தொழிலாளர்களின் மனநலன், உடல்நலன் மற்றும் சமூகநலன் ஆகியவற்றை சிறப்பாக பேணுவதும் மேம்படுத்துவதும் உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) முக்கிய குறிக்கோள். அதனால் அபாயகரமான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் நலன்களை பேணிக் காப்பதற்காக தொழிற்சாலைகளில் தொழில்வழி சுகாதார மையங்களை அமைத்து அவற்றில் மருத்துவ அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பது தற்கால நடைமுறையாகி உள்ளது.
தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிகளின் படி தொழில்வழி உடல்நலனில் சிறப்பு கல்வி தகுதிப் பெற்ற மருத்துவ அலுவலர்களை அபாயகரமான தொழிற்சாலைகளில் உள்ள தொழில்வழி சுகாதார மையங்களில் நியமிக்க வேண்டும். அதன்படி, தொழில் வளர்ச்சி மேம்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் அதிக அளவில் தகுதிவாய்ந்த மருத்துவ அலுவலர்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு, டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை கழகத்தில் தொழில்வழி சுகாதாரத்தில் முதுகலை பட்டயப்படிப்பினை நடத்த அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் தொழில்வழி சுகாதாரத்தில் 3 மாத சான்றிதழ் பயிற்சிவகுப்பினை நடத்தவும் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.