தரம் என்ற பெயரிலோ பொருளாதார அடிப்படையிலோ வடிகட்டப்படாமல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்; மெருகேற்றப் படுகிறார்கள். இருந்தும், அரசுப் பள்ளிகள் தரமற்றவை, தனியார் பள்ளிகளே தரத்தில் உயர்ந்தவை என்ற சிந்தனை பொதுமக்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. ஆசிரியர் என்றால் ஒருவித வெறுப்பே இன்று சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது. நியாயமான கோரிக்கைக்காகப் போராடினால்கூட, முன்தீர்மானத்துடனே அவர்கள் அணுகப்படுகிறார்கள்.
‘2003-ல் இருந்து அமலில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும். அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்கும் அரசாணையை நீக்க வேண்டும். பள்ளிக்கூடங்களை மூடவும் இணைக்கவும் திட்டமிட்டிருப்பதை, செயலாக்கக் கூடாது’- உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் ஜனவரி 22-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
2003-ம் ஆண்டுக்குப்பின் பதவியேற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ஆனால், எம்.எல்.ஏ., எம்.பி., போன்றோருக்கு ஓய்வூதியம் உண்டு. இந்த அநீதிக்காக நியாயம் கேட்டுப் போராடினார்கள். ஆனால், அதிக சம்பளம் கேட்கிறார்கள் என அவர்களின் போராட்டம் திரித்துக் கூறப்பட்டது.
பழிவாங்கும் படலம்
அரசாங்கத்துடனான அவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசு துணிந்து பலவித அடக்குமுறைகளில் ஈடுபட்டது. பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநீக்கமோ இடமாற்றமோ செய்யப் பட்டுப் போராடியவர்கள் பந்தாடப்பட்டனர். வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளானதாலும் தேர்வு நேரத்தில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதாலும் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஆனால், அதன் பின்னர், அரசு தனது பழிவாங்கும் படலத்தைத் தொடங்கியது. தற்போது ஆங்காங்கே நடத்தப்பட்டுவரும் ஆசிரியர் பணியிடமாற்றம், அந்தப் பழிவாங்கும் படலத்தின் ஒரு முகமே!
மாணவர்களின் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போராட்டத்தில் பங்கேற்ற நான்கு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அந்தப் பள்ளியின் மாணவிகள், தேர்வைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரின் காலில் மாணவிகள் விழுந்து கதறி அழுது, 4 ஆசிரியர்களையும் இதே பள்ளியில் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றனர்.
கோத்தகிரியில் தேநாத் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களின் இடைநீக்கத்துக்கு எதிராக ஊரே திரண்டு போராடியது. ஏனென்றால், இடைநீக்கம் செய்யப்பட்tட ஆசிரியர் தர்மராஜ், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் நடத்தியதால்தான், அந்தப் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 4-ல் இருந்து 65-ஆக இன்று உயர்ந்து உள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றதற்காக, திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவரைச் சூழ்ந்துகொண்டு, வேறு பள்ளிக்குச் செல்ல விட மாட்டோம் எனக் கூறி மாணவர்கள் கதறி அழுதனர். அங்கு வந்த மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் இறங்கினர்.
திருமங்கலம் அருகே கரிசல்காளம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். திருப்புத்தூர் அருகே சோழம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டதை எதிர்த்துப் பெற்றோர்களுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து, மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதேபோல் தமிழகத்தின் பல பள்ளிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவல வேடிக்கை
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சம்பளம், தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தைவிடப் பன்மடங்கு அதிகமாக உள்ளது, அப்படியிருக்க அவர்கள் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. முறையான ஊதியமின்றி தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு சுரண்டப்படுவதைப் பற்றிக் கேள்வி எழுப்பாமல், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிக ஊதியம் என்று கேட்கப்படுகிறது. அந்தக் கேள்விக்கு அரசும் துணை நிற்பது அவலம். பல பள்ளிகளில் மாணவர்கள் இன்று முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம், ஆசிரியர்களுக்கு எதிரான சமூகத்தின் பொதுப் புத்தியை மாற்றியமைக்குமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.