ஒருமுறை அஸ்வதாவின் வகுப்பைக் கவனித்து விட்டால் சாதாரணக் கல்லுக்கும் புதைபடிவத் துக்குமான வித்தியாசத்தை எவரும் கண்டுகொள்ள முடியும்.
சென்னையில் வசித்துவரும் ஏழாம் வகுப்பு மாணவி அஸ்வதா. இவருக்கு இந்தியாவின் இளம் புதைபடிவ ஆராய்ச்சியாளர் என்ற பாராட்டும் சிறப்புப் பரிசும் இந்தியத் தொழில் வர்த்தக சபைகள் கூட்டமைப்பின் (FICCI) பெண்கள் பிரிவான FLO-வால் அண்மையில் வழங்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல; புவியியல், புதைபடிவவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் இளம் ஆராய்ச்சியாளர் களுக்கும் புதைபடிவங்கள் குறித்து விரிவுரையாற்றிவருகிறார் அஸ்வதா. அறிவியல், கணித ஒலிம்பியாட் போட்டிகளிலும் பல பரிசுகளை இவர் வென்றிருக்கிறார்.
மூன்று வயதில் விளையாட்டாக என்சைக்ளோபீடியாவைப் புரட்டத் தொடங்கியபோது அஸ்வதாவிடமிருந்து புறப்பட்டது புதைபடிவம் குறித்த பேரார்வம். கடற்கரை மணலில் வீடுகட்டி விளையாடும் பருவத்தில் மணற்பரப்பில் புதைந்துகிடந்த சிப்பிகளைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களைத் தொடர்புகொண்டு புதைபடிவங்கள் குறித்துத் தனக்கிருந்த சந்தேகங்களுக்குத் தெளிவுபெற ஆரம்பித்திருக்கிறார்.
அவர்கள் மூலம் கிடைத்த வழிகாட்டுதலில் லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த புதைபடிவங்களின் தாய்மடியான அரியலூருக்குத் தன் பெற்றோருடன் சென்றார். அங்குச் சேகரிக்கத் தொடங்கிய புதைபடிவங்களால் இப்போது அஸ்வதாவின் வீடே ஒரு குட்டி அருங்காட்சியகம்போல் காட்சியளிக்கிறது. 12 வயதுக்குள் 74 விதமான புதைபடிவங்களைச் சேகரித்திருக்கிறார் இந்த இளம் ஆராய்ச்சியாளர்.