காலம்: பொ.ஆ.மு. 290
“செழியன், வா இன்னைக்குத் தோணித்துறை பக்கமா போவோம்.”
“தோணித்துறைன்னா, துறைமுகம் தானே, குழலி?”
“ஆமா, அன்னைக்குப் புகார் நகரம் பரபரப்பான துறைமுகமா இருந்துச்சு. வெளிநாடுகள்ல இருந்து வந்த கப்பல்கள் புகார் தோணித்துறையில் தங்கி வியாபரம் செய்தன.”
“துறைமுகம்னா, வேற என்ன வசதியெல்லாம் இருந்துச்சு?”
“கப்பல்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம், துறைமுகத்தை ஒட்டி பொருட்களைச் சேமிச்சு வைக்கும் கிடங்கு, சுங்கத் துறை அலுவலகம் எல்லாம் இருந்துச்சு.”
“அதோ தெரியுதே அது யவனர்களுக்கான தோணித்துறை, பக்கத்துலயே கப்பல் பழுதுபார்க்கும் இடமும் இருக்கு பாரு. இந்தப் பக்கமா இருக்கிறது யவனர்களோட வீடு.”
“ஆமா, யவனர் யவனர்னு சொல்றியே, யாரு இவங்கெல்லாம்?”
“கிரேக்கர்கள், ரோமர்களைப் பழங்காலத்தில் யவனர்கள்னுதான் தமிழ்ல சொல்லியிருக்காங்க. கப்பல்ல வந்து வர்த்தகம் செஞ்ச யவனர்களுக்கு மிளகும் முத்துகளும் அதிகம் தேவைப்பட்டதா இருந்துச்சு.”
“அது சரி, மிளகும் முத்தும் புகாரில் கிடைச்சதா?”
“மிளகை வேறிடங்கள்ல இருந்து வாங்கி வந்து வித்திருக்காங்க. அதோட பருத்தி, மஸ்லின் துணிகள் அதிகம் ஏற்றுமதியாச்சு. செம்மறியாட்டுக் கம்பளி நூல்போல, பருத்தியை நூல் காய்க்கும் மரம்னே யவனர்கள் சொல்லியிருக்காங்க.”
“வேடிக்கையா இருக்கே.”
“அத்தோட நறுமணப் பொருட்கள், ஆமை ஓடுகளைக் கிழக்குத் தீவுகள்ல இருந்தும், வைரங்கள், தந்தத்தை நாட்டின் வட பகுதியிலிருந்து வாங்கிய சோழ வணிகர்கள், யவனர்களிடம் அவற்றை மறுவிற்பனை செஞ்சிருக்காங்க.”
“ஓ, வாங்கி விக்கிறது பெரிய வேலையா நடந்திருக்கு”
“ஆமா. அது மட்டுமில்ல வைடூரியத்தையும் புகாரில்
இருந்து ஏற்றுமதி செஞ்சாங்க. யவனர்கள் வைடூரியத்தை அலங்காரக் கல்லாகவும் முத்திரைகளாகவும் பயன்படுத்தி யிருக்காங்க.”
“ஆமா, யவனர்கள் இவ்வளவு பொருட்களை வாங்கினாங்களே, அதற்குப் பதிலா எதைப் பரிமாற்றம் செஞ்சாங்க?”
“தங்கம்தான்.”
“அது மட்டுமில்ல, யவனர்கள் கப்பல்ல கொண்டுவந்த மது, பானைகள், கண்ணாடிப் பொருட்கள், அலங்கார விளக்குகள், மரப்பொருட்கள் போன்றவை இறக்குமதியும் ஆச்சு.”
“ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வர்த்தகர்கள் கொண்டுவந்த பொருட்களை மதிப்பிட்டு, அரசு ஊழியர்கள் அரச முத்திரையைப் பதிச்சாங்க. வாலைத் தூக்கிய வேங்கைப் புலிதான், அரச முத்திரை. சுங்க வரியும் வசூலிச்சாங்க.”
“சுங்கம், முத்திரையெல்லாம் இருக்கட்டும். யவனர்கள் வேற என்னவெல்லாம் கொண்டுவந்தாங்க”
“யவனர்கள் நல்லா கப்பல் கட்டுவாங்க. சோழர்களின் நீண்ட தொலைவுப் பயணங்களுக்குத் தேவைப்பட்ட பெரிய கப்பல்களை அவங்க கட்டினாங்க. இந்தக் கப்பல்களோட முனைகள் யானை, எருமை, கிளி, மயில் ஆகியவற்றின் தலையைப் போல இருந்தன.
இந்தக் கப்பல் எல்லாம் 200-க்கும் மேற்பட்டவங்க பயணிக்கக்கூடியதா இருந்துச்சு. அதோட அந்தக் கப்பல்கள்ல 500 வண்டி அளவுள்ள சரக்குகளையும் ஏத்தினாங்களாம்.”
“பெரிய கப்பல்களா இருந்தா, அவற்றை எப்படிக் கடல்ல செலுத்தினாங்க?”
“மிகப் பெரிய பாய்மரங்கள் மூலமாத்தான். காற்றுப் போக்குக்கு ஏற்ப பாய்மரங்கள் கப்பலைச் செலுத்தும். அதேநேரம் கடல் கொந்தளிப்போ புயலோ கப்பலைக் கவிழ்த்திடும். எல்லாத்தையும்விடக் கொடுமையானது, காத்து மொத்தமா அடங்கிப் போய், நடுக்கடல்ல கப்பல் சிக்கிக்கிறதுதான்.”
“ஓ, கப்பல் விடுறதுல இவ்ளோ பிரச்சினை இருக்கா குழலி?”
“அதேநேரம் சோழ மன்னர்கள் கடல் கண்காணிப்பாளர்களை வெச்சிருந்தாங்க. நடுக்கடல்ல சிக்கித் தத்தளிக்கும் கப்பல்களைக் காப்பாத்த, இந்தக் குழு தேவையான ஏற்பாடுகளை செய்யும். இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தாண்டி சோழக் கப்பல்கள், அரபிக் கப்பல்கள், யவனக் கப்பல்கள் ஏற்றுமதி-இறக்குமதிக்காக பெருங்கடல்களை காலம்காலமா கடந்துகிட்டுதான் இருந்துச்சு செழியன்.”
யாருக்கு உதவும்? போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம் |
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in