மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் (Defence Research and Development Organization-DRDO) தொழில்நுட்பப் பிரிவில் டெக்னீஷியன் (கிரேடு-ஏ) பதவியில் 351 காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்
இக்காலியிடங்கள் ஆட்டோ மொபைல், புக் பைண்டிங், கார்பென்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்), எலெக்ட்ரிசியன், எலெக்ட்ரானிக்ஸ், பிட்டர், மெஷினிஸ்ட், மெக்கானிக் (டீசல்), மெடிக்கல் லேப் டெக்னாலஜி, மோட்டார் மெக்கானிக், பெயின்டர், ஃபோட்டோகிராஃபர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், டர்னர், வெல்டர் ஆகிய 18 வகையான தொழில்நுட்பப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் ஐ.டி.ஐ. அல்லது என்.டி.சி. சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வுமுறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு (Skill Test) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். ஆன்லைன்வழி எழுத்துத் தேர்வில் கணிதத் திறன், பொது விழிப்புத் திறன், பொது அறிவு, பொது ஆங்கிலம், பொது அறிவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 50 கேள்விகள், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும்.
மொத்த மதிப்பெண் 150. இரண்டு மணி நேரத்தில் விடையளிக்கவேண்டும். தமிழ்நாட்டில் சென்னையிலும் கோவையிலும் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றிபெறுவோருக்கு அடுத்த கட்டமாக சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் திறன் தேர்வு நடத்தப்படும். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இறுதியாக, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடையவர்கள் டி.ஆர்.டி.ஓ. இணையதளத்தை (www.drdo.gov.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.