வெற்றிக்கொடி இணைப்பிதழில் ‘தேர்வுக்குத் தயாரா?’ என்ற தலைப்பின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை முந்தைய வாரங்களில் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊர்களில், மாணவர், ஆசிரியர், பெற்றோர், கல்வியாளர்களை நேரில் சந்தித்து,பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள், மாணவர்கள் அனுபவங்களைக் கேட்டறியும் முன்னோடி முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கும்பகோணத்தில் இதன்பொருட்டு கூடிய அமர்வில் பல்வேறு பயனுள்ள கருத்துக்களை மாணவர்-ஆசிரியர்-பெற்றோர் கூட்டாக வழங்கினர்.
இன்றிலிருந்து எப்படிப் படிக்கலாம்?
பிளஸ் 2 தேர்வுக்கு ஒரு மாதமே இருக்கும் சூழலில், குறைந்த கால அவகாசத்தில் இப்போது தொடங்கி எப்படிப் படிக்கலாம் என்பதில் உரையாடல் தொடங்கியது.
விலங்கியல் ஆசிரியரான மோகன், “புதிதாக எதையேனும் படிக்க வேண்டியிருந்தால் குறைந்த அவகாசத்தில் நிறைவாகப் படிக்கத் திட்டமிட வேண்டும். வினாக்களுக்கு உரிய விடைகளைப் படிப்பதற்கு முன்பாகப் பாடம் முழுமைக்கும் பலமுறை வாசிப்பது நல்லது. முதல்முறை முழுவதுமான வாசிப்பு, அடுத்த முறை முக்கிய கருத்துக்களை மட்டும் வாசிப்பது என மேற்கொள்ளலாம். வாசித்து முடித்ததும் முக்கிய கருத்துக்களை நினைவுகூர முயற்சிப்பதும், அவைகளுக்கு இடையிலான தொடர்புகளை நினைவுகூர்வதும் எளிதில் மனதில் தங்கச் செய்யும்” என்றார்.
இயற்பியல் ஆசிரியரான கணேஷ்பாபு, “அப்படிப் பாடங்களைப் படிக்கத் தொடங்கும்போது எளிமையான பாடத் தலைப்பை முதலில் படித்துவிட்டு மற்றத் தலைப்புகளுக்குச் செல்லலாம். விட்டுப்போன பாடப் பகுதிக்குத் தனியாக நேரம் ஒதுக்கி அதிலுள்ள சந்தேகங்கள், கடினத் தன்மையைத் தீர்த்துக்கொண்டு படிப்பதைத் தொடரலாம். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றுகளாகப் படிப்பதன் மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும்” என்றார்.
பிளஸ் 2 மாணவியான ஆர்.ரம்யா “மொழிப் பாடங்களை இரவிலும், கணக்கு போன்ற பாடங்களை அதிகாலையிலும் படிப்பேன். இரவில் சில நேரம் 8மணிக்கே உறங்கச் சென்று அதிகாலை 3 மணிக்கே எழுந்து படிப்பேன்” என்றார்.
பிளஸ் 2 முடித்து நீட் தேர்வுக்குத் தயாராகிவரும் லோகேஸ்வரி இதற்கு மாறான படிக்கும் முறையைக் கொண்டிருக்கிறார். “இரவில் கண்விழித்துப் படிப்பதும் அதை ஈடுகட்டக் காலையில் சற்றுக் கூடுதலாகத் தூங்குவதும் என்னுடைய பாணி. எப்போது தூங்குகிறோம், எப்போது விழிக்கிறோம் என்பது முக்கியமல்ல. விழித்திருக்கும் நேரத்தில் முழு ஈடுபாட்டுடன் படிக்கிறோமா என்பதுதான் முக்கியம்.
மாறாக அலுப்பும் உறக்கமும் அழுத்தும் வேளையில் வலுக்கட்டாயமாகப் படிக்கிறேன் என்று உட்கார்த்தால், அந்தப் பாடத்தின் மீதே வெறுப்பு வந்துவிடும். அடுத்துப் படிப்பதற்கான ஆர்வத்தையும் இந்த வறட்டு முயற்சிகள் பாதித்துவிடும். பொதுவாகச் சற்று ஆர்வம் குறைவாக இருக்கும்போது எளிமையான, விருப்பமான பாடங்களைப் படிக்கலாம். அதுவே உற்சாகமாக இருக்கும்போது கடினமான பாடங்களைப் படிக்கலாம்” என்றார்.
பள்ளி தாளாளர் மார்டின், “பாடக் கருத்துக்களை அதன் பயன்பாடு சார்ந்து புரிந்துகொண்டால் க்ரியேட்டிவ் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இருக்கும். பாடம் நடத்தும்போதே ஆசிரியர் அடையாளம் காட்டும் வரிகளை அடிக்கோடிட்டுக் குறித்துக்கொள்வதும் நல்லது” என்றார்.
பள்ளி முதல்வர் திலகம், “பாடங்களைப் படிக்கும்போது அருகிலேயே முக்கியக் குறிப்புகளை ஓரிரு வரிகளில் சுருக்கமாய்த் தனக்குப் புரியும் விதத்தில் எழுதிக்கொள்ளலாம். அதாவது இந்த ஒரு சில வரிகள் நினைவுக்கு வந்தாலே உரிய பாடப்பகுதிகள் நினைவுக்கு வருமாறு அமையும். இந்த முறையை முதல்முறை படிக்கும்போதே தொடங்கினால் அடுத்த திருப்புதல்களில் எளிதாகிவிடும்.
பாடங்களைப் படிப்பதற்கான நேரமும் தேர்வு நெருக்கத்தில் வேகமாகத் திருப்புதல் செய்யவும் இந்த முறை உதவும். முழு பாடத்தையும் மனவரைபடமாக வரைந்து கொண்டு அதன் அடிப்படையில் படிக்கலாம்.திருப்புதலின்போது இதைப் பார்த்தாலே போதும். அனைத்துப் பாடங்களுக்கும் இந்த யோசனை உதவும்”.
பிளஸ் 2 கணினி அறிவியல் படிக்கும் மாணவரான நவீன்குமார், “கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை பாடம் நடத்தும்போதே கவனித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வதும், சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக்கொள்வதும் உதவும். இயற்பியல் வேதியியல் பாடங்களில் எவ்வளவு பெரிய பாடமாக இருந்தாலும், பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்துப் பயப்படாது தலைப்புகளுக்கு ஏற்றவாறு அவற்றைப் பிரித்துப் படிக்கலாம்.
அப்படிப் படிக்கும்போதும் செயல்பாடுகள் அடிப்படையில் பாடப்பொருளை புரிந்துகொள்வது அவசியம். குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்குப் படிக்கும்போதே மற்ற மதிப்பெண் பகுதிகளுக்கு அந்த வினா எவ்வாறெல்லாம் கேட்கப்பட வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து படிக்கலாம். உதாரணத்துக்கு ஓர் ஐந்து மதிப்பெண் விடையைப் படிக்கும்போது அதில் கேட்கப்பட வாய்ப்புள்ள பல்வேறு ஒரு மதிப்பெண் வினாக்களை அடையாளம் கண்டவாறே செல்லலாம்” என்றார்.
உத்திகள் சில
அடுத்ததாகப் பாடங்களைப் படிப்பதற்கான உத்திகள் குறித்து அனைவரும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். இயற்பியல் ஆசிரியக் கணேஷ்பாபு,“இயற்பியலில் கணித வினாக்களைத் தீர்ப்பதில் சூத்திரங்களைப் படித்திருப்பதும், அவற்றைப் பிரதியெடுத்து தீர்ப்பதன் மூலமும் கணிசமான மதிப்பெண்களைப் பெறலாம். இந்த ஆர்வமே முழுமையாகக் கணித வினாக்களைத் தீர்க்க உதவும்” என்றார்.
மாணவி லோகேஸ்வரி, “வகுப்பில் தியரியாகப் படித்ததை, வீடியோவில் பிராக்டிகலாகப் பார்க்கும் வசதியை எங்கள் பள்ளியிலேயே செய்து வைத்திருக்கிறார்கள். வகுப்பில் பாடம் முடிந்த சூட்டில் வீடியோவை ஓட விட்டு ஆசிரியர் விளக்குவார். இதனால் பாடங்கள் மனதில் ஆழப்பதிந்துவிடும்.மேலும் சந்தேகங்கள் எழுந்தால் அந்த வீடியோ அல்லது ஆன்லைனில் கிடைக்கும் பாடம் தொடர்பான வீடியோக்கள் மூலமாக விளக்கம் பெறுவோம்.இதன் மூலம் பாடப்பொருள் முழுமையாக விளங்கிவிடும். அதன் பின்னர்ப் படிப்பதும் படித்ததைத் தேர்வில் எழுதுவதும் சுமையாக இருக்காது” என்றார்.
இதையே வலியுறுத்திய ஆசிரியர் ரெமோ சைனி, “பாடங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்களுக்கு அப்பால் அவற்றை முப்பரிமாணப் பொருட்களாகவோ, அனிமேஷன் வீடியோவாகவோ பார்ப்பது பாடக்கருத்துக்களை புரிந்துகொள்ளவும், அவை மனதில் தங்கவும் பெருதும் உதவும். ஆன்லைனில் இதற்கெனக் கிடைக்கும் ஏராளமான அனிமேஷன் வீடியோக்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றார்.
வேதியியல் ஆசிரியரான கௌசல்யா, “புரிந்து படிப்பது அவசியம். எதுவுமேபுரியாத அல்லது கடினமான பாடத் தலைப்புகளைக் கதையாகப் படிக்கலாம்.தனக்கு விருப்பமான வகையில் கதையாக நினைவுகொள்ளவும் அதையே தேர்வில் உரிய பாடக் குறிப்புகளாக எழுதுவதவும் செய்யலாம். வேதியியல் சமன்பாடுகளைப் படிப்பதில் தடுமாறும் மாணவர்கள், பயன்பாடுகள் சார்ந்து அவற்றை ஒப்பிட்டுப் படிப்பதன் மூலம் இந்தச் சிரமத்தைக் கடந்துவிடலாம்”என்றார்.
பள்ளி முதல்வரான திலகம், “மாணவர்கள் பாடக் கருத்துக்களைப் புரிந்துகொண்ட திறனைச் சோதிப்பதாகவே புதிய வினாத்தாள் மாதிரி அமைந்துள்ளது. எனவே பாடத்தை வெறுமனே படிப்பது, மனப்பாடம் செய்வது கூடாது. மனவரைபடம் போன்ற உதவிகளுடன் படிக்கும்போது பாடக்கருத்துக்களை நன்றாகப் புரிந்துகொள்வதுடன், தேர்வு எழுதும்போது தடையின்றி அவற்றை நினைவுகூர முடியும்.
முக்கியமான கூற்றுகள்,வருடங்கள், இடங்கள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை ஓர் அட்டவணையாகத் தாளில் எழுதி வகுப்பறையிலும், வீட்டிலும் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்தால் நம்மை அறியாது தாமாகத் திருப்புதல் நடந்துகொண்டிருக்கும்”என்றார்.
பள்ளி முதல்வரும் இயற்பியல் பாட ஆசிரியருமான பி.சுசீலா “பாடத்தில் உள்ள ஒத்த பாடத்தலைப்புகளை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் படிப்பது ஒரு சிறப்பான உத்தி. இதன்மூலம் குறிப்பிட்ட 2 பாடத்தலைப்புகளையும் விரைவாகவும்,விரிவாகவும் மாணவனால் படித்துவிட முடியும். தேர்வில் வினாக்களைச் சற்றே மாற்றிக் கேட்டாலும் சிரமமின்றிப் பதிலளித்து விடலாம். இந்தத் தயாரிப்பு பொதுத்தேர்வுக்கு அப்பால் நுழைவுத் தேர்வுக்கும் கைகொடுக்கும்.பாடம் நடத்தும்போதே ஆசிரியர் சில வரிகளை அல்லது வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை அடிக்கோடிடச் சொல்லுவார்.
அப்படியான முக்கிய பாயிண்டுகளை மறக்காது தேர்வில் பயன்படுத்த வேண்டும். இந்தத் தயாரிப்பு க்ரியேட்டிவ் வினாக்களுக்குப் பதிலளிக்கவும் உதவும்.விடைத் தாளில் குறிப்பிட்ட முக்கிய வார்த்தைகளை அடையாளம் கண்டதும் ஆசிரியர் மதிப்பெண் வழங்கிவிடுவார். கீ வேர்ட்ஸ் எனப்படும் முக்கியமான இந்த வார்த்தைகள் இல்லாது பாடக்கருத்துக்களை எப்படி நீட்டி வளைத்து எழுதினாலும் முழு மதிப்பெண் கிடைக்காது.
இந்த ’கீ வேர்ட்ஸ்’ என்பவை பாடநூலின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வினாவுக்கான விடையிலும் இருப்பதை அடையாளம் கண்டு அடிக்கோடிட்டுப் படித்துக்கொள்ள வேண்டும்.தேர்வில் இந்த வார்த்தைகளைச் சரியான வாக்கிய அமைப்பிலிட்டு எழுதினால் மதிப்பெண் பெற்றுவிடலாம்” என்றார்.
’பாடத்திட்டம் பழையது, வினாத்தாள் மாதிரிப் புதியது’ எனக் கலவையான பொதுத் தேர்வினை இவ்வருடப் பிளஸ் 2 மாணவர்கள் எதிர்கொள்ள இருக்கிறார்கள். முந்தைய ஆண்டுகளைப் போலப் புளுபிரிண்ட் அடிப்படையில் புதிய வினாத்தாள் மாதிரி இல்லை என்பது சுமாராகப் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்.
இதற்குப் பள்ளி ஆசிரியையான ரெமோ ஷைனி ஒரு முன்யோசனையை வழங்கினார். ”பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்பதால், அதற்கான புளுபிரிண்ட் திட்டமிடலையே மாணவர்கள் பின்பற்றலாம். இந்த யோசனை சராசரி மற்றும் தேர்ச்சி குறித்த கவலை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உதவும். இந்த வகையில் முக்கியமான வினாக்கள் மற்றும் பாடப்பகுதிகளைக் குறிவைத்து அவர்களால் படித்துவிட முடியும். உச்ச மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆலோசனை உதவாது
.அதேபோன்று அடுத்த வருடம் புதிய பாடத்திட்டம் அமலாகும்போதும் இந்த யோசனை கைகொடுக்காது” என்றார்.
மாணவி ரம்யா, “பாடக்கருத்துக்களை நினைவில் பதிந்துகொள்ள ஃபன்னி மேப்பிங் (Funny Mapping) எனப்படும் விளையாட்டு முறையை எங்கள் வகுப்பில் பின்பற்றுகிறோம். இது ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த வகையில் பாடக் கருத்துக்களைச் சிரமமின்றிப் படிக்கவும், தேர்வில் எழுதவும் உதவுகிறது.”என்றார்.
மாணவர் நவீன்குமார் ”கடினமான பெயர்களை நிமோனிக்ஸ் (Mnemonics)முறையில் நினைவில் பதிந்துகொண்டால் தடுமாற்றமின்றித் தேர்வெழுத முடியும். படிப்பதை உடனுக்குடன் எழுதிப் பார்ப்பது நல்லது. அதேநேரம் படித்ததை முழுக்க எழுதிப் பார்த்தோமேயானால் அதிக நேரத்தை விழுங்கும்.முக்கியமான கருத்துக்கள், வரையறைகள், விதிகள், சூத்திரங்கள், சமன்பாடுகள் ஆகியவற்றை மட்டுமே எழுதிப் பார்த்தவாறே முழு பாடப்பகுதியையும் விரைவாக நினைவுகூரலாம்.
இதுவே கணிதப் பாடமெனில், ஒரு பயிற்சியில்10 கணக்குகள் இருந்தால் அதில் ஒரே மாதிரியான கணக்குகளில் ஒன்றிரண்டை மட்டும் போட்டுப் பார்த்தால் போதும். மற்றக் கணக்குகளில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் மட்டும் அவற்றைத் தனியாகச் செய்து பார்க்கலாம்” என்றார்.
குடும்பத்தினர் பங்கு முக்கியமானது
மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதில் அவர்களுக்கு நிகராகக் குடும்பத்தினரின்பங்கும் முக்கியமானது. இந்த வகையில் மாணவி ரம்யாவுக்கு உதவுவது குறித்து அவரது தாயார் கலைச்செல்வி கூறும்போது, “பொண்ணு படிக்கும்போது கூடவே கண் விழித்திருப்பேன். காலையில் அவள் 5 மணிக்கு எழ வேண்டுமானால் 4 மணிக்கே நான் எழுந்துவிடுவேன். உடைகள், புத்தகங்கள்,எழுதுப்பொருட்கள் எடுத்து வைப்பது போன்றவை முன்கூட்டியே எடுத்து வைத்திருப்பேன்.
தேர்வுக்கு முன்பாக மன அழுத்தம் தரும்படி எதுவும் பேச மாட்டேன். மகள் மனம் சோர்ந்திருந்தால் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டேன். அந்தச் சமயங்களில் அழைத்துப் பொதுவாகவும், மன மாற்றம் தரும் விஷயங்களையும் பேசுவேன். அவளாக முன்வந்து தன்னுடைய சங்கடம் அல்லது தடுமாற்றங்களை இறக்கிவைக்கும் வரை இந்தப் போக்கு தொடரும்.அதன் பின்னர் உற்சாகமூட்டிப் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவேன்”என்றார்.
பள்ளி தாளாளரான எஸ்.எம்.மார்டின் “பிள்ளைகளைக் குறை சொல்லாது அவர்களைப் புரிந்துகொள்ளப் பெற்றோர் முயல வேண்டும். பெற்றோரின் அரவணைப்பும் நிதானமான அணுகுமுறையும் மாணவர்களை யோசிக்க வைக்கும். தேர்வு நெருக்கத்தில் பிள்ளைகளின் தவறுகளைப் பெரிதுபடுத்தக் கூடாது. குத்திக்காட்டுவது, மற்ற மாணவருடன் ஒப்பிட்டுப் பேசுவது கூடாது.சாப்பாடு தூக்கம் ஆகியவற்றைச் சீராக அமைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழலைப் பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும்” என்றார்.
தேர்வு நெருக்கத்தில்
மாணவி லோகேஸ்வரி, “தேர்வு நெருக்கத்தில் மிகவும் கவனமாக இருப்பேன்.தேர்வுக்கு முன்பாகப் புதிதாக எதையும் படிக்கக் கூடாது. ஏற்கனவே படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் திருப்புதல் செய்வேன். தேர்வு சமயத்தில்தான் மாணவர்கள் மத்தியில் குழப்பம், அச்சம் ஏற்படுத்தும் வதந்திகள் திடீரென முளைக்கும். அதற்கு எல்லாம் காதுகொடுக்கக் கூடாது” என்று எச்சரித்தார்.
பள்ளி முதல்வர் திலகம் “தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு டீ, காபியை தவிர்ப்பது அவசியம். அதற்கு பதிலாக மூளைக்குத் தேவையான ஆக்சிஜனை அதிகம் வழங்கும் தண்ணீரை தேவையான அளவு அருந்தச் சொல்லுவோம்.எப்போதும் படிப்பு படிப்பு என்று இருப்பது மன அழுத்தம் தரும். வீட்டில் இருப்போருடன் சற்று நேரம் மனம் விட்டு பேசலாம்.
டிவி பார்ப்பதென்றால் செய்தி மட்டும் பார்க்கலாம். கைகால்களை அசைத்து ஏதேனும் விளையாடலாம். சிறு நடை பயிலலாம். சக மாணவர்களுடன் சேர்ந்து பாடத் தலைப்புகளை விவாதிப்பது, செமினார் போன்று பேசுவது, குழுவாக அமர்ந்து ஆளுக்கொரு பாயிண்ட் வரிசையாக சொல்லுவது என சகஜமாகலாம்” என்றார்.