இணைப்பிதழ்கள்

ஆட்டிச குழந்தைகள்: சற்றே கூடுதல் தேவை அக்கறைதான்!

செய்திப்பிரிவு

சமூகப் பிரச்சினைகளைக் குறுக்கு விசாரணை செய்யும் குறும்படங்கள் எடுப்பது, சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களை ஊக்கப்படுத்த கருத்தரங்குகள் நடத்துவது, மாற்றுத் திறனாளிகளுக்கும் உளவியல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் சிறப்புப் பயிற்சிகள் அளிப்பது, சமுதாய மனநலத் திட்டத்தின் ஆலோசகராகச் செயல்படுவது என்று பம்பரமாகச் சுற்றிச் சுழல்கிறார் சுமித்ரா பிரசாத்.

சிறு பிராயத்திலிருந்தே பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் இயல்புடைய சுமித்ரா கல்லூரியில் படிக்கும்போது, பார்வையற்றவர்களுக்குத் தேர்வு எழுதிக் கொடுக்கத் தொடங்கினார். பார்வையற்றவர்களுக்கான ஆடியோ, வீடியோ புத்தகங்களுக்குக் குரல் கொடுத்தார்.

இவருடைய மகன் ஸ்ரீநிவாசனுக்கு பிறக்கும்போதே ஆட்டிசம் குறைபாடு மட்டுமல்லாமல் உடலில் சில நோய்கள் இருந்தன. பிறந்தபோதே கல்லீரல் வளர்ச்சியில் டைப் 4 வகை குறைபாடு (GSD-IV) இருந்ததால், அவரின் ஆயுட்காலம் 5 முதல் 7 வருடங்கள்தான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மகனுடைய சிகிச்சைக்காகவே சொந்த ஊரான மும்பையை விட்டுச் சென்னையில் குடியேரினார் சுமித்ரா. மாற்றுத் திறனாளிகளுக்கான தொடர்ச்சியான சிகிச்சை, உளவியல் ஊக்கம் ஆகியவற்றால், ஸ்ரீனிவாசன் இன்று 24 வயதுக் குழந்தையாக நம் முன் நிற்கிறார். அப்போது தொடங்கி இன்று வரை அவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

“ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஐ.க்யூ.வைப் பரிசோதித்துப் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவருகிறது. இது மிகப் பெரிய தவறு. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தத் துறையில் திறமை இருக்கிறது என்று பார்த்துக் கண்டுபிடித்து அதை மேம்படுத்த வேண்டும். 28 வயது சோமாவாக இருக்கட்டும். 45 வயது பாபுவாக இருக்கட்டும். அவர்களின் திறமையைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்தினாலே போதும்” என்கிறார் சுமித்ரா.

முடியாதா என்ன?

சுமித்ராவின் கவனிப்பில் இருக்கும் சோமா இது நாள் வரை வலது கையை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தார். சாப்பிடுவதும் வலது கையில்தான்; தண்ணீர் எடுத்துக் குடிப்பதும் அதே எச்சில் கையில்தான். ஆனால் அதே சோமா, இன்று இடது கையைப் பயன்படுத்தி வரைய ஆரம்பித்துவிட்டார்.

45 வயது பாபு, சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், 2 வயதுக் குழந்தையின் மனநிலையில் இருந்தவர். வீட்டிலிருந்து அவரை 11 மணிக்கு இங்கே கொண்டு வந்துவிட்டால், 12 மணிக்கு அழ ஆரம்பித்துவிடுவார். இப்போது சிறப்புக் கவனம் தேவைப்படும் அனைவரையும் பார்த்துக் கொள்வது அவர்தான்.

சாத்தியமான வெற்றி

சுமித்ராவின் முயற்சியால் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு, மனம் சார்ந்த செயல்திறன், உளப்பூர்வமான பாதுகாப்பு நிலை, சமுதாய அங்கீகாரம், பொருளாதாரத் தன்னிறைவு அளிக்கப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்துக்கு யோகா மாதிரியான பயிற்சிகள் சொல்லித்தரப்படுகின்றன. சுற்றுப்புறம் சார்ந்த எளிமையான அறிவியல், அன்றாட நிகழ்வுகளைக் கொண்ட பொது அறிவுத் தகவல்கள், ஓவியம் வரையப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல், மனநோயாளிகள், தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கலை சிகிச்சை (Art therapy) மூலம் ஓவியங்கள் தீட்டவும், கைவினைப் பொருட்களைச் செய்யவும், தோட்டம் போடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவர்களுக்கு மெல்ல மெல்லத் தன்னம்பிக்கை ஏற்பட்டவுடன், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் முழுக்க முழுக்க சிறப்புக் கவனம் பெற்றவர்களின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அவற்றில் கலந்துகொள்பவர்கள் அவற்றை வாங்கியே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலந்துகொள்பவர்களுக்கு, அவர்கள் கையால் செய்த நன்றி அட்டைகள் வழங்கப்படுகின்றன.

அவர்கள் அனைவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் கிடைக்கும் பணம் போடப்படுகிறது. மாதம் ஒருமுறை அவர்கள் திரைப்படங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அத்தோடு சாய் பேக்கரி என்ற பெயரில் ஒரு பேக்கரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் செய்யும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தாங்கள் செய்யும் பொருட்களை எடுத்துச் சாப்பிடவும் அவர்களுக்கு உரிமை உண்டு.

உடல் வளர்ந்த நிலையில், உள்ளத்தில் குழந்தையாகவே இருப்பவர்களுக்கு இயல்பான குழந்தைகளிடம் காட்டும் அக்கறையைவிட சற்றே கூடுதலாகக் காட்டினால் போதும்; அவர்கள் ஜொலிப்பார்கள் என்பதை நிரூபிக்கிறார் நம்பிக்கை மனுஷி சுமித்ரா. இவர்களின் வாழ்க்கை தொடர்பான காணொலியைக் காண:

</p>

SCROLL FOR NEXT