தேர்வுகளுக்குத் திட்டமிட்டுத் தயாராவது, தேர்வுகளைத் திறம்பட எழுதுவதைப் போன்றே தேர்வுகளை நிறைவு செய்வதிலும் மாணவர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.
தேர்வுக்கு முன்பாகவும் தேர்வு நேரத்திலும் இருக்கும் நெருக்கடிகள், தேர்வு முடியும் தினங்களில் குறைந் திருக்கும். இயல்பான இந்த மனநிலை சில நேரம் கடைசியாக எழுத வேண்டிய பாடங்களின் மதிப்பெண் குறையவும் காரணமாகலாம்.
தேர்வுகள் நிறைவடையும் மகிழ்ச்சி, வரவிருக்கும் கோடை விடுமுறை, அதையொட்டிய குதூகலங்கள் எனச் சிலர் மனத்தளவில் கவனம் சிதறுவார்கள். இந்தப் போக்கு நிறைவாக வரும் ஓரிரு தேர்வுகளில் வழக்கமான முனைப்பு குறையவும் தேர்வில் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை இழக்கவும் காரணமாகிவிடும். எனவே, கடைசிப் பாடத்துக்கான தேர்வு முடியும்வரை தேர்வுக்கான கவனம் சிதறாமல் இருப்பது அவசியம்.
அலட்சியம் வேண்டாம்
ஒரு பாடத்துக்கான தேர்வு முடிந்ததும் அதுதொடர்பான யோசனைகளில் இருந்து விடுபட்டு, அடுத்த பாடத்துக்குத் தயாராகத் தொடங்க வேண்டும். மிகச் சிறப்பாக எழுதி முடித்த ஒரு தேர்வில் கிடைக்கும் மகிழ்ச்சி, அடுத்து எழுதப்போகும் தேர்வைப் பாதிக்கும் அலட்சியமாக மாறிவிடக் கூடாது.
அதேபோல முந்தைய தேர்வைச் சரியாக எழுதவில்லை என்ற கவலை தோன்றுமானால் அதுவும் அடுத்து வரும் தேர்வைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. தேர்வறையை விட்டு வெளியேறும்போதே அது தொடர்பான சிந்தனைகளுக்கு விடை கொடுப்பது நல்லது.
நிறைவாகச் சரிபார்க்கலாம்
வேண்டுமானால் அனைத்துத் தேர்வுகளும் முடிந்த பிறகு பாட வாரியாக வினாத்தாள்களை ஆராய்ந்து உத்தேச மதிப்பெண்களை மதிப்பிடுவதில் இறங்கலாம். முக்கியமாக மொழிப் பாடங்களின் இலக்கணம், மொழிப் பயிற்சிப் பகுதிகள், கணித வினாத்தாள் போன்றவற்றைச் சரிபார்ப்பது முந்தைய தவறுகளில் இருந்து மீளவும், மேல் வகுப்புகளுக்கான தயாரிப்பாகவும் நிச்சயம் உதவும்.
அடுத்த வகுப்புக்குத் தயாராகலாம்
கீழ் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், தேர்வு நிறைவாகும் தினங்களில் அடுத்த கல்வியாண்டுக்கு உதவும் வகையில் சீனியர் மாணவர்களிடம் இருந்து அவர்களின் புத்தகங்கள், நோட்டுக்களைச் சேகரித்துக்கொள்ளலாம். கல்வியாண்டு தொடக்கத்தில் அவற்றைத் தேடுவது பயனில்லாது போகலாம். குறிப்பேடுகளை வழங்கும் சீனியர்களில் நன்றாகப் படிப்பவர்கள், கையெழுத்து சிறப்பாக இருப்பவர்களாகத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.
தேர்வறையில் நிறைவு ஒரு செயலுக்கான நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம் என்பதுபோல, ஒரு நல்ல முடிவு முழு வெற்றிக்குச் சமம். ஆனால், தேர்வுகளின் தொடக்கத்தில் மாணவர்கள் காட்டும் ஆர்வமும் முயற்சியும் தேர்வின் முடிவுவரை தொடர்வதில்லை. இந்தப் போக்கு ஒட்டுமொத்தமாக மாணவர்களின் உழைப்பை வீணாக்கும். தேர்வறையில் ஒவ்வொரு தேர்வையும் நிறைவு செய்யும்போது, திருப்புதல் சரிபார்ப்புக்கு என நேர மேலாண்மையில் முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது உதவும். பெரும்பாலான மாணவர்களுக்குத் தேர்வுத் தாளின் முதல் பக்கத்தில் கையெழுத்து பிரமாதமாக இருக்கும். ஆனால், பக்கங்கள் செல்ல செல்லக் கையெழுத்து மோசமாகும். இதைத் தவிர்த்தாக வேண்டும். வரிசை எண்கள், ஏதேனும் விடைகளை அடித்திருப்பது, முக்கிய இடங்களில் அடிக்கோடிடுவது, முதல் பக்கத்தைச் சரியாகப் பூர்த்தி செய்திருப்பது ஆகியவற்றைத் தேர்வின் நிறைவாகச் சரிபார்க்கலாம். எங்கேனும் விடை தெரியாது பாதியில் விட்டிருந்தால் அவற்றை யோசித்துத் தெரிந்ததை எழுதலாம். பதில் மறந்துபோயிருப்பினும் பாடப் பகுதியிலிருந்து தொடர்புடைய எதையாவது எழுதி நிறைவு செய்வதன் மூலம் பகுதி மதிப்பெண்களையாவது பெறலாம். எளிமையான தேர்வுகளின் கடைசி அரைமணி நேரத்தில் மேம்போக்காக இருப்பதும் அக்கம்பக்கம் வேடிக்கை பார்ப்பதும் புதிய சங்கடங்களை உருவாக்கும். கடினமான தேர்வுகளின் கடைசி நேரத்தில் பதற்றமின்றி இருக்க முயல்வதும் மதிப்பெண் இழப்பைத் தவிர்க்க உதவும். |