ஆசிரியர் மாணவருக்கு உதவி செய்தலையே விதந்து பேசுகிறோம். மாணவர்கள் ஆசிரியருக்கு உதவுவதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ஆசிரியர் செய்யும் உதவி மிகமிகச் சிறிது எனினும், அது காலத்தால் செய்ததாகவும் ஒருவரது வாழ்வின் போக்கையே மாற்றுவதாகவும் அமைந்துவிடுகிறது. ஆகவே அதற்கு மதிப்பு பெரிதாக இருக்கிறது. மாணவர்கள் ஆசிரியருக்குச் செய்யும் உதவிகள் உலகியல் தேவை சார்ந்தவையாக இருக்கின்றன. உதவுதல் என்பது குருவுக்குச் செய்யும் கடமையாகவும் கருதப்படுவதால் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது.
நிறைவுக்கு ஏது ஈடு?
எதிலும் இல்லாத பெருநிறைவை ஆசிரியப் பணியில் பெற முடியும். அதை உணர எங்கேனும் வழியில் பார்க்கும் மாணவர் ஒருவர் மகிழ்ச்சியோடு சொல்லும் ஒரே ஒரு வணக்கம் போதுமானது. பேருந்தில் நின்றுகொண்டிருக்கும்போது வேண்டாம் என எத்தனை முறை சொன்னாலும் கேளாமல் சட்டென ஒரு மாணவர் எழுந்து இடம் கொடுப்பார். பேருந்துப் பயணிகளின் பார்வை மொய்க்க ஓர் ஒளிவட்டத்தோடு அந்த இருக்கையில் உட்காரும்போது வரும் நிறைவுக்கு ஏது ஈடு?
வங்கிக்குப் போனால் அங்கே ஒருவர் ஓடி வந்து, “ஐயா நான் உங்க மாணவர் தனபாலுங்க, எக்னாமிக்ஸ் படிச்சங்கய்யா” என்பார். என்ன வேலையோ அதை விரைந்து முடித்துத்தருவார். வண்டியைப் பழுதுபார்க்க ஒரு சர்வீஸ் ஸ்டேஷனில் விட்டால் அங்கே ஒருவர் ஓடி வருவார். “ஐயா… நான் பிபிஏ படிச்சங்கய்யா” என்பார். என் வண்டிக்கும் ராஜ கவனிப்பு கிடைத்துவிடும். என் பிள்ளைகளுக்கு இது பெரிய வியப்பாக இருக்கும். “எங்க போனாலும் இவருக்கு ஒரு ஸ்டூடண்ட் கெடச்சிருவாரு” என்பார்கள். ஆசிரியர் மட்டுமல்ல, மாணவரும் காலம் அறிந்து உதவுதல் உண்டு.
எங்க போனாலும் பொழச்சுக்கலாம்
நம் சமூகத்தில் குலத் தொழில் செய்தல் பெருமளவு மாறிவிட்டது. எனினும் முடி வெட்டுதலும் துணி துவைத்தலும் மட்டும் குறிப்பிட்ட பிரிவினரின் வேலைகளாகவே நீடிக்கின்றன. முடி வெட்டும் தொழில் மிக அவசியமானது என்றாலும் சமூகத்தில் அதற்கு மதிப்பில்லை. மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, இழிவாகவும் கருதுகின்றனர். முடிவெட்டும் ஒருவருக்கு மணப்பெண் கிடைப்பதும் சிரமம். பகுதி நேரமாக முடிவெட்டும் தொழில் செய்தபடியே கல்லூரியில் படித்தவர் கௌசிக். அவர் தந்தையும் உறவினர்களும் நாமக்கல்லில் முடி திருத்தகம் வைத்துள்ளனர்.
அவர் தந்தை தீராத பண்பலை வானொலிப் பிரியர். கோடை வானொலியில் ‘நாமக்கல் பீமன்’ என்னும் பெயர் அடிக்கடி ஒலிக்கக் கேட்கலாம். தனது அடுத்த தலைமுறை கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுபவர். ஆகவே கௌசிக்கைத் தொடர்ந்து படிக்க வைத்துக்கொண்டிருந்தார். பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு ஆசிரியர் பயிற்சி, தமிழ் முதுகலைப் பட்டம், கல்வியியல் பட்டம் எல்லாம் பெற்ற கௌசிக், வார நாட்களில் பகுதி நேரமாகவும் விடுமுறை தினங்களில் முழு நேரமாகவும் கடைக்குச் சென்று முடிவெட்டும் வேலையைச் செய்து வந்தார்.
கௌசிக்கிடம் ஒருமுறை ராகுல சாங்கிருத்தியாயன் பற்றிச் சொன்னேன். நாடோடியாகத் திரிந்த காலத்தில் அவர் தம் செலவுகளுக்குப் பொருளீட்ட முடி வெட்டும் வேலை செய்ததாக ‘ஊர் சுற்றிப் புராணம்’ நூலில் எழுதியிருப்பார். அதைச் சொல்லி ‘உம்பாடு பிரச்சின இல்லப்பா. எங்க போனாலும் பொழச்சுக்கலாம்’ என்றேன். தம் தொழிலை இழிவு என்று கருதாத இயல்பான மனநிலை கொண்டவர் கௌசிக். விடுமுறை நாட்களில் கடைக்குச் சென்று வேலை செய்வதையும் அதனால் தனக்குக் கிடைக்கும் வருமானம் பற்றியும் வந்து சொல்வார்.
வீட்டுச்சிறை வாசம்
தன் குடும்பப் பின்னணி குறித்தும் தான் செய்யும் வேலை குறித்தும் ஒருபோதும் தாழ்வுணர்ச்சிகொண்டு அவர் பேசியதில்லை. எப்போதுமே மகிழ்வுடன் தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது அவர் வழக்கம். என் குடியிருப்புக்கும் அவர் கடைக்கும் இடையே தூரம் அதிகம். ஆகவே அங்கே சென்றதில்லை. இக்கட்டான சூழல் ஒன்றில் கிட்டத்தட்ட மூன்று மாதம் வீடு, கல்லூரி தவிர வேறெங்கும் செல்லாமல் இருந்தேன். வீட்டுச் சிறை வாசம். நான் வெளியில் எங்கும் செல்லாமல் என் குடும்பத்தார் பாதுகாத்தனர். அப்போது என்னைக் காண வரும் மாணவர்களுடன் பேசுவதிலேயே பொழுது முழுக்கக் கழியும்.
அப்படி ஒருநாள் என்னைக் காண வந்த கௌசிக்கின் பார்வை என் தலையில் படிந்தது. “ஏங்கையா முடி வெட்டிக்கலயா?” என்று கேட்டார். அப்போதுதான் தலை நிறைந்திருந்த உணர்வு எனக்கு வந்தது. “வெளில போகவே முடியலயேப்பா. எங்க வெட்டிக்கறது?” என்றேன். “ஏங்கையா எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தா வந்து வெட்டி உட்டிருப்பனே. என் ஞாபகம் உங்களுக்கு எப்படி வராத போச்சு?” என்று கோபித்தார். நான் அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தேன். என் கண்கள் கலங்கின போலும்.
அவர் உடனே கிளம்பிப் போய்க் கருவிகளை எடுத்து வந்தார். மொட்டை மாடியில் என்னை அமர வைத்துத் தற்காலிக முடிதிருத்தகம் உருவாக்கினார். “நல்லா ஒட்ட வெட்டி உட்ருப்பா” என்றேன். என் எண்ணத்தைப் புரிந்துகொண்டவர் “திரும்ப நான் வந்து வெட்டி உடறங்கையா” என்றார் அழுத்தமாக. பணமே வாங்க மாட்டேன் என்று மறுத்தவர், “கல்லூரி ஆசிரியருக்கு நல்ல சம்பளந்தானப்பா. எனக்கு எதுக்கு நீ சும்மா வேல செய்யணும்? வாங்கிக்க” என்று கோபித்துக்கொண்ட பின் வாங்கிக் கொண்டார். உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய்கூட வாங்க மறுத்துவிட்டார். அதன் பின் சில மாதங்கள் அவர் தயவில் என் தலைபாரம்ப் குறைந்தது. இக்கட்டான சந்தர்ப்பத்தில் காலத்தால் உதவி என் தலை காத்தவர் கௌசிக்.
பெருமாள் முருகன்,எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com