நாடு விடுதலை பெற்றபின் இதுவரை 16 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்திய அரசியல் சாசனம் பெண்களுக்குச் சரிபாதி உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், நாடாளுமன்றப் பதவிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில் நாடு பின்தங்கியிருக்கிறது என்பதையே இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்கள் காட்டுகின்றன.
1951-52-ல் சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. 489 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 22 பெண் உறுப்பினர்கள் வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தனர். 1957-ல் 494 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் நாடு முழுவதும் 45 பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இவர்களில் 22 பேர் வெற்றிபெற்றனர்.
அடுத்தடுத்த மக்களவைத் தேர்தல்களில் வென்ற பெண் உறுப்பினர்களின் வீதம் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. 1984-ல் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் 171 பெண்கள் போட்டியிட்டனர். இவர்களில் 43 பேர் வென்றனர். பெண் உறுப்பினர்களின் வீதம்
7.95 ஆக, முந்தைய தேர்தல்களைவிடக் கணிசமாக உயர்ந்திருந்தது. 1996-லிருந்து 543 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
1984-ல் கிட்டத்தட்ட 8 சதவீதத்தைத் தொட்டுவிட்ட பெண் உறுப்பினர்களின் சதவீதம், 2009-ல் நடைபெற்ற தேர்தலில்தான் இரட்டை இலக்கத்தைத் (10.86) தொட்டது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட 556 பெண்களில் 59 பேர் வென்றனர். கடைசியாக 2014-ல் நடைபெற்ற தேர்தலில் 62 பெண்கள் வென்றனர்.
வேட்பாளர்களிலும் ஏற்ற இறக்கம்
பெண் உறுப்பினர்களைப் போலவே பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் ஏற்ற இறக்கங்களைக் கண்டது. 1957 தேர்தலில் 45 பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். 1980 தேர்தலில் பெண் வேட்பாளர் எண்ணிக்கை முதல்முறையாக மூன்று இலக்கத்தைத் தொட்டது (143). 1996 தேர்தலில் 599 பெண்கள் போட்டியிட்டனர், அடுத்ததாக 1998-ல் நடைபெற்ற தேர்தலில், இந்த எண்ணிக்கை பாதிக்கும் கீழாகக் குறைந்தது (274).
பிறகு படிப்படியாக உயர்ந்து 2014 தேர்தலில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிகபட்சமாக 668 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
உலக நாடாளுமன்றங்களில் மகளிர் பங்கேற்பின் சராசரி 23%. இதில் பாதியைக்கூட இந்தியா இன்னும் தொடவில்லை. 2014-ல் அமைந்த 16-வது மக்களவையில் பெண் உறுப்பினர்கள் 11.42% தான். மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட பெண்களைச் சேர்த்தாலும், உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியாவின் இடம் பெரிதாக மாறிவிடப் போவதில்லை.
அடுத்த மாதம் மக்களவைத் தேர்தல் தொடங்குகிறது. அமையப்போகும் 17-வது மக்களவையில் பெண்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். ஆனால், நிரந்தரமான தீர்வு 33% நாடாளுமன்றத் தொகுதிகளைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அனைத்துக் கட்சிகளும் நடைமுறைப்படுத்துவதில்தான் அடங்கியிருக்கிறது.
மக்களவையின் முதல் பெண்கள்
> இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி. இதுவரை பிரதமர் பதவி வகித்துள்ள ஒரே பெண்ணும் அவர்தான்,
> 2009-ல் மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் ஆனார் மீரா குமார். 2014-ல் அமைந்த 16-வது மக்களவைக்கு சுமித்ரா மகாஜன் சபாநாயகராகச் செயல்பட்டார்.
> மக்களவை துணை சபாநாயகராக இதுவரை ஒரு பெண்கூடப் பணியாற்றியதில்லை.
> மக்களவைக்கு அதிக முறை (8) தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர் சுமித்ரா மகாஜன். 16-வது மக்களவையின் மூத்த பெண் உறுப்பினரும் இவர்தான்.