டும் என்று உணரப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் கல்வியின் நோக்கம் வேத காலம் முதற்கொண்டு மாற்றங்களை சந்தித்த வண்ணம் உள்ளது. வேத காலத்தில், தர்மத்தை கடைப்பிடித்தலே வாழ்வின் நோக்கமாக இருந்தது. ஆகவே அதுவே கல்வியின் நோக்கமாகவும் அமைந்தது.
ஆனால், தற்போது கல்வியாளர்களின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கற்பித்தல் பற்றிய பார்வை பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த சிந்தனாவாதியான அரவிந்தர் கூறும்போது, குழந்தை என்பது ஒரு புனிதமான ஆன்மா, அதன் புனிதத் தன்மையை வெளிக்கொண்டுவருவதே ஆசிரியரின் கடமை என்றார். அரவிந்தரின் கூற்றுப்படி ஆசிரியர் என்பவர் ஓர் உதவியாளர், வழிக்காட்டி. அவருடைய பணி யோசனை கூறுதல் மற்றும் அறிவைத் தேட குழந்தையை வழிநடத்துதல்ஆகியவையே!
கற்பித்தலின் முதன்மையான தத்துவம் பற்றி அவர் கூறும்போது, "Nothing can be imposed upon the mind of the child from outside" என்று எதையும் வெளியிலிருந்து திணிக்க முடியாது, குழந்தையின் உள்ளிருப்பதை வெளிக்கொண்டு வருதலே ஆசிரியரின் தலையாய பணி என்கிறார்.
இதே கருத்தை மிகவும் அழுத்தமாய் பதிவு செய்கிறார் இந்தியாவின் மிக சிறந்த இளம் விஞ்ஞான துறவி என்று அறியப்பட்ட விவேகானந்தர். அறிவு பெறப்படும் வழி வகைப் பற்றி அவர் கூறுகையில், "புவியீர்ப்பு விசை பற்றிய அறிவு ஆப்பிளுக்குள்ளேயோ, பூமிக்குள்ளோ அல்லது இரண்டுக்கும் இடையேயான தொடர்பிலோ இல்லை. அது நியூட்டனின் மனதுக்குள் இருந்தது. ஆப்பிள் விழுதல் என்பது ஒரு நிகழ்வு. அது நியூட்டனை புவியீர்ப்பு விசையை கண்டறிய தூண்டியது" என்று மனிதனுக்குள் புதைந்திருக்கும் அறிவு புற விசையினால் வெளிப்படுகிறது என்று தன் கருத்தை உலகம் ஏற்றும் உதாரணம் மூலம் நம் முன்வைக்கிறார்.
மேலே கூறிய அனைத்தும் நமக்கு விளக்குவது ஒன்றே. நம் முன் அமர்ந்திருக்கும் மாணவர்கள் எல்லா அறிவும் பொருந்தியிருப்பவர்களே... அதை வெளிக்கொணர்வதே ஆசிரியர் முன் நிற்கும் மகத்தான பணி. அதை உணர்ந்து ஆசிரியர் செயல்படுவாராயின் மாலையில் மணியோசை அடங்கும் முன் கிளம்பும் மாணவர்களின் ஆரவார விடுதலைக் குரலை கேட்காமல் இருக்கலாம்!