உன்னதமான நட்பு என்று நம்பிக் கொண்டிருந்த ஒரு உறவு நமக்குக் கேடு விளைவித்துக் கொண்டிக்கிறது என்று உணரும் தருணம் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அத்தகைய கசப்பான உண்மையை எதிர்கொள்ளும் கணங்கள் வலி நிறைந்தவை. நட்பின் வாசத்தில் திளைத்துக்கிடக்கும் மனம் அதிலிருந்து விடுபட அனுமதிக்காது. ஆனாலும், வலியைப் பொறுத்துக்கொண்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை.
நட்பு என்பதற்கான அளவுகோல் நபருக்கு நபர் வேறுபடும். ‘நல்ல நண்பர்’ என்பதற்கு நீங்கள் தரும் விளக்கம் உங்களுடைய நண்பருக்குப் பொருந்துமா என்று பாருங்கள். நேர்மையாக இருங்கள். உங்களுக்கு என்ன தேவை என்பதை நண்பரிடம் வெளிப்படையாகத் தெரிவியுங்கள். மனம் விட்டுப் பேசினாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்துவிடும். ஆனால், அத்தகைய தருணத்திலும் தன் மனத்தில்பட்டதை வெளிப்படுத்த உங்களுடைய நண்பர் மறுத்தால் அதுவே உங்களுக்கான முதல் சமிக்ஞை.
சோர்வடையச் செய்கிறதா?
சின்னஞ்சிறு கதைகள் பேசி, எந்நேரமும் எதிர்மறையான சிந்தனையை வெளிப்படுத்தி உங்களைச் சோர்வடையச் செய்யும் நட்பு சந்தேகத்துக்கே இடமின்றிக் கூடா நட்பே. எதற்கெடுத்தாலும் ஆதாயம் தேடுபவர் தீயவரே. தனக்குத் தேவை ஏற்படும்போது மட்டுமே உங்களை நாடுபவர் நண்பராக இருக்க முடியாது. உங்களுக்குத் தேவை ஏற்படும்போது நேரம் செலவழிக்க மறுப்பவர் உங்களுடைய நண்பராக நீடிக்கத் தேவை இல்லை என்பதை உணருங்கள்.
உங்கள் நலன் மீது அக்கறை கொண்ட நண்பரானால் உங்களுடைய பிரச்சினை எதுவாயினும் காதுகொடுத்துக் கேட்பார், உங்களுக்காக நேரம் ஒதுக்குவார், உங்களுடன் துணை நிற்பார்.
உறவு சமநிலையில் உள்ளதா?
ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடித்தல் நட்பில் சமநிலை நீடிக்க அவசியம். அப்படி இல்லாவிடில் ஒருவர் மட்டும் ஒட்டுண்ணிபோல உங்கள் மீதே படர்ந்து ரத்தத்தை உறிந்துகொண்டிருப்பார்.
போகட்டும் விடுங்கள்
உறவுகள் சிக்கலானவை. அதிலிருந்து பிரிவதென்பது ஒருபோதும் எளிதல்ல. ஆனால், நம்முடைய வாழ்க்கையை நாம் உயிர்ப்போடும் சுதந்திரமாகவும் வாழ வேண்டுமானால் சில நேரம் பிரிவு அவசியம். சேர்ந்திருப்பது வலுக்கட்டாயமாகும்போது பிரிந்து செல்வது விடுதலையாக மாறுகிறது.
இனியும் இந்த நட்பில் நீடிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை நோக்கிய உணர்ச்சிப் போராட்டம் வலி மிகுந்ததே. ஆனால், வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் யாவுமே ஒருவிதமான அசெளகரியத்தை உண்டுபண்ணவே செய்யும். அத்தகைய மாற்றங்களை அனுமதிப்பதே வளர்ச்சிக்கான புதிய பாதை.
யாருடைய தவறும் இல்லை!
எவ்வளவு முயன்றும் உறவுகள் சிலநேரம் தோற்பதுண்டு. அத்தகைய சூழலில் நட்பை முறித்துக்கொள்வதற்குப் பதிலாகக் கசப்புணர்வு ஏதுமின்றி நல்லபடியும் பிரிந்து செல்லலாம்.
கதவைத் திறந்து வையுங்கள்
ஒரு முறை நட்பு தோற்றுப்போனதாலேயே நட்புகொள்வதையே சந்தேகிக்க வேண்டாம். புதிய உறவுகளையும் நண்பர்களையும் உங்களுடைய வாழ்க்கையில் வரவேற்க மனத்தின் கதவைத் திறந்து வையுங்கள்.
‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை, பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C. ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம், |
தொகுப்பு: ம. சுசித்ரா
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.