போட்டித்தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய ஆங்கில நாளிதழ் ‘The Hindu’ என்பது காலங்காலமாக கடைப் பிடிக்கப்பட்டுவரும் ஒரு மரபு. அந்த ‘இந்து’ நாளிதழ் போல் இப்போது தமிழிலும் நாளிதழ் கிடைக்கிறது என்பது மகிழ்ச்சி. அந்த நிறுவனம் மாணவர்களுக்கு உதவும் இயர்புக் ஒன்றையும் 2019 முதல் கொண்டு வந்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.
ஆண்டு நிகழ்வுகள் அனைத்தையும் தமிழில் தொகுத்துத் தரும் இயர்புக் தமிழக மாணவர்களின் அறிவு வளர்ச்சியை ஆற்றுப்படுத்தும் தொண்டாகக் கருதப்படுவது மட்டுமின்றி, ஒரு பயிற்று மொழியாகத் தமிழின் தற்காலப் பொருத்தப்பாட்டையும் சொல் வளத்தையும் வளர்த்து எடுக்கும் ஒரு பணியாகவும் பார்க்கப்பட வேண்டும்.
ஆதார செல்கள் சிகிச்சை, தேசிய நுழைவுத்தேர்வுகள், வாராக்கடன், தமிழகச் சூழலியல் போராட்டங் கள், நாடாளுமன்றத் தேர்தல் வரலாறு, காந்தி -150 எனப் பல் துறைத் தகவல்களைக் கொண்ட பயனுள்ள புத்தகமாக 'இந்து தமிழ் இயர்புக்' அமைந்துள்ளது.
‘போட்டித்தேர்வுகளில் ஆங்கிலம் ' என்ற கட்டுரை தமிழ்வழி பயின்ற மாணவர்கள், ஆங்கிலத்தின் நுணுக்கங்களை அறிந்துகொள்ளப் பயன்படும். அதேபோல் மாணவர்களுக்குக் கைகெடுக்கும் 25 செயலிகள் என்ற கட்டுரை, கல்வியின் புதிய சாளரங்களை நவீனத் தொழில்நுட்பங்கள் திறப்பதை உணர்த்துவதாக உள்ளது.
முதல் பெண்கள், முதல் மகளிர் மருத்துவர்கள், மகளிர் அறிவியல் முன்னோடிகள், அந்நியரை எதிர்த்த ஐவர், தமிழக முதல் முகங்கள் என்று சுளைசுளையாகத் தொகுக்கப்பட்ட தகவல்கள் இயர்புக்குக்கு அணி சேர்க்கின்றன.
கட்டமைப்பு, உள்ளடக்கம், ஆக்க முறை, தலைப்புகள், வாசிப்பை எளிதாக்கும் வடிவமைப்பு, எழுத்துரு என்று மற்ற வகைகளிலும் ‘இந்து தமிழ்’ இயர்புக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. ‘இந்து தமிழ்’ நாளிதழின் இந்தத் தமிழ்த் தொண்டு தொடர வாழ்த்துகிறேன்.
- ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://www.kamadenu.in/publications SMS வழியே முன்பதிவு செய்ய: Y19 |