இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - மல்யுத்தம்: உலகின் முதலிடத்தில் பஜ்ரங்

கனி

ஏப்ரல் 17: இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, ஆண்கள் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில், உலகின் முதல் இடத்தை மீண்டும் தக்கவைத்திருக்கிறார். உலக மல்யுத்த யூனியன் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்ற இவர், கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

ஊடக சுதந்திரத்தில் 140-வது இடம்

ஏப்ரல் 18: ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ அமைப்பு 2019-ம் ஆண்டின் உலக ஊடகச் சுதந்திரப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், 2018-ம் ஆண்டில் 138-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 140-வது இடத்துக்குப் பின்னுக்குச் சென்றிருக் கிறது. ஊடக சுதந்திரத்தில், நார்வே, பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.

இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு

ஏப்ரல் 18: 11 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத் தைச் சேர்ந்த  95 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 67.84 சதவீத வாக்குப்பதிவாகியிருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாகப் புதுச்சேரியில் 78 சதவீதமும், மணிப்பூரில் 77.86 சதவீதமும் மேற்கு வங்கத்தில் 76.42 சதவீதமும் வாக்குப் பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 71.11 சதவீத வாக்குப் பதிவாகியிருக்கிறது. வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாகத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அத்துடன், தமிழ்நாட்டின் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 71.62 சதவீத வாக்குப்பதிவாகியது.

உலகப் பாரம்பரிய நாள் கொண்டாட்டம்

ஏப்ரல் 18: 2019-ம் ஆண்டுக்கான உலகப் பாரம்பரிய நாள் ‘கிராமப்புற நிலவெளி’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய, கலாச்சாரச்  சின்னங்கள், இடங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய நாள் கொண்டாடப்படுகிறது.

பிளஸ் 2: தேர்ச்சி சதவீதம் 91.03

ஏப்ரல் 19: தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வு இயக்குநரகம் வெளியிட்டது. இந்த ஆண்டு பொதுத் தேர்வை 8,69,423 பேர் எழுதியிருந்தனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.03. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88. 57, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.64 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  1,281 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றிருக்கின்றன.

5 புதிய ஜிஎஸ்எல்வி ஏவுகணை களுக்கு ஒப்புதல்

ஏப்ரல் 15: ஐந்து புதிய ஜிஎஸ்எல்வி செயற்கைக்கோள் ஏவுகணைகளை 2021-2024 வரையான காலகட்டத்தில் விண்ணில் செலுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி யிருக்கிறது. நான்காம்கட்ட ஜிஎஸ்எல்வி தொடர்ச்சி திட்டத்தின் பகுதியாக, ஐந்து ஜிஎஸ்எல்வி ஏவுகணைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இதில், ஒரு ஜிஎஸ்எல்வி செயற்கைக்கோள் ஏவுகணை, இரண்டாவது செவ்வாய்த் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிபத்தில் எரிந்த நோத்ர தாம்

ஏப்ரல் 15: பாரிஸின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நோத்ர தாம் தேவலாயம், மறுசீரமைப்பின்போது ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்து கடும் சேதமடைந்திருக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, பாரிஸ் நகரின் இதயமாகக் கருதப்பட்ட இந்த தேவலாயம், மீண்டும் கட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோன்.

முதல்  முப்பரிமாண இதயம்

ஏப்ரல் 15: இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனித திசுக்கள், நாளங்களைக் கொண்டு முப்பரிமாணத்தில் அச்சடிக்கப்பட்ட இதயத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த 3-டி இதயம், உறுப்பு மாற்று சிகிச்சையில் பெரிய மருத்துவ மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தி ருக்கின்றனர். செர்ரி பழத்தின் அளவில் இந்த முப்பரிமாண இதயம் உருவாக்கப்பட்டுள்ளது.

50 லட்சம் பேர் வேலையிழப்பு

ஏப்ரல் 16: நாட்டில் 2016, நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 50 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘இந்தியாவின் பணி நிலை’ அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம்,  2011 முதல் 2018 வரை, இரண்டு மடங்கு அதிகரித்து 6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மீண்டும் பிரதமராகிறார் நெதன்யாஹு

ஏப்ரல் 17: ஐந்தாவது முறையாக  இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாஹு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இஸ்ரேல் அதிபர் ரெவென் ரிவ்லின், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நியமனக் கடிதத்தை அவரிடம் வழங்கியிருக்கிறார். 120 நாடாளுமன்ற இடங்களில், 65 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி யமைக்கவிருக்கிறார்  பெஞ்சமின்.

SCROLL FOR NEXT