இணைப்பிதழ்கள்

வான்கோவின் ஓவியத்தில் ஒளி

ஷங்கர்

மனித மூளையின் மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சங்களில் ஒன்றாக வடிவங்களை அடையாளம் காண்பதையும் அவற்றை விளக்க முடிவதையும் சொல்லலாம். திரவ இயக்கவியலில் ‘கொந்தளிப்பு ஓட்டம்’ என்பதை இயற்பியல் ரீதியாகப் புரிந்துகொள்வது இன்னமும் சிரமமாகவே உள்ளது.

கொந்தளிப்பு என்னும் உணர்வுநிலை, கலையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வான்கோவின் ஓவியம் வழியாகப் புரிந்துகொள்ள முயலலாம்.

1889-ம் ஆண்டு ஜூன் மாதம், வின்சென்ட் வான்கோ, மனநோய்க்காக சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த செயிண்ட் பால் தி மவுசோல் மனநலக் காப்பகத்தின் அறை ஜன்னலிலிருந்து பார்த்த இரவுக் காட்சிதான் அவர் வரைந்த ‘ஸ்டார்ரி நைட்’ ஓவியம். இந்த ஓவியத்தில் சுழற்சியான தூரிகைத் தீற்றல்களால் சுழலும் மேகங்களை, நட்சத்திரங்களால் நிறைந்த இரவு வானத்தை வரைந்திருப்பார்.

சுழல்மேகத்தின் சூட்சுமம்

வான்கோவும் அக்காலகட்டத்து ஓவியர்களும் ஒளியை அதன் இயக்க நிலையிலேயே பிடிக்க முயன்றார்கள். நீலமான இரவு வானத்தில் நட்சத்திரத்தின் ஒளி மினுங்கிப் பால்வெளியினூடாக உருகுவதை வான்கோ சித்தரிக்கிறார். இந்த விளைவு ஓவியக் கித்தானில் உள்ள நிறங்களின் தீவிர ஒளிர்தலாலும் சுடர்தலாலும் சாதிக்கப்பட்டது.

நமது மூளையிலுள்ள கட்புலப் புரணியில் (visual cortex), உயிர்ப் பரிணாமத்தின் மிகத் தொடக்க நிலையில் தோன்றிய பகுதியால் ஒளியை நிறவேறுபாடாகவும் இயக்கமாகவும் மட்டுமே பார்க்க முடியும். அதனால் நிறத்தைப் பகுத்துப் பார்க்க முடியாத நிலையில் ஒரே ஒளிர்தல் அளவைக் கொண்ட நிறங்கள் முயங்குவதைப் போல இரண்டு நிறங்கள் தீட்டப்பட்ட பகுதிகளைச் சேர்த்துப் பார்க்கும்.

மனிதக் குரங்காகப் பரிணாமம் பெற்ற நிலையில் வளர்ந்த மூளையின் கட்புலப் புரணிப் பகுதியால் இரண்டு நிறங்களைத் தனித்தனியாகப் பார்க்க முடியும். ஆனால், இந்த இரண்டு பார்வைகளும் ஒரு சேர நிகழும்போது, ‘ஸ்டார்ரி நைட்’ போன்ற படைப்புகளில் ஒளி துடித்து, மினுமினுத்து ஒளிரத் தொடங்குகிறது. ஒளி உண்மையில் எப்படி நகர்கிறதோ அதே தன்மையில் தூரிகைத் தீற்றல்களும் வான்கோ போன்ற ஓவியர்களின் படைப்புகளில் இயங்குகின்றன.

இயற்பியல்ரீதியாக ஆற்றல் பாயும் விதமும் கொந்தளிப்பான தூரிகைத் தீற்றல்களுக்கு ஒப்பான பாய்ச்சலுடன் ஒப்பிடத்தகுந்ததாகவே உள்ளது. பெரிய சுழிப்புகள் தங்கள் ஆற்றலைச் சிறிய சுழிப்புகளுக்குக் கடத்துகின்றன. வியாழன் கிரகத்தில் சுழலும் புயல்மேகத்தை (Jupiter's Great Red Spot) இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 

ரகசியம் புலப்பட்ட தருணம்

2004-ம் ஆண்டு, ஹப்பில் வானியல் தொலைநோக்கிக் கருவியைப் பயன்படுத்திப் பார்த்தபோது, ஒரு நட்சத்திரத்தைச் சுற்றித் தூசி மேகங்களின் சுழிப்புகளையும் வாயுவையும் விஞ்ஞானிகள் பார்த்தனர். இது அவர்களுக்கு வான்கோவின் ‘ஸ்டார்ரி நைட்’ ஓவியத்தை ஞாபகப்படுத்தியது. இதுதான் மெக்சிகோ, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரையும் வான்கோவின் ஓவியங்களில் உள்ள ஒளிர்தலை ஆராய்வதற்கு ஊக்கப்படுத்தியது. 

vanco-2jpg

வான்கோவின் ஓவியங்களை முழுமையாக டிஜிட்டைஸ் செய்து, இரண்டு படத் துணுக்குகளுக்கிடையே வேறுபடும் ஒளிர்தல் அந்த விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டது.திரவங்கள் கொந்தளிப்பான சூழலில் எப்படிப் பாயுமோ அதே நிலையில் வான்கோ,கொந்தளிப்பான நிலையில் இருந்தபோது வரைந்த ஓவியங்களின் தூரிகைத் தீற்றல்கள் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். அப்படியான கொந்தளிப்பான தூரிகைத் தீற்றல்களை ஓவியர் எட்வர்ட் முன்ச் வரைந்த ‘தி ஸ்க்ரீம்’ ஓவியத்திலும் பார்க்க முடியும்.

இயற்கையின் ரகசியப் பக்கத்தில் நடக்கும் இயக்கம், திரவநிலை, ஒளியின் இயக்கங்களை வான்கோ, மனத்திலுள்ள கண்ணால் பார்த்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தீவிரமான துயரத்திலிருந்தபோதுதான், இயற்கையின் புதிர்த்தன்மை கொண்ட அழகு அவருக்குப் பிடிபடவும் செய்திருக்கிறது.

SCROLL FOR NEXT