இணைப்பிதழ்கள்

புதிய கல்விக் கொள்கை 2019: ஏற்றம் காணுமா உயர்கல்வி?

ம.சுசித்ரா

நாட்டு மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் போக்கைத் தீர்மானிப்பதிலும் உயர்கல்விக்குப் பெரும்பங்குண்டு.

ஜூன் 30 வரை பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை 2019 வரைவில் 130-க்கும் அதிகமான பக்கங்களில் இந்தியாவின் உயர்கல்வி தொடர்பாகப் பல்வேறு புதிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கல்வித் திட்டத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் மாற்றங்கள், புதிய தேசிய ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான திட்டம், பல்கலைக்கழகங்களின், கல்லூரிகளின் அதிகாரம் குறித்த விவரம் உள்ளிட்ட பல அம்சங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்தக் கருத்தாக்கங்களில் ‘இந்தி திணிப்பு’ என்பதைத் தவிர்த்து வேறெதையும் குறித்துப் பெருவாரியான ஊடகங்கள் வாய்திறக்காதது துரதிர்ஷ்டவசமானது. இந்தப் புரிதலுடன் கல்வியாளர்களுடன் உரையாடினோம்.

ஏழை மாணவர்கள் நுழைய முடியாது!

கோச்சிங் மையங்களுக்குப் பணம் செலவழிக்க முடியாத ஏழை மாணவர்கள் ஏற்கெனவே நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்கிறது புதிய கல்விக் கொள்கை.

இது கிராமப்புற, ஏழை, நடுத்தர மாணவர்களையும் அரசுப் பள்ளி மாணவர்களையும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கும். அது மட்டுமின்றி பிளஸ் டூ வகுப்புக்கான பாடங்களைப் படித்து மதிப்பெண்களைப் பெறுவதைவிட, நுழைவுத் தேர்வில் மதிப்பெண்களைப் பெறுவது என்பது முக்கியத்துவம் பெறும்.

இதுதான் உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களில் நடந்துள்ளது. பிளஸ் 2- ல் தேர்ச்சி பெறாத மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது. அதிலும் இந்த நுழைவுத் தேர்வுத் திட்டம் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே என்று சொல்வது தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சாதகமாகி விடும்.

நுழைவுத் தேர்வைக் கொண்டுவர யோசனைகளை முன் வைக்கிற புதிய கல்விக் கொள்கை, தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த என்ன திட்டங்களை வகுத்து இருக்கிறது என்பது தெரிய வேண்டும்.

- பாரவி, எழுத்தாளர், ஆசிரியர், தளம் கலை இலக்கிய இதழ்

ஆசிரியர்-மாணவர் குறித்த அக்கறை எங்கே?

பாடத்திட்டம், நிதி, நிர்வாகம் எல்லாவற்றிலும் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவதோடு, பட்டம் வழங்கும் நிறுவனங்களாகக் கல்லூரிகள் மாற்றப்படும் என்கிறது புதிய கல்விக் கொள்கை.

கல்லூரிகள் திறந்த நிலை, தொலைதூரக் கல்வியை வழங்கலாம் என்றும் சொல்கிறது. விரைவில் எல்லாக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களிலிருந்து விடுவிக்கப்படும். இதற்கு மேல் ஒரு படிபோய் எவ்வளவு வேண்டுமானாலும் கல்விக் கட்டணத்தை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே நிர்ணயித்து வசூலித்துக்கொள்ளலாம் என்கிறது.

ஆக, கட்டுப்பாடுகளை மொத்தமாக அவிழ்த்து விட்டுத் தனியார் கொள்ளைக்கு வழிவகுக்கும் திட்டம் இது.எல்லாவற்றுக்கும் மேலாக 13-ம் நூற்றாண்டின் ‘யசோதரா ஜெயமங்களா’ எனும் நூலில் 512 ஆயகலைகள் கூறப்பட்டுள்ளனவாம்.

அவை அனைத்தும் இனிக் கல்வியகங்களில் ‘தாராளக் கல்வி’ என்ற பெயரில் வழங்கப்படும் என்கிறது. ‘யசோதரா ஜெயமங்களா’ என்பது காமசூத்திரத்துக்கு யசோதரா என்பவர் எழுதிய உரையாகும். முழுவதும் பாலியல் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட இந்நூலைப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

ஆசிரியர்-மாணவர்களுக்கான ஜனநாயகப் பங்கேற்பு பற்றி இந்த அறிக்கை மூச்சுகூட விடவில்லை. மொத்தத்தில் அரசு உயர் கல்வி வழங்கும் பொறுப்பை மொத்தமாகக் கைகழுவித் தனியாரிடம் தாரை வார்க்கும் சதி திட்டமே புதிய கல்விக் கொள்கை.

- பேரா.இரா.முரளி, மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம்.

கண்டுகொள்ளப்படாத பெண்கள்!

100 கல்லூரிகளில் மகளிரியல் துறை நிறுவப்படவிருப்பதாக இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பட்ஜெட் ஒதுக்கீட்டில் எதிரொலித்தால் மட்டுமே ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால், ஏற்கெனவே செயலாற்றிக்கொண்டிருக்கும் மகளிரியல் துறைகளுக்கே நிதி சீராக வழங்கப்படுவதில்லை. சொல்லப்போனால் கல்விக் கொள்கை 1986-லேயே அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும், ‘Foundation Course of Gender Studies’ கொண்டுவரப்பட வேண்டும் என்ற பரிந்துரை இருந்தது.

ஆனால், புதிய கொள்கையில் அதுவும் இல்லை. பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டுவதை இந்த அறிக்கை வழிமொழிவதாகச் சொல்கிறது. ஆனால், பாலினச் சமத்துவம் என்பது பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் மட்டுமில்லை.

சமூக வரலாற்றில், அறிவியல் வரலாற்றில் பெண்களுடைய பங்களிப்பு இதுவரை நமது பாடத்திட்டத்தில் சரிவர அறிமுகப்படுத்தப்படவில்லை. அதற்கான முனைப்பு இந்தக் கல்வி கொள்கையிலும் எதிரொலிக்கவில்லை.

- பேரா.முனைவர்.என்.மணிமேகலை, இயக்குநர்-தலைவர்,

மகளிரியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி

இந்திய உயர்கல்வியின் எதிர்காலம்

# பல்கலைக்கழகங்கள் இனி மூன்று அடுக்குகளில் செயல்படும்:

1. ஆராய்ச்சிப் பணிகள் மட்டுமே நடைபெறும் உயர்கல்வி நிறுவனங்கள்.

2. ஆராய்ச்சியும் கற்பித்தலும் நிகழும் நிறுவனங்கள்.

3. கற்பித்தலுக்காக மட்டுமே செயல்படும் நிறுவனங்கள்.

# தற்போது இந்தியாவில் செயல்பட்டுவரும் 800 பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள்

2040-ம் ஆண்டுக்குள் 15 ஆயிரம் கல்வி நிறுவனங்களாகத் தொகுக்கப்படும்.

# ‘மிஷன் நாளந்தா’, ‘மிஷன் தட்சசீலம்’ ஆகிய இரண்டு திட்டங்களுக்குக் கீழ் உயர்கல்வியில் மாற்றங்கள் நிகழ்த்தப்படும்.

# தேசிய ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும். அந்நிறுவனம் ஆராய்ச்சிக்குரிய நிதியுதவியை வழங்கும்.

# அரசு நிதியுதவி பெறும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இளங்கலை அறிவியல், கலைப் படிப்புகளில் சேரத் தேசிய அளவிலான தர நிர்ணய அமைப்பு நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெறவேண்டும்.

# உயர்கல்விக்கான கட்டணத்தைக் கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். பெறப்படும் கல்விக் கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை மட்டும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்க வேண்டும்.

# பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களாக இனிக் கல்லூரிகள் இயங்காது. கல்லூரிகள் தனித்துச் செயல்படும்.

# கல்வித் திட்டத்தை வடிவமைப்பதில், நிதி நிர்வாகத்தில் என அனைத்து விஷயங்களிலும் கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

# கல்லூரிகளே பட்டம் வழங்கும்.

# பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரம் குறைக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிதி வழங்கும் நிறுவனமாக மட்டும் ஆக்கப்படும்.

கட்டுரையாளர், தொடர்புக்கு:

susithra.m@thehindutamil.co.in

SCROLL FOR NEXT