இணைப்பிதழ்கள்

தேர்வு வந்தாச்சு: பரீட்சையும் ஐபிஎல் மாதிரிதான்!

செய்திப்பிரிவு

இந்த மார்ச்-ஏப்ரல் வந்துவிட்டாலே இரண்டு விஷயங்கள் கட்டாயம் உண்டு. ஒன்று ஐபிஎல். மற்றொன்று பரீட்சை. இரண்டுமே சற்றேறக்குறைய ஒரே காலகட்டத்தில் நடைபெறுவதுதான் சோகம். பரீட்சையா, ஐபிஎல்லா என்ற கேள்விக்கு ஒரே பதில்தான்: ஆசை ஐபிஎல் ஆக இருந்தாலும் பரீட்சைதான் முக்கியம்.

பரீட்சை மட்டும் ஏன் இப்படி வேப்பங்காயாய்க் கசக்கிறது? பரீட்சையும் ஒரு கிரிக்கெட் மேட்ச் மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? இருக்க முடியுமா என்று யோசித்தபோது, ஏன் இருக்க முடியாது என்று தோன்றியது. சொல்லப் போனால் வாழ்க்கையே ஒரு கிரிக்கெட் விளையாட்டுதான். ஒவ்வொரு பரீட்சையும் ஒரு ஐபிஎல் மேட்ச்தான். எப்படி என்று பார்ப்போமா?

கிரிக்கெட் என்பது நிரந்தரம். மேட்ச் என்பது சீஸனுக்கு சீஸன் வரும். அதுபோலவே, வாழ்க்கை நிரந்தரம். பரீட்சை என்பது சீஸனுக்கு சீஸன் வரும். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் ஒரு குறிப்பிட்ட காலம்வரைதான் போட்டிகளில் விளையாடுவார்கள். அதற்குப் பிறகு போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும் கிரிக்கெட் இருந்துகொண்டே இருக்கும். அதே மாதிரிதான் பரீட்சைகள் என்பது ஒரு காலம் வரைக்கும்தான். ஆனால் அதற்கப்புறமும் வாழ்க்கை இருக்கத்தானே செய்கிறது!

மாறிவரும் கிரிக்கெட்டும் வாழ்க்கையும்

அந்தக் காலம் மாதிரி இந்தக் காலம் இல்லேன்னு 40 வயசுக்கு மேலே ஆனவங்க சொல்றதை அடிக்கடி பார்க்கலாம். என்ன அந்தக் காலம் மாதிரி இல்லேன்னு கேட்டுப் பாருங்க? இதுதான் பதில், “அந்தக் காலத்துல இப்போ மாதிரி ஒரே பரபரப்பா இல்லே.... கூட்டம் இல்லே... டென்ஷன் இல்லே... நிதானமா வாழ்க்கை இருந்ததுன்னு” சொல்லுவாங்க. கிரிக்கெட் மட்டும் என்னவாம்? 40 வருஷத்துக்கு முன்னாடி கிரிக்கெட் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பார்த்தால் கிரிக்கெட்டும் வாழ்க்கையைப் போலவே மாறியுள்ளது என்பது புரியும்.

இப்போ இருக்கும் வேகம் அப்போ கிடையவே கிடையாது. அந்தக் கால டெஸ்ட் மேட்சுகள் குடும்பத்தோடு கூடைகளில் தின்பண்டங்கள் எடுத்துக் கொண்டுபோய் ரொம்பவே நிதானமாக அனுபவிப்பதாகத்தான் கிரிக்கெட்டின் தாயகமான லண்டனில் இருந்தது.

அந்தக் காலம் மாதிரி இந்தக் காலம் இல்லேன்னு 40 வயசுக்கு மேலே ஆனவங்க சொல்றதை அடிக்கடி பார்க்கலாம். என்ன அந்தக் காலம் மாதிரி இல்லேன்னு கேட்டுப் பாருங்க? இதுதான் பதில், “அந்தக் காலத்துல இப்போ மாதிரி ஒரே பரபரப்பா இல்லே.... கூட்டம் இல்லே... டென்ஷன் இல்லே... நிதானமா வாழ்க்கை இருந்ததுன்னு” சொல்லுவாங்க. கிரிக்கெட் மட்டும் என்னவாம்? 40 வருஷத்துக்கு முன்னாடி கிரிக்கெட் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பார்த்தால் கிரிக்கெட்டும் வாழ்க்கையைப் போலவே மாறியுள்ளது என்பது புரியும்.

இப்போ இருக்கும் வேகம் அப்போ கிடையவே கிடையாது. அந்தக் கால டெஸ்ட் மேட்சுகள் குடும்பத்தோடு கூடைகளில் தின்பண்டங்கள் எடுத்துக் கொண்டுபோய் ரொம்பவே நிதானமாக அனுபவிப்பதாகத்தான் கிரிக்கெட்டின் தாயகமான லண்டனில் இருந்தது.

ஒரே மாதிரி இருக்க முடியாது

இன்றைக்கு 10, 12-வது பரீட்சைகளில் முதல் மதிப்பெண் என்பது கிட்டத்தட்ட 500 / 500 & 1200 / 1200-ஐ எட்டிவிடும் போலிருக்கிறது. 499 / 500, 1199 / 1200 என்பது சகஜமாகிவிட்டது. ஆனால் அந்தக் காலத்தில்? 90% என்பதே அதிகபட்ச மதிப்பெண். கிரிக்கெட்டிலும் அதே நிலைதானே. அந்தக் காலத்தில் ரன் ரேட்டைப் பார்த்தாலே இது புரியும். டெஸ்ட் மேட்சில் ரன் ரேட் இப்போதுகூட ஒரு ஓவருக்கு சராசரியாக 3-தான். ஆனால் அதற்குப் பிறகு வந்த புதிய வடிவமான ஒரு நாள் போட்டிகளில் ரன் ரேட் ஆரம்பத்தில் 4-5 ஆக இருந்தது பின்பு 5-7 ஆக இருக்கிறது. இந்த வடிவமும் போரடித்துவிடவே புதுசாக நுழைந்த 20/20 போட்டிகளில் ரன் ரேட் 8-10 என்பது சாதாரணமாகிவிட்டது.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பவுலர், ஃபீல்டர், விக்கெட் கீப்பர் என்று பலதரப்பட்டவர்கள் உண்டு. பவுலர்களிலேயும் வேகப்பந்து, சுழற்பந்து என உட்பிரிவுகள் பல உண்டு. இது மாதிரிதாங்க வாழ்க்கையும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது என்பதுதான் உண்மை.

ஒவ்வொரு மேட்சுக்கும் முன்னாடி பிட்ச் ரிப்போர்ட் ரொம்ப முக்கியம். அதாவது ஆடுகளம். நீங்க என்னதான் பெரிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லையென்றால் எடுபடாது. அது போல நீங்க என்னதான் பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் பந்து மட்டையை நோக்கி வரவில்லையென்றால் ரன் எடுப்பது கஷ்டம்தான். வாழ்க்கை மட்டும் என்னவாம்? சில நேரங்களில் நாம் என்னதான் பெரிய சாமர்த்தியசாலியாக, புத்திசாலியாக இருந்தாலும் சூழ்நிலை சாதகமாக இல்லையென்றால் சமாளிப்பது கடினம். அந்த நேரங்களில் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது எது?

இந்திய அணி உள்ளூரில் ஜொலித்தாலும் வெளிநாடுகளில் திணறுகிறார்கள் என்ற அவப்பெயர் இருந்தது. பரீட்சையிலும் அப்படித்தான். அன்றன்று நடத்தும் பாடங்களில் உடனடியாகப் பள்ளிகளிலேயே பரீட்சை வைத்து அதில் நன்றாக எழுதி மதிப்பெண் எடுப்பது என்பது வேறு, பொதுத் தேர்வை நன்றாக எழுதி மதிப்பெண் பெறுவது என்பது வேறு.

ஐபிஎல் மேட்சுகளில் லீக் போட்டிகளில் நீங்கள் எடுக்கும் புள்ளிகள் உங்களை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறச் செய்யும். ஆனால் இறுதிப் போட்டியில் எடுக்கும் ரன்கள் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். லீக் போட்டிகளில் எடுத்த ரன்கள், புள்ளிகள் ஒன்றுக்கும் பயன்படாது. அதே மாதிரி பள்ளியில் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வில் பயன்படாது.

கடைசியில் பதற்றம் எதற்கு?

ஐபிஎல் மேட்சுகளில் முதல் 6 ஓவர்களுக்கு தடுப்பரணில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த 6 ஓவர்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்து ரன் குவிக்க வேண்டியது அவசியம். இதேதானே பரீட்சையும்! ஆண்டு ஆரம்பத்திலேயே பாடங்களைப் படித்து முடித்து தயாராக இருந்தால் இறுதித் தேர்வின் போது கவலைப் பட அவசியமே இல்லை. அதுவும் முதல் ஓரிரண்டு மாதங்களில், வகுப்பு ஆரம்பித்த புதிதில் பாடங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கும்போதே அவற்றை நன்கு படித்து வைத்துக்கொண்டால், இறுதியில் தேவைப்படும் ரன் ரேட் குறைவாகவே இருக்கும்.

முதல் பத்து ஓவர்களில் ரன் சேர்க்காமல் விட்டால் என்ன ஆகும்? கடைசி பத்து ஓவர்களில் தேவையான ரன் சேர்க்க வேண்டுமே என்ற பதற்றத்துடன் வேக வேகமாய் ஆடி, விக்கெட்டுகளைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும். ஆரம்ப காலத்தில் பாடங்களைப் படிக்காமல் இருந்துவிட்டால் இறுதித் தேர்வின்போது படிக்க வேண்டிய சுமை அதிகமாகிவிடும். அப்போது பதற்றம் அதிகமாகி எதையுமே சரியாகப் படிக்காமல் கோட்டை விட்டுவிடுவோம்.

சிக்ஸர் அடிக்கலாம் வாங்க!

ஆனாலும் ஏதேதோ காரணங்களால் ஆரம்பத்தில் படிக்காமல் விட்டுவிட்டோம். இப்போது பரீட்சை வந்துவிட்டதே என்ன செய்வது? கவலையேபடாதீர்கள். அதுக்கும் ஐபிஎல் வழிகாட்டுகிறது. அதுவும் உங்க ‘தல’ தோனி மூலமாக. எத்தனையோ மேட்சுகளில் கடைசிக் கட்டத்தில் 20-30 தேவையான நிலையில் தோனி தனியாளாக இறங்கி வெற்றி கண்டிருக்கிறார். கடைசி ஓவர், இத்தனை ரன்கள் எடுக்க வேண்டுமே என்ற பதற்றம் கொஞ்சம்கூட இருக்காது தோனியிடம். ஒன்றிரண்டு பந்துகள் வீணாகப் போனாலும் பரவாயில்லை என்று சரியான பந்துக்குக் காத்திருந்து சிக்ஸர் அடித்து வெற்றி தேடித் தருவார்.

இன்றைய உலகில் எல்லா இடங்களிலும் பன்முகத் திறமைக்கு வாய்ப்புக்கள் அதிகம். இந்த வருட ஐபிஎல் ஏலங்களில் ஒரு ஆல்ரவுண்டர்தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். பன்முகத் திறமைகள் உள்ள ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு நிறுவனத்துக்கு அவரால் ஏற்படும் பலன்கள் அதிகம். ஆகவே உங்கள் பாடத்தில் மட்டுமே திறமை என்பதல்லாமல், குறைந்தது இன்னொரு துறையிலாவது உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அது பாடத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு கவின் கலையாகவும் இருக்கலாம்.

கிரிக்கெட் விளையாடிப் புகழ் பெற்றவர்கள் பலர். ஆனால் ஆடாமல் வெறும் வர்ணனை செய்தே பேர் வாங்கியவர்களும் இருக்கிறார்களே! அது போல கஷ்டப்பட்டுப் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கி வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். பெரிய மதிப்பெண்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! ஆகவே தேர்வுகள் மதிப்பெண்கள் என்பதெல்லாம் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதி. அதுவே எல்லாமாக ஆகிவிடுவதில்லை.

தொடர்புக்கு: arunkumarvs@outlook.com

SCROLL FOR NEXT