ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண், பெண் இருவருமே பணிக்குச் சென்றால்தான் செலவுகளை ஓரளவுக்குச் சமாளிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. கூட்டுக் குடும்ப முறைகள் காலாவதியாகிவிட்ட சூழ்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தோன்றும் சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகள்கூட, 'மனம் விட்டுப் பேசுவது' என்னும் இயல்பான குணம் மறைந்துவிட்டதால், பிரச்சினைகள் ஊதிப் பெரிதாக்கப்பட்டுப் பூதாகரமாக வெடிக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்கு அளவே இல்லை. மனம் விட்டுப் பேசவும் பதின் பருவத்தில் நிற்கும் குழந்தைகளின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவும் வழியில்லாத அவசர உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
எளிதில் மனபாரத்தைக் குறைக்க...
பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாத குடும்பத் தலைவிகள், முதியோர்கள் இப்படி எல்லோருக்குமே ஆறுதலாகப் பேசுவதற்கும் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதே ‘லே கவுன்சலிங்’. இந்தப் பயிற்சியைச் சாமானியர்களுக்கும் 'தி பான்யன்' தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அளிக்கிறது சென்னை, ஸ்டெல்லா மேரி கல்லூரி.
"இது ஸ்டெல்லா மேரி கல்லூரியின் பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டத் திட்டம். இதை 2016-லிருந்து அளித்துவருகிறோம். சாமானியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி என்பதால், குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என்று அறிவித்தோம். கடந்த இரண்டு பேட்ச்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் முதல் முனைவர் பட்டம் பெற்றவர்கள்வரை இந்தச் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர்.
ஆறு மாத காலப் பயிற்சிக்கு மிகக் குறைந்த அளவில் ரூபாய் 3,000 மட்டுமே கட்டணமாகப் பெறுகிறோம். 'தி பான்யன்' அமைப்பிலிருந்து தகுந்த தொழில்முறை மன நல ஆலோசகர்கள் பயிற்சி அளிக்கின்றனர். 24 வாரங்களுக்கு திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் 4 மணிநேரப் பயிற்சி அளிக்கப்படும். படிப்பதற்கான மெட்டீரியலும் தருவோம்.
தியரி, பிராக்டிகலில் பயிற்சிபெற்றவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு 'லே கவுன்சலிங்' முடித்ததற்கான சான்றிதழ் அளிக்கப்படும்.
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் எல்லாருமே மனநல மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றில்லை. இரண்டு அமர்வுகளில் லே கவுன்சலிங்கிலேயே ஒருவரின் மனபாரம் குறைந்துவிடும். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு அடுத்த கட்ட மருத்துவ ஆலோசனையை யாரிடம் பெறலாம் என்ற யோசனையையும் இவர்கள் தர முடியும்.
வங்கிப் பணி, தகவல் தொழில்நுட்பம் போன்ற எந்தப் பணியில் இருப்பவரும் லே கவுன்சிலிங் பயிற்சியைப் பெறுவதன்மூலம், அடுத்தவருக்கு உதவலாம். அதேநேரம், வகுப்புகளை புறக்கணிக்காமல், சரியான நேரத்தில் வந்து, பயிற்சிகளின் முடிவில் தங்களின் திறமையை வெளிப்படுத்துபவர்களுக்கே பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்களை அளிக்கிறோம். அடுத்த பேட்ச்சை செப்டம்பர் இறுதியில் தொடங்கவிருக்கிறோம்” என்றார் லே கவுன்சிலிங் பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைக்கும் டாக்டர் கேத்ரின் ஜோசப்.
மேலும் விவரங்களுக்கு: 9442066546