இணைப்பிதழ்கள்

சேதி தெரியுமா? - உலகின் பெரிய ஆயுத இறக்குமதியாளர்

கனி

மார்ச் 11: உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா உருவெடுத்திருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 2014-18 காலகட்டத்தில், இந்தியா உலக அளவில் 9.5 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்திருக்கிறது. 12 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்த சவுதி அரேபியா முதல் இடத்தில் இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய ஐந்து நாடுகள் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2014 முதல் 2018 வரை உலகின் 75 சதவீத ஆயுதங்களை ஐந்து நாடுகளும் ஏற்றுமதிசெய்திருக்கின்றன.

சுற்றுச்சூழல் பாதிப்பு: ஐ.நா. எச்சரிக்கை

மார்ச் 13: ஐ.நா.வின் உலகளாவிய சுற்றுச்சூழல் பார்வை 2019 அறிக்கை ‘ஆரோக்கியமான கோள், ஆரோக்கியமான மக்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 2050-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மாசுபாட்டால் கோடிக்கணக்கான இறப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்திருக்கிறது. 740 பக்கங்கள் கொண்ட இந்தச் சுற்றுச்சூழல் அறிக்கையை 70 நாடுகளைச் சேர்ந்த 250 விஞ்ஞானிகள் தயாரித்திருக்கின்றனர்.

ரஃபேல் வழக்கு ஒத்திவைப்பு

மார்ச் 14: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், உத்தரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஊடகத்தில் வெளியான ரகசிய ஆவணங்களை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று மத்திய அரசு கோரியுள்ளது. வெளியான ஆவணங்களை ஆதாரமாக ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து முதலில் முடிவு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கு, ஏப்ரல் 5 அன்று மீண்டும் விசாரிக்கப்படும்.

அரசியல் தலையீடு கூடாது

மார்ச் 14: இந்தியாவில் புள்ளிவிவரங்களை வெளியிடும்போது, அரசியல் தலையீடு இருப்பதாக 108 பொருளாதார நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையில் குற்றம்சாட்டியிருக்கின்றனர். புள்ளியியல் நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் திருத்தம் செய்தது, தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் வேலைவாய்ப்புத் தரவுகளை வெளியிடாமல் மத்திய அரசு நிறுத்திவைத்திருப்பது போன்றவற்றில் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.

நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல்

மார்ச் 15: நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு மசூதிகளில் நடைபெற்ற தீவிரவாதத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 49 பேர் பலியாயினர். இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயது பிரென்டன் ஹாரிஸன் டாரன்ட் என்பவர்  கைதுசெய்யப்பட்டார். வெள்ளை தேசிய தீவிரவாதக் கொள்கையைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவிட்டு, இந்தத் துப்பாக்கிச்சூட்டை தன் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டிருந்தார் பிரென்டன்.

SCROLL FOR NEXT