மார்ச் 26: நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்திய சென்னுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் போட்லியன் நூலகங்களின் சார்பாக ‘போட்லி’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாடு, அறிவியல், தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்தப் பதக்கம் வழங்கப்படும். அமர்த்திய சென்னுடன் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கசுவோ இஷிகுரோவுக்கும் 2019-ம் ஆண்டுக்கான போட்லி பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் 845 வேட்பாளர்கள்
மார்ச் 29: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார். 845 வேட்பாளர்களில் 779 பேர் ஆண்கள், 65 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், தமிழகத்தின் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில், 269 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தொகுதிகளில், கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 42 வேட்பாளர்களும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
பிரக்ஸிட் தீர்மானம் தோல்வி
மார்ச் 29: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான பிரக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் மூன்றாவது முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்துவிட்டது. பிரிட்டன் வரும் 12 ஏப்ரல் அன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்திருந்தது.
ஆனால், பிரதமர் தெரசா மே முன்மொழிந்த தீர்மானத்துக்கு 344-286 என்ற அடிப்படையில் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 58 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது. இது தொடர்பாக ஏப்ரல் 10 அன்று ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட முடிவெடுத்திருப்பதாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்தார்.
தரமான கல்வி இல்லை
மார்ச் 30: இந்தியாவில் சீனாவைவிட மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிக பள்ளிகள் இருப்பதாகப் புதிய ஆய்வறிக்கையில் நிதி ஆயோக் தெரிவித்திருக்கிறது. ஒரே அளவிலான மக்கள்தொகைக்கு இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகளும் சீனாவில் 5 லட்சம் பள்ளிகளும் செயல்படுவதாக நிதி ஆயோக் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் நான்கு லட்சம் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்கள் படிப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருப்பதாகவும் சொல்கிறது இந்த ஆய்வு.
1.5 கோடி மாணவர்கள் இத்தகைய முறையாகச் செயல்படாத பள்ளிகளில் படிக்கின்றனர். அத்துடன், 10 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறையை இந்தியப் பள்ளிகள் எதிர்கொண்டுள்ளன என்கிறது இந்த ஆய்வு. இந்தியத் தொடக்கப் பள்ளிகளில் 97 சதவீத மாணவர் சேர்க்கை இருந்தாலும், இடைநிற்றல் எண்ணிக்கை அதிகமாகவும் தரமான கல்விக்கான வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது இந்த ஆய்வு.