‘எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே’ என்று சொல்லும்போது நம்முடைய ஒரு விரல் புரட்சிக்கான (வாக்குரிமை) சாத்தியத்தை மட்டுமே அந்தச் சொற்றொடர் குறிப்பதாக நினைத்துக்கொள்கிறோம். ஆனால், இந்திய அரசியலமைப்பு அத்தனை குடிமக்களுக்கும் உறுதிப்படுத்தி இருக்கும் அடிப்படை உரிமைகளை அறிந்துகொண்டு அவற்றைச் செயல்படும்போதுதான் அந்தச் சொற்றொடர் உயிர்பெறும்.
சுதந்திரம் பெற்ற நாடு என்ற நிலையிலிருந்து ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஜனவரி 26 அன்று இந்தியா பெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததன் மூலமே இந்தத் தகுதியைத் தேசம் அடைந்தது.
26 ஜனவரி 1950 அன்று இந்தியா ஜனநாயக நாடாக உருவெடுக்கும் என்று 1949 நவம்பர் 25 அன்றே அம்பேத்கர் தன்னுடைய உரையில் அறிவித்தார். அதாவது அன்று முதல் மக்களுடைய, மக்களால், மக்களுக்கான அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் என்று ஜனநாயகத்துக்கு விளக்கம் அளித்தார். அதே நேரம் முரண்பாடுகள்கூடிய வாழ்க்கைக்குள் நாம் அடியெடுத்துவைக்கப்போகிறோம்; அரசியலில் சமத்துவமும் சமூகப் பொருளாதாரத் தளத்தில் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த பயணத்தைத் தொடங்கவிருக்கிறோம். இந்தப் பாகுபாட்டைக் களைய அரசியல் ஜனநாயகத்தைச் சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.
சமூக ஜனநாயகம் என்பது என்ன?
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வாழ்க்கை கொள்கைகளாகக் கடைப்பிடிப்பதே சமூக ஜனநாயகம். இவை மூன்றையும் பிரிக்க நேரிட்டால் ஜனநாயகம் தோற்றுப்போகும் என்று எச்சரிக்கிறார் அம்பேத்கர். ஏனென்றால், சமத்துவம் மறுக்கப்பட்டால் பலர் மீது சிலர் அதிகாரம் செலுத்துவதாகச் சுதந்திரம் மாறிவிடும். அதே சுதந்திரம் இன்றி சமத்துவத்தை நிலைநாட்டும்போது தனிமனித முயற்சிகளை முறியடிப்பதாகிவிடும். சகோதரத்துவம் இன்றி சுதந்திரமும் சமத்துவமும் இயல்பாக வாய்க்க முடியாது.
ஆனால், இந்தியச் சமுதாயமானது ‘படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை’ (graded inequality) அடிப்படையாகவைத்துக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிலரிடம் அபரிமிதமான செல்வம் குவிந்திருக்கிறது. பலர் வறுமையில் வாட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இவை அல்லாது சாதி அடிப்படையிலான பாகுபாடு மக்களைப் பிளவுபடுத்திவைத்திருக்கின்றன. இவற்றைக் கடந்து சமூக ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதே இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் சட்டம். அவற்றின் முக்கியக் கூறுகள் ஒரு பார்வை:
1. சம உரிமை (கூறு 14-18)
சட்டத்துக்கு முன்னால் அனைவரும் சமம். சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துதல் குற்றம். அரசுப் பணிகளைப் பெற அனைத்துக் குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. தீண்டாமை குற்றம். நெடுங்காலம் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவது சலுகை அல்ல அவர்களுடைய உரிமை.
2. சுதந்திர உரிமை (கூறு 19-22)
பேச்சு, கருத்து சுதந்திர உரிமை. அமைதியான, சரியான நோக்கத்தில் கூட்டம் நடத்தும் உரிமை. சங்கம், அமைப்புகள் தொடங்கும் உரிமை. தேசத்தின் எந்தப் பகுதிக்கும் பயணம் செல்வதற்கான, எங்கு வேண்டுமானாலும் குடியேறுவதற்கான உரிமை.
6-14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும் உரிமை (கூறு 21(ஏ)) 2002-ல் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. 2009-ல்தான் இது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை (கூறு 23-24)
வலுக்கட்டாயமாகப் பணியில் அமர்த்தி வேலை வாங்குதல் சட்டப்படி குற்றம். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிற்சாலை, சுரங்கம் உள்ளிட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துதல் குற்றம்.
4. மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை (கூறு 25-28)
தன் விருப்பம்போல எந்த மத்தையும் பின்பற்றும் உரிமை.
5. கலாச்சார மற்றும் கல்வி கற்கும் உரிமை (கூறு 29-30)
சிறுபான்மையினர் தங்களுடைய மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை. சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கும் கல்வி நிறுவனங்களை நிறுவும் உரிமை.
6. அரசியல் அமைப்பைச் சீர்மைப்படுத்தும் உரிமை (கூறு 32-35)
அடிப்படை உரிமைகளை மக்களிடம் இருந்து அரசே பறிக்கக்கூடும் என்று இந்திய அரசியலமைப்பு கருதுகிறது. அப்படி நிகழும்பட்சத்தில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காத்துக்கொள்ளக் குடிமக்கள் கூறு 32-ன் படி நீதிமன்றத்தை அணுகும் உரிமையும் உள்ளது.
சமகாலத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நம்மைத் தகவமைத்துக்கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் முக்கியம் நம்முடைய உரிமைகளை அறிந்துகொள்ளுதலும் வரித்துக்கொள்ளுதலும். இனி சட்டம் நம் கையில்தானே!